ஏன் சில மனநோயாளிகளால் பெண்ணை பெண்ணாகவும், சக உயிராகவும் பார்க்க முடிவதில்லை, எந்த ஊனக் கண்கள் அவர்களுக்கு பெண்களையும், பெண் குழந்தைகளையும் வெறும் பாலியல் பிண்டங்களாகக் காட்டுகிறது? என்று யோசித்துப் பார்த்தால் நமது சமூக அமைப்பின் மீதே கடும் கோபம் எழுகிறது. நமது சமூகம் எப்போதும் முன்னுரிமை தருவதும், தந்து கொண்டிருப்பதும் சினிமாக்களுக்குத் தான். நமது அன்றாட வாழ்வில் அரசியலைக் காட்டிலும் சினிமாக்களின் தாக்கமே அதிகம் எனில் அது மிகையில்லை. நமது சினிமாக்களில் காட்டப்படும் ஆண் பெண் உறவுகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள்! பெரும்பாலும் எல்லை தாண்டிய உறவுகளாகவே இருக்கின்றன. முன்பெல்லாம் தொலைக்காட்சி சீரியல்களில் ஆபாசத்தை ஒரு துளி கூட காண முடியாது. இன்றைய தொலைக்காட்சி சீரியல்களைப் பாருங்கள்... தொடர்ந்து பாரபட்சமே இல்லாமல் எல்லா சேனல்களிலும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு குழந்தைக் கடத்தல், இளம் பெண் கடத்தல், சொத்துக்காக கொலை செய்யத் திட்டமிடுதல், குழந்தைகளை நரபலி கொடுத்து அதை நூதனமாக மறைக்கும் ஆலோசனைகள், பிறன் மனை நோக்கக் கற்றுத் தரும் முறையற்ற உறவுகளை நியாயப்படுத்தும் திரைக்கதைகள். இப்படித் தானே சென்று கொண்டிருக்கின்றன தமிழர்களின் தொலைக்காட்சி நாட்கள். இதில் வட இந்திய இறக்குமதி சீரியல்களைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப் போகவில்லை என்றால் இன்னொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை எனும் அளவுக்கு மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறி விடும் துர்பாக்கியம் கூட சில குடும்பங்களில் நிகழ்ந்து விட வாய்ப்புகளுண்டு.