முதலில் குழந்தைகளை அடக்க ஒடுக்கமாக, பணிவு, பதவிசாக வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களை இந்த சமூகத்திற்குப் பயந்தவர்களாக ஆளாக்கவல்ல குழந்தை வளர்ப்பு முறையை நாம் கைவிட வேண்டும். காலத்திற்கு ஒவ்வாத இத்தகைய வளர்ப்பு முறை மேலும், மேலும் அவர்களை ஆபத்தில் தான் தள்ளப் பார்க்கிறது. இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அயல் மனிதர்களது தொடர்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. அவர்களது எல்லாத் தொடர்புகளுமே வீடு, பள்ளி, டியூஷன் நண்பர்கள் தவிர்த்து தொலைக்காட்சிகளும், இணையமும் தான் என்றாகி விட்டது. விடுமுறைகளில் பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டே காட்சியளிக்கின்றன. இன்றைய தலைமுறையினருக்கு வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் கூட உலகம் உள்ளங்கையில் தான் விரிகிறது. தானாக அது விரியாவிட்டாலும் அவர்களாக அதை விரிய வைத்து அதில் புதைந்து போகிறார்கள். அக்கா சீரியலில் ஆழ்ந்திருந்தால் தம்பி ஸ்மார்ட் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கலாம். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஆஃபீஸ் வேலைகள் லேப் டாப்பில் வற்றாத ஜீவநதிகளாய் மூழ்கடிக்கக் காத்திருக்கலாம். இப்படியொரு சூழலில் வளரும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள். ஒன்று அதிமேதாவிகள் போல யாருடனும் ஒட்டாமல் தங்களை ஜீனியஸாகக் காட்டிக் கொள்ள முனைவார்கள், அல்லது எல்லாவற்றுக்கும் பயந்து, பயந்த கோழிக்குஞ்சுகளாய் பிறரால் அடையாளம் காணப்படுவார்கள். இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில், இந்த உலகைப் புரிந்து, யதார்த்தமான மனநிலை கொண்டு சமநிலையில் வளரும் பேறு பெற்ற குழந்தைகள் அரிதானவர்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் பொதுவாக பிறரது அதிகாரத்துக்கோ, பலாத்காரத்துக்கோ உட்படுத்தப்படுவது அரிது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் குழந்தைகளையும், தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய மறுக்கும் குழந்தைகளையும் கண்டு இந்த சமூகத்தின் கயமை நிறைந்த மனிதர்களுக்கு சற்றேனும் பயமிருக்கத்தான் செய்கிறது. அவர்களிடம், அவர்கள் பொதுவாக வாலாட்ட முனைவதில்லை.