டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாரம்பரிய பலகாரங்கள் உடலுக்கு பலம்!

வணிக நோக்கத்துக்காக கவர்ச்சியாகவும், வேலை குறைவாகவும் இருப்பதால் நவீன பலகாரங்கள் பிரபலமடைந்து பாரம்பரிய பலகாரங்கள் மறைந்து நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. 

News image
கொள்ளு லட்டு
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

தினமணி

நவீன பலகாரங்கள் எண்ணெயில் பொரிக்கப்படுகிறது. குறிப்பாக, பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் பொரிப்பதுதான் மிக அதிகமாக இருக்கிறது. வணிக நோக்கத்துக்காக கவர்ச்சியாகவும், அதே நேரத்தில் வேலை குறைவாகவும் இருப்பதால் நவீன பலகாரங்கள் பிரபலமடைந்துவிட்டன.

இதன் காரணமாக பாரம்பரிய பலகாரங்கள் மறைந்து நவீன வகை பலகாரங்கள் கோலோச்சுவதால், வீட்டுக்கு வீடு இதய நோயாளி, அதிக ரத்த அழுத்தம், சொரியாசிஸ் என்கிற தோல் நோய், பார்வை குறைபாடு என நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

ஆனால், தமிழர்களுடைய மரபில் எண்ணெய் பலகாரம் இல்லை. ஆடிப்பெருக்கு திருநாளில் முறுக்கு, அதிரசம், நெய் உருண்டை, பொரி விளங்காய் உருண்டை போன்றவைதான் செய்யப்படும். இவைதான் அக்காலத்தில் கிட்டத்தட்ட பெரிய பலகாரங்களாக இருந்தன. இவற்றை செய்வதற்கும் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவைதான் பயன்படுத்தப்பட்டன. 

நிலக்கடலை லட்டு

நிலக்கடலை லட்டு

நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய்யும், புன்செய் பகுதியில் எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய், கடலையிலிருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய்யும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் உடல் வெப்பத்துக்கு ஏற்ப இருக்கும். எனவே, இந்த எண்ணெய்கள் உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகம் என்பதால், முறுக்கு, அதிரசம், எள்ளடை போன்ற பலகாரங்கள் செய்யப்படும்.

உளுந்து ஆகச் சிறந்த உணவு என்பதால் நெய் உருண்டை, உளுந்தங் கஞ்சி, பச்சைப் பயறிலிருந்து நெய் உருண்டை போன்றவை செய்யப்படுவதும் வழக்கம். இதேபோல, வரகு, கேழ்வரகு போன்ற தானியங்களில் முறுக்கு, அதிரசம் செய்யும் பழக்கமும் இருந்தது.

தற்போது கருப்பு கவுனி அரிசியில் அல்வா, முறுக்கு, பச்சைப் பயறு கலந்து லட்டு போன்றவை செய்யப்படுகின்றன. கம்பு, பச்சைப் பயறு, வரகு, கருப்பு கவுனி போன்ற தானியங்களில் செய்யப்படும் நெய் உருண்டைதான் இப்போது லட்டு என அழைக்கப்படுகிறது.

இந்த நெய் உருண்டைக்கு கம்பு தானியத்தை ஊற வைத்து, முளைக்கட்டி உலர்த்தப்படும். நன்கு உலர்ந்த பிறகு அடுப்பில் வறுக்கப்படும். இதனுடன் சுவைக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக உருட்டப்படும். இதே முறையில்தான் பச்சைப்பயறு, வரகு, கருப்பு கவுனி, கொள்ளு, குதிரை வாலி, நவதானியம், நிலக்கடலை போன்றவற்றிலும் லட்டு செய்யப்படுகிறது. 

குதிரைவாலி லட்டு

குதிரைவாலி லட்டு

நெய்யைப் பொருத்தவரை பசுந்நெய் மட்டுமல்லாமல், எருமை நெய்யையும் பயன்படுத்தலாம். மருத நிலத்து கால்நடை மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கான குறியீடாகவும் எருமை திகழ்கிறது. இதுவும் கரையக்கூடிய கொழுப்பாக இருப்பதால் சமையலுக்கு உகந்தது. மரபு வழி மருத்துவத்திலும் எருமை நெய் ஊக்கப்படுத்தப்படுகிறது என்பதால், இதையும் பயன்படுத்துவது தவறல்ல.
பூந்தி செய்வதாக இருந்தால் கடலை மாவுக்குப் பதில் கம்பு அல்லது கேழ்வரகு அல்லது கருப்பு கவுனி அல்லது மற்ற தானியங்களை தண்ணீரில் கரைத்து, கடலை எண்ணெயில் பொரிக்கலாம். பலகாரத்தைப் பொருத்தவரை இலுப்பை எண்ணெய் சிறந்தது.

நிலக்கடலையைத் தோல் நீக்கி வறுத்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சர்க்கரையைச் சேர்த்து, உரலில் இட்டு இடித்து உருண்டை பிடித்தால், கடலை இடி உருண்டை பலகாரம் தயாராகிவிடும்.

இதுபோன்ற பாரம்பரிய பலகாரங்களால் எந்த நோயும் வராது. நோயின்றி வாழலாம். கம்பு, கேழ்வரகு, வரகு போன்றவை கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடியது. கொள்ளு தானியத்தைப் பொருத்தவரை கெட்ட கொழுப்பைக் கரைக்ககூடியது என்பதால், குதிரைக்கு கொடுக்கப்படுகிறது. அதனால்தான் குதிரையின் உடல் பளபளப்பாக இருக்கிறது. இதேபோல, கொள்ளு சாப்பிட்டால் நம்முடைய உடலும் பளபளப்பாக இருக்கும்.  இந்த கொள்ளு தானியத்தில் லட்டு செய்யலாம்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வரகு கெட்டுப் போகாது. அதனால்தான் கோயில் குடமுழுக்கு விழாவின்போது கலசங்களில் வரகு தானியம் நிரப்பப்படுகிறது. அதுபோன்ற தன்மையுடைய வரகு தானியமும் நம் உடலுக்கு சிறந்தது. வெள்ளை உளுந்தில் ஜிலேபி செய்வது வழக்கம். இதேபோல, கருப்பு உளுந்திலும் தோல் நீக்காமல் ஜிலேபி செய்யலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது என்றார் தஞ்சாவூர் ராமு அடிசில் முனையம் செம்மலர்.

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.