கோவை தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபடுகையில் மாணவி தவறி விழும் விடியோவைக் காணும் போது ஒரு விஷயம் மிகத்தெளிவாகிறது. பயிற்சியாளர் தள்ளி விட்டதில் தான் அந்த மாணவி சன் ஷேடில் இடித்துக் கொண்டு கீழே விழ நேர்ந்திருக்கிறது. மாடியிலிருந்தோ அல்லது உயரமான இடங்களிலிருந்தோ குதிப்பவர்கள் விசையுடன் குதித்தால் மட்டுமே பக்கவாட்டில் இடித்துக் கொள்ளாமல் கீழே விழ முடியும். ஆனால், இந்த மாணவி விழுந்த விதத்தைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. உண்மையில் பொறுப்பான, அனுபவமிக்க பயிற்சியாளர் என்றால், மேலிருந்து குதிக்க அந்த மாணவி பயத்துடன் தயங்கும் போதே அவரை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அல்லது பயத்தில் இருக்கும் மாணவியைக் காத்திருக்க வைத்து விட்டு மற்றவர்களைக் குதிக்கச் சொல்லி பயிற்சி அளித்து அதைப் பார்க்கச் சொல்லி எப்படி விழுந்தால் காயமின்றி தப்ப முடியும் என்பதை அவதானிக்க அவகாசமளித்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே செய்யாமல், பயந்து கொண்டு சன் ஷேடில் அமர்ந்திருக்கும் மாணவியை வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்டது முற்றிலும் தவறு. பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் எல்லாம் இப்படித்தான் அளிக்கப்படுகின்றன என்றால் அது நிச்சயம் கொலை முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.