பின்பு துஷாராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உள்ளானது. அப்போது கிடைத்த முடிவுகளைக் கண்டு பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர்கள் அதிர்ந்தனர். இளம்பெண்ணும், இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயுமான துஷாரா தனது கணவர் மற்றும் மாமியாரால் தொடர்ந்து பல மாதங்களாகப் பட்டினி போடப்பட்டிருக்கிறார். துஷாராவை வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து முறையான உணவேதும் தராமல் அவ்வப்போது பற்றியும், பற்றாமலும் வெறும் சர்க்கரைத் தண்ணீரும், ஊற வைத்த பழைய சோறும் மட்டும் அளித்து வந்திருக்கிறார்கள் அவர்கள். இதனால் துஷாராவின் உடல் மெலிந்து நாளுக்கு நாள் ஷீணமடைந்து வந்திருக்கிறது. இதைப்பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவரது மாமியாரும், கணவரும் துஷாராவை வரதட்சிணை பாக்கிக்காக அடித்துத் துன்புறுத்தியும் வந்திருக்கிறார்கள். இத்தனை பயங்கரம் நிகழ்ந்தும் இவையனைத்தும் அண்டைவீட்டாருக்குத் தெரியாமல் போனதற்கு காரணம் துஷாராவின் வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான வகையில் அலுமினிய ஷீட்டுகள் கொண்டு வீடு கவர் செய்யப்பட்டிருந்தது என்கிறார்கள் அக்கம்பக்கத்தார். அதுமட்டுமின்றி, துஷாராவின் மாமியார் கீதா, கணவர் இருவருக்குமே அமானுஷ்ய பிளாக் மேஜிக் விவகாரங்களில் ஆர்வமும் இருந்து வந்திருக்கிறது. தங்கள் வீட்டின் முன் இருக்கும் கோயிலில் அமர்ந்துகொண்டு அவர்கள் இருவரும் அத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டவர்களை அடிக்கடி வரவழைத்து பயிற்சிகளில் ஈடுபடுவதை அண்டை வீட்டுக்காரர்கள் அடிக்கடி பார்த்திருக்கின்றனர். அதன் காரணமாகவும் அவர்களிடம் அணுகிப்பேச பலர் பயந்திருக்கிறார்கள்.