1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கக் கூடிய 5 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் பயிலும் பள்ளியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இப்போதும் இங்கு சரியாகப் பேணப்படவில்லை. அங்கே அந்தக் குழந்தைகளுக்கு ஆடல், பாடல், கைத்திறன், விளையாட்டு உள்ளிட்டவற்றைக் கற்பிக்கப் போதுமான ஆசிரியர்கள் கிடையாது. பல பள்ளிகளில் ஆசிரியர்களே தான் அலுவலக வேலைகளையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. இப்படி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே செய்து தரப்படாத நிலையில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிற போது , நவோதயா பள்ளி விஷயத்தில் மட்டும், மாவட்டத்துக்கு ஒரு பள்ளிக்கு, ஒரு செக்ஷனுக்கு 40 பேர் இரண்டு செக்ஷன்களுக்கு 80 பேருக்கு மட்டும் நாங்கள் மத்திய அரசின் செலவில் முழு வசதிகளும் செய்து தருவோம் கோடிக்கணக்கில் நாங்கள் பணம் செலவு செய்வோம், அதற்கு மாநில அரசும் தன் பங்கைத் தரவேண்டும் என்றால் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது இல்லையா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 41 ல், அரசுக்கு வருவாய் பெருகப் பெருக, பொருளாதாரம் மேம்பட, மேம்பட அரசு தான் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே அந்தப் பிரிவுக்கும் எதிரானது தான் இந்தக் நவோதயா கல்வித் திட்டம். எனவே நவோதயா பள்ளிகள் என்பவை மீண்டும் பல அடுக்குக் கல்விமுறையை உறுதி செய்வதற்குத் தான் பயன்படுமே தவிர, அது சமத்துவமான கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவதற்குப் பயன்படாது. எனவே நாங்கள் கேட்பதெல்லாம்; சமத்துவமான கல்வி வாய்ப்பு ஏற்படுவதற்கு மாநிலங்களுக்கு அதிகமான நிதி வசதி செய்து கொடுங்கள், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொடுங்கள் அது தான் உண்மையிலேயே மாநிலத்திலிருக்கும் மக்களுக்கான கல்வியை வழங்க உதவும்.’