டாக்டர் வெங்கடசாமியின் பணிகளின் தாக்கம் இந்தியாவுடன் நின்றுவிடவில்லை. உலகெங்கும் அது பரவியுள்ளது. 1992-ம் ஆண்டு அவர் தொடங்கிய லயன் அரவிந்த் சர்வதேச சமூகக் கண் மருத்துவ நிறுவனம் (LAICO) ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய கண் மருத்துவமனைகளைத் தொடங்குவதற்குப் பெரும் உதவிகளைச் செய்துவருகிறது. சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இங்கு பயிற்சிபெற்றுள்ளனர். லைகோ-வின் உதவியுடன் சுமார் 400 கண் மருத்துவமனைகள் முப்பது நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலக நாடுகளின் மருத்துவமனைகள், முதல் உலக நாடுகளின் மருத்துவமனைகளை விஞ்ச முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய தகுதியை லைகோ வழங்கிவருகிறது.