கிண்டர் கார்ட்டன் குழந்தைகள் என்றால் சரி ஒருவேளை பெரிய குழந்தைகள் என்றால் என்ன செய்வது என்கிறீர்களா? இருக்கவே இருக்கின்றன மாற்று வழிகள். அவற்றை பெற்றோர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ பள்ளிகள் மிக நன்றாக உணர்ந்துள்ளதால் அவற்றையும் விற்பனைக்குரியவையாக்கி இப்போது கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. வருடம் தோறும் பள்ளிக் கல்விக்கட்டணம் தனி. அவை தவிர; மாணவர்கள் இசை கற்றுக் கொள்ள வேண்டுமா? இசைக்கருவிகள் கற்க வேண்டுமா? செஸ், கேரம், பேட்மிண்ட்டன், அத்தலெட்டிக்ஸ், கிரிக்கெட், யோகா, பரதம், வெஸ்டர்ன் டான்ஸ், ரோபாட்டிக்ஸ், மூலிகைச் செடி வளர்ப்பு, தியேட்டர் ஆர்ட்ஸ், என்று டஜன் கணக்காக மாற்றுச் சாய்ஸ்கள் வைத்திருக்கிறார்கள். இவற்றில் ஏதாவதொன்றில் நம் குழந்தைகளை நாம் அனுமதிக்கலாம். சில பள்ளிகள் காசுக்கால இந்த கோர்ஸ்களைத் தொடங்கி கல்லா கட்டினாலும் கூட மிக நன்றாகவே கற்றுத் தருகிறார்கள். கற்றுத் தருவதிலோ அல்லது ஆசிரியர்களின் திறமையிலோ, அர்ப்பணிப்புடன் கற்றுத் தரும் விஷயத்திலோ நாம் எந்தக் குறையும் காண முடியாது. விருப்பப்பட்டு அந்தந்த கோர்ஸ்களில் இணையும் மாணவ, மாணவிகள் மிக அருமையாகக் கற்றுத் தேர்கிறார்கள். இதிலும் கூட பெற்றோரின் திணிப்பு இருக்கக் கூடாது. குழந்தைகளின் தனித்திறமை தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்... குழந்தைகள் வளரும் போதே அவர்களது தனித்திறன் என்னவென பெற்றோர் கவனித்துக் கண்டறிய வேண்டும். உங்களது கண்டறிதல் மிகத் துல்லியமானதாக இருந்தால் நாளை உங்களாலும் ஒரு செஸ் விஸ்வநாதன் ஆனந்தையோ, பேட்மிண்ட்டன் பி.வி சிந்துவையோ, நீச்சல் குற்றாலீஸ்வரைனையோ, இசையில் ரஹ்மானையோ, அனிருத்தையோ, ஜி.வி பிரகாஷையோ உருவாக்க முடியும் என்று பொருள். மொத்தத்தில் குழந்தைகள் தங்களை மறந்து ஆழ்ந்து போய் விளையாட்டுத் தனமாகக் கற்றுக் கொள்ளத் தக்க வகையிலான மாற்று சாய்ஸ் ஒன்றை நாம் அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். அதில் குழந்தைகள் ஆழ்ந்து விட்டார்கள் எனில் அவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்களோ டி.விக்களோ தேவைப்படாது.