தென்மேற்குப் பருவமழைக்காலங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் மழை மறைவுப் பகுதிகள் என்பதால் அவற்றுக்குப் பெரிதாகப் பாதிப்புகள் இருப்பதில்லை. தமிழகத்தின் சில பகுதிகள் குறிபிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நீலகிரியின் மேற்கு நோக்கிய சிகரப் பகுதிகள், தேனி மாட்டத்தின் மழையோரப் பகுதிகள், கேரளத்தை ஒட்டிய கன்யாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் மட்டும் அப்போது பாதிப்புகள் இருக்கலாம். ஆனால் தமிழகத்துக்கு முற்றிலும் மழை கிடைக்கும் காலமென்றால் அது காற்றின் திசை மாறக்கூடிய வடகிழக்குப் பருவ மழைக்காலத்தின் போது தான். இந்தக் காலகட்டங்களில் கிழக்கிலிருந்து காற்று வீசும். அப்போது வங்கக்கடல் பகுதியிலிருந்து கடல் சார்ந்த நிகழ்வுகளை நாம் எதிர்பார்க்க முடியும். அப்போது நிகழ்வுகள் தப்பவில்லை என்றால் கேரளாவில் நிகழ்ந்ததைப்போன்ற வெள்ளச் சேதங்களை நாமும் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் நமக்கு உண்டு. ஆனால், அத்தகைய நிகழ்வுகள் முன்னதாக எப்போதெல்லாம் சாத்தியமாகி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 2005 ஆம் வருடம் தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இயல்பைக் காட்டிலும் 79% அதிகமாக இருந்தது. அதே போல் 2014 ல் 59% அதிகமாக இருந்தது. இதில் இன்னொன்றையும் நாம் பார்க்க வேண்டும். இங்கே மழைப்பொழிவின் சதவிகிதம் அதிகம் எனும் போது சராசரி மழைப்பொழிவின் அளவு எவ்வளவு என்பதையும் நாம் பார்க்க வேண்டும். கேரளாவில் கடந்த 4 மாதங்களில் கிடைத்த மழைப்பொழிவு 210 செ.மீ. நமக்கு மூன்று மாதத்தில் பெற வேண்டியது 44 செ.மீ தான். அப்படி இருந்தும் நாம் ஏன் பாதிக்கப்படுகிறோம் என்றால்... கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளச் சேதத்தின் முக்கியக் காரணம் வழக்கத்தைக் காட்டிலும் 61% அதிகமாகப் பெய்த மழை நீர் வடிந்து செல்லப் போதுமான வடிகால் வசதிகள் இங்கு இல்லாததால் தான்.