தஞ்சாவூர் அருகே புதுப்பட்டினத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பன்னீர்செல்வத்தின் மகன் விஜயகுமார் (27). லாரி உரிமையாளர். இவரது மனைவி சரண்யா (24). இவர்களது மகள் தனுஸ்ரீ(3). இவர்கள் கீழவஸ்தாச்சாவடியில் உள்ள சரண்யாவின் தந்தை தட்சிணாமூர்த்தி (55), தாய் உமாராணியுடன் (50) வசித்து வந்தனர். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு விஜயகுமார், சரண்யா, தனுஸ்ரீ, விஜயகுமாரின் மாமனார் தட்சிணாமூர்த்தி, மாமியார் உமாராணி, சரண்யா சகோதரி இந்துமதியின் குழந்தைகள் ஸ்ரீவர்ஷா (12), சாய்வர்ஷினி(10) ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காரில் சென்றிருந்த னர். காரை கீழவஸ்தாச்சாவடியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த் (27) ஓட்டினார்.
தரிசனம் முடிந்து சனிக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விளார் பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில், விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, குழந்தை தனுஸ்ரீ, ஓட்டுநர் அரவிந்த் ஆகிய 4 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சரண்யா, சாய்வர்ஷினி, ஸ்ரீவர்ஷா, உமாராணி ஆகியோரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் சரண்யா இறந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் கிராமியப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்த விபத்துக்கு கார் ஓட்டுநரின் தூக்க கலக்கமே காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.