இந்திய கம்யூனிஸ்ட் போன்று அல்லாமல் மத்தியில் எந்தவொரு கூட்டணியில் இணைவதையும் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் தவிர்த்து வருகிறது. இந்தக் கொள்கையை மார்க்சிஸ்ட் இப்போது மாற்றியிருக்கிறதா?
மத்தியில் ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றுவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் இப்போதைய பிரதான நோக்கம். அதற்காகத்தான் மாற்று அரசை ஆதரிப்போம் என இடதுசாரி கட்சிகள் எப்போதும் கூறி வருகின்றன. நாங்கள் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். 1996 அல்லது 2004 என முந்தைய காலகட்டங்களிலும் இதே கொள்கையைத்தான் கடைப்பிடித்துள்ளோம். அதையும் தாண்டி தவிர்க்க இயலாத சூழல் உருவாகிறபோது, கட்சி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அன்றைய சூழல்தான் தீர்மானிக்கும்.
இடதுசாரி கட்சிகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தனித்தனி கட்சிகளாகவே இருக்கப்போகிறீர்கள்? எப்போது ஒன்றிணைந்து வலுவான ஒரே இடதுசாரி கட்சியாக உருவெடுக்கப்போகிறீர்கள்?
இடதுசாரி கட்சிகளின் பழைய வரலாற்றிலேயே அதற்கான காரணங்களும் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது ஒன்றிணைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. நேபாளத்தில் முயற்சித்ததுபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலர்கள் கைகுலுக்கி, நாம் ஒன்றிணைந்துவிட்டோம் என அறிவிக்க வேண்டும். ஆனால், நேபாளத்தில் அது பலனளிக்கவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சியில் கீழிருந்து ஒற்றுமையை ஏற்படுத்த இயலவில்லையெனில், மேலிருந்து எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை. இரண்டாவது வாய்ப்பு என்பது, கூட்டு முயற்சிகள் மூலமாக கட்சிகளின் கீழ்நிலையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது. இதுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய சபைகள், தொழிலாளர் சங்கங்கள் இதற்காக ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். அதன்மூலம் கீழ்நிலையில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. இது முழுமை பெற சில காலம் ஆகும். தானாக எதுவும் நடந்துவிடாது.
கடந்த நூற்றாண்டில் காங்கிரஸ் குடும்ப ஆட்சியை எதிர்ப்பதில் இடதுசாரிகள் முன்னணியில் இருந்தனர். இப்போது காங்கிரஸ் மட்டுமின்றி, பெரும்பாலான மாநிலக் கட்சிகளும் குடும்ப ஆட்சியை நடத்தி வருகின்றன. இடதுசாரி கட்சிகள் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. இது முரணாகத் தெரியவில்லையா?
பரம்பரைச் சொத்து போன்று ஆட்சி செய்வது என்பது துரதிருஷ்டவசமானது. குடும்ப அரசியல் என்பது நிலப்பிரபுத்துவ நடைமுறை போன்றது. இது ஜனநாயக அரசியலுக்கான வழியாகாது. ஒரு தலைவரின் மகன் உண்மையான திறனை வளர்த்துக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை அரசியல் வாரிசாக அடையாளப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட (இடபிள்யுஎஸ்) பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதுதொடர்பான நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி ஏன் தெரிவிக்கவில்லை?
இடபிள்யுஎஸ் விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவித ரகசியமும் கிடையாது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டபோதும்கூட, ஜாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யக் கூடாது. மாறாக, பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்தது. கேரளத்திலும் இதைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதற்காக, அந்தச் சமயத்தில் இடதுசாரி கட்சிகளுக்குள்ளேயே நாங்கள் ஓரங்கட்டப்பட்டோம். அப்போது உச்சநீதிமன்றம்தான் "கிரீமி லேயர்' சமூகத்தில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தவர்கள் என்பதற்கான விளக்கத்தை அளித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தை ஆமோதித்தது. அதன் மூலமாகவே, இடஒதுக்கீட்டில் பொருளாதார நிலையும் கணக்கில் கொள்ளப்பட்டது.