15 வருடங்களுக்கு முன்பு நட்பு வட்டத்தில் ஒரு சினேகிதிக்கு குழந்தை பிறந்தது. தலைச்சன் குழந்தை ஆண்குழந்தையாகிப் போனதில் அவளது மாமியார் வீட்டில் அனைவரும் பேரானந்தத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி இருந்தனர். பிறந்த அடுத்தாம் மாதத்தில் தாயின் அருகே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கட்டிலில் இருந்து நழுவி கீழே விழுந்ததில் குழந்தைக்கு ஒரு வருடமாகியும் தலை நிற்கவில்லை என்பதோடு குழந்தை தவழத்தொடங்கவும் இல்லை. பொத்தாம் பொதுவில் அனைவரையும் பார்த்துச் சிரித்ததே தவிர தாய் முகம், தந்தை முகம் எனத் தனித்தனியாகப் பார்த்துக் குழந்தை சிரிக்கவே இல்லை என்ற வருத்தம் குடும்பம் மொத்தத்திற்கும் வரத் தொடங்கியது. சில குழந்தைகள் எட்டு எடுத்து வைக்க ஒரு வயதாகும். ஆனால் இந்தக் குழந்தை கடைசி வரை எட்டெடுத்து வைக்கவே இல்லை. காரணம் மூன்றாம் மாதத்தில் குழந்தை கீழே விழுந்ததில் அதற்கு மஸ்குலர் டிஸ்ட்ரபி பாதிப்பு ஏற்பட்டிருந்ததை அவர்கள் கவனிக்க மறந்திருந்தார்கள். அதன் விளைவு அந்தக் குழந்தை தான் உயிரோடு இருந்த 14 வயது வரையிலும் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே... உயிரை விட்டது. ஆம் அந்தக் குழந்தை அதன் மனதில் என்ன நினைத்திருக்கக் கூடுமென்று கடைசி வரை அதன் அம்மாவிற்கு மட்டுமல்ல யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் குழந்தை தவழவில்லை, நடக்கவில்லை, பேசவில்லை, உயிரோடிருந்தவரை சும்மா வெறுமனே தன் கண்ணெதிரே வரும் முகங்களைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்தது. சாப்பிட, இடம் பெயர, இயற்கைக் கடன் கழிக்க... எல்லாவற்றுக்குமே அதற்கு யாருடைய துணையாவது தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. இது பெற்றோரை எத்தனை மனவருத்தத்தில் ஆழ்த்தியதோ அதே அளவு கனத்துடன் குடும்பத்தினர் அத்தனை பேரையுமே மனக்காயத்தில் ஆழ்த்தியது.