சோமாலியாவின் கடும் பஞ்சத்தில் குழந்தைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருந்த போது அதைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆவணப்படம் எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் புகைப்படக் கலைஞர் ஒருவர் அங்கு சென்றார். உலகின் மிகப்பிரசித்தி பெற்ற புகைப்படம் அது. ஒரு குழந்தை பசியாலும், பஞ்சத்தாலும் உருக்குலைந்து உயிருக்குப் போராடி சாகும் தறுவாயில் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் கடைசி நொடி அது... குழந்தை எப்போதடா செத்து விழும், அதை தனது பசிக்கு இரையாக்கிக் கொள்ளலாம் என்று குழந்தைக்கு அருகிலேயே காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகு ஒன்று. இந்தக் காட்சியுடன் கூடிய புகைப்படத்தை நீங்களும் கண்டிருக்கலாம். அந்தப் புகைப்படத்துக்கு விருதெல்லாம் கிடைத்தது. ஆனால், புகைப்படத்தை எடுத்த கலைஞர் சில ஆண்டுகளில் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார். காரணம், ஒரு குழந்தை பசிக்கொடுமையில் துவண்டு உணவற்ற அவலத்தில் மெலிந்து உருக்குலைந்து மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மனிதாபிமானம் உள்ள எவரொருவரும் உடனடியாக அந்தச் சிறுமியை எப்படியாவது பாதுகாத்து, அவளை உயிருடன் மீட்கப் போராடியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சடலத்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் எப்போதடா அந்தக் குழந்தை செத்து விழும் என்று காத்திருந்து அதைப் புகைப்படமாக்கி அதற்காக மிகச்சிறந்த புகைப்படம் மற்றும் புகைப்படக்காரர் எனும் விருது பெற்றது மிகக்கேவலமான செயல். இந்த மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தில் கடைசியில் குற்ற உணர்ச்சியே வெல்ல அந்தப் புகைப்படக்காரர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்பது செய்தி!