டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தித்திக்கும் சர்க்கரை பொம்மைகள்!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்று சர்க்கரை பொம்மைகளும் பிரபலம். இதை சர்க்கரை அச்சு பொம்மை என்றும், சீனி மிட்டாய் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

News image
பல்வேறு வடிவங்களில் சர்க்கரை பொம்மைகள்.
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

தினமணி

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்று சர்க்கரை பொம்மைகளும் பிரபலம். இதை சர்க்கரை அச்சு பொம்மை என்றும், சீனி மிட்டாய் எனவும் அழைக்கப்படுவதுண்டு. சர்க்கரைப் பாகில் செய்யப்படும் இந்த பொம்மைக்கு தஞ்சாவூரில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

தஞ்சாவூரை 17 ஆம் நூற்றாண்டில் மராத்தியர்கள் கைப்பற்றியபோது, அந்த சமூகத்தினரும் இங்கு குடியேறினர். அப்போது, அவர்களுடன் அரங்கேறிய உணவு கலாசாரத்தில் சர்க்கரை பொம்மைகளும் ஒன்று. தமிழர்களின் பண்டிகைகளில் முறுக்கு, அதிரசம் முக்கிய பங்கு வகிப்பதுபோல, மராத்தியர்களின் சுப நிகழ்ச்சிகள், நீத்தாருக்கு படைக்கும் படையல்களிலும் இந்த சர்க்கரை பொம்மைகள் முதன்மையாக இடம்பெறுகிறது.

மராட்டிய மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு 4 வகையான மணிகளை கழுத்தில் அணிவிப்பது வழக்கம். அதில் இந்த சர்க்கரை மணி பொம்மையும் ஒன்று. எனவே, பிறப்பு முதல் இறப்பு வரை இந்த சர்க்கரை பொம்மை இடம்பெறுகிறது. 

Story image

தஞ்சாவூரில் முன்பு நான்கைந்து குடும்பங்கள் செய்து வந்த இந்த சர்க்கரை பொம்மைகளை இப்போது அய்யங்கடைத் தெருவிலுள்ள பஜார் ராமர் கோயில் பகுதியில் வசிக்கும் ஒரேயொரு குடும்பம் மட்டுமே செய்து வருகிறது. ஏழாவது தலைமுறையாக சர்க்கரை பொம்மைகளைச் செய்து வரும் பி. நளினி பாய் தெரிவித்தது:

இந்த சர்க்கரை பொம்மை மிட்டாய்களை எங்களது பாட்டிக்கு பாட்டி காலம் முதல் 300 ஆண்டுகளாக செய்து வருகிறோம். மராத்தியர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு சீர் செய்யும்போது இந்த சர்க்கரை பொம்மை நிச்சயமாக இடம்பெறும். சீர் வரிசையுடன் சர்க்கரை பொம்மைகளில் செய்யப்பட்ட 5 சட்டிகள், 5 பானைகள், 5 தெய்வ உருவங்கள் வைத்து வழங்கப்படும். சீர் வரிசையில் மற்ற பொருள்கள் இல்லாவிட்டாலும்கூட, சர்க்கரை பொம்மை மிக அவசியமாக எதிர்பார்க்கப்படும்.

எனவே, பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை பொம்மைகளின் உற்பத்தியும், விற்பனையும் உச்சத்தை எட்டும். அப்போது எங்களால் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க முடியாத அளவுக்கு ஆர்டர்கள் வரும். இதேபோல, தீபாவளி பண்டிகையின்போது சீர் வரிசை செய்பவர்கள் இந்த சர்க்கரை பொம்மைகளையும் வைக்கின்றனர். என்றாலும், பொங்கல் பண்டிகை அளவுக்கு தீபாவளி காலத்தில் விற்பனை இருக்காது. 

பல்வேறு வடிவங்களில் சர்க்கரை பொம்மைகள்.

பல்வேறு வடிவங்களில் சர்க்கரை பொம்மைகள்.

தவிர திருமணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகள், நினைவு நாள் நிகழ்வுகள், இறந்தோருக்கு 16 ஆம் நாள் படையல் போன்றவற்றிலும் இந்த சர்க்கரை பொம்மை அவசியம் இடம்பெறுகிறது. இப்போது, மராத்தியர்கள் மட்டுமல்லாமல், தமிழர்களும் சுப மற்றும் நினைவு நாள்களுக்கு ஆர்டர் கொடுத்து செய்து வாங்கிச் செல்கின்றனர். எனவே, தஞ்சாவூரிலிருந்து மட்டுமல்லாமல், கும்பகோணம், மயிலாடுதுறை, கோவை போன்ற பல்வேறு இடங்களிலிருந்து ஆர்டர்கள் வருகின்றன.

ஆர்டர்கள் கொடுப்பவர்கள் விரும்பிக் கேட்கும் வடிவங்களில் இந்த சர்க்கரை பொம்மைகளை செய்து கொடுக்கிறோம். முருகன், விநாயகர், சரஸ்வதி, நடராஜர், ராஜராஜ சோழன், திருமணக் கோலத்தில் மாப்பிள்ளை, மணப்பெண், காந்தி, நேரு மற்றும் தேங்காய், வாழைப்பழம், அன்னாசிப்பழம், பொங்கல் பானை, கிண்ணம், தேர், மண்டபம், குத்துவிளக்கு, யானை என விருப்பத்துக்கு ஏற்பவும், விசேஷங்களுக்கு தகுந்தாற்போலவும் சர்க்கரை பொம்மைகளைச் செய்து கொடுக்கிறோம். இதற்கென அந்த காலத்தில் தேக்கு, கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட அச்சுகள் உள்ளன. 

முதலில் சர்க்கரையை பாகு போல் காய்ச்ச வேண்டும். அதற்கு செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் "டோலி' என்ற பண்டைய கால பாத்திரத்தில் ஊற்றி அதை மர அச்சில் ஏற்ற வேண்டும். அடுத்த 15 நமிடங்களில் சர்க்கரை பொம்மை தயாராகிவிடும். உலர்ந்த பிறகு அதற்கு வண்ணம் பூசுவோம். ஒரு கிலோ சர்க்கரை பொம்மையை 400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
நான்கு கிலோ சர்க்கரையைப் பயன்படுத்தினால், ஒரு கிலோ அளவுக்குதான் சர்க்கரை பொம்மைகளைச் செய்ய முடியும். இதுவும் அச்சில் சரியான அளவுக்கு ஊற்றினால்தான் பொம்மைகளாக உருப்பெறும். செய்யும்போது உடைந்துவிட்டால் அதை விற்க முடியாது.

எனவே, இந்த சர்க்கரை பொம்மை மூலமாக பெரிய வருமானம் கிடையாது. பல நாள்களில் செலவுக்கு ஏற்ற வரவு கிடைப்பதே சந்தேகம்தான். என்றாலும், பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்கிற திருப்தி இருக்கிறது. இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.

இந்த சர்க்கரை பொம்மையைச் செய்வதற்காக நாங்கள் பயன்படுத்தி வரும் அச்சு, தாத்தா காலத்தில் செய்யப்பட்டது. அதுவும் தேய்ந்து வருவதால், புதிதாக வாங்க முயற்சி செய்கிறோம். அதற்கு ஏறத்தாழ ரூ. 30 ஆயிரம் தேவைப்படுகிறது. இந்த அச்சுக்கான மரம் அரிதானது என்பதால், மராட்டிய மாநிலத்தில் ஆண்டுக்கு ஒருதடவை கூடும் சந்தையில் மட்டுமே கிடைக்கும். ஆனால், ஏற்கெனவே வரவுக்கு செலவுக்கும் இடையே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், அதை எங்களால் வாங்க முடியவில்லை. யாராவது உதவி செய்தாலோ, வங்கிக் கடனுதவி கிடைத்தாலோ, இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்றார் நளினி பாய். 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.