சமீபத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசிய காணொலிக் காட்சியொன்றை காண நேர்ந்தது. அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப் பட்டன. அதிலொன்று தான், மேற்கண்ட தொலைக்காட்சி விவாத மேட்டர். முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளை அகஸ்மாத்தாகத் தான் காண முடியும். செய்தி ஊடகங்கள் பெருகப் பெருக அதனோடு சேர்ந்து இந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளும் பெருகிப் பெருகி இப்போதெல்லாம் எந்த செய்திச் சேனலைத் திருகினாலும் யாராவது நான்கு பேர், ஒரு நெறியாளரோடு உட்கார்ந்து கொண்டு காச், மூச்சென்று கதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், தான் என்ன தலைப்பில், எதைக் குறித்துப் பேச வந்திருக்கிறோம் என்பதே பலருக்கு இம்மாதிரியான விவாத நிகழ்ச்சிகளில் மறந்து விடுகிறது. ஏனெனில் அங்கே அவ்வப்போது முற்றி விடும் வாய்த்தகராறுகளால். சிலர் ஆணித்தரமாகத் தமது கருத்துக்களை முன் வைப்பதாகக் கருதிக் கொண்டு எதிரணியினரை ஏக வசனத்தில் பேசிச் சாடுகின்றனர். சிலரோ, நிகழ்ச்சியில் தம்மை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் நெறியாளரின் கிடுக்கிப்பிடி கேள்விக் கணைகளில் சிக்குண்டு விழி பிதுங்கி, பாதி நிகழ்வில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விடுகிறார்கள்.