முந்தைய காலங்களில் ஒரு பாடல் மிகவும் பிடித்துவிட்டால், வகுப்பில் ஃப்ரீ பிரியட் வரும் போது பாட்டுப் புத்தகத்தைப் பார்த்து அழகிய குரல் வளம் உள்ள சக தோழியரைப் பாட வைத்து ரசிப்போம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சொந்த பந்தம் கூடியிருக்கையில், வட்டமாக அமர்ந்து அந்தாக்ஷரி பாடி மகிழ்வோம். அ வரிசைப் பாடல்களிலிருந்து ஜெ வரை நம் இசைப் புலமையை மேடையேற்றி மகிழ்வோம். ஒரு தடவை க-வில் முடியும் பாடலை பாட்ட வேண்டிய முறை எனக்கு வந்த போது, ‘கபூத்தர் ஜா ஜா என்று ஹிந்திப் பாடலை பாடத் தொடங்க, என்னுடைய கசின்ஸ் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது நினைவுக்கு வருகிறது. வேறு வழியில்லாமல் கண்ணே, கலைமானே என்று சிறப்பாக பாடி முடித்தேன்.