ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு மட்டும் லாபமோ லாபம்! 24 மணி நேரமும் இணையத்திலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு சுந்தரி அக்காவைத் தெரியாமலிருக்க முடியாது. ஃபேஸ்புக்கிலும், யூ டியூபிலும் சுந்தரி அக்காவைத் தேடிப்பாருங்கள், அவரது ரசிக சிகாமணிகள் சுந்தரி அக்காவின் சமையல் சேவையைப் பற்றிப் பக்கம், பக்கமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஏனெனில், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று மதியச் சாப்பாடு சாப்பிட்டால் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில் பில்லைப் பார்த்ததும் பிரஸ்ஸர் எகிறி ஹார்ட் அட்டாக் வரக்கூடிய நிலையிலிருக்கும் நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், கறி, முட்டை, சிக்கன் என சகலவிதமான செளகரியங்களுடன் வெறும் 30, 400 ரூபாய்களுக்குள் முடித்து திருப்தியாக ஏப்பம் விட்டுக் கொள்ள அனுமதிக்கும் சுந்தரி அக்கா மாதிரியானவர்களின் சாப்பாட்டுக்கடை நிச்சயம் தேவகிருபையில்லாமல் வேறென்ன?! விலை குறைவு என்பது மட்டுமல்ல, வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காவண்ணம் தனது கடையில் சுத்தம், சுகாதாரத்தையும் தொடர்ந்து பேணி வருகிறார் சுந்தரி அக்கா. இவரது உணவகத்தின் பெயர் கானாவூர் உணவகம். ஆனால் நெட்டிஸன்களுக்கு ‘சுந்தரி அக்கா கடை’ என்று சொன்னால் தான் சட்டெனப் புரியும். இங்கே அசைவ உணவுகள் மட்டுமல்ல சைவ உணவு வகைகளும் கிடைக்கும். முன்பெல்லாம் மதிய உணவு மட்டும் தான் சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்ததாகவும் தற்போது வெகு தூரத்திலிருந்து வரும் சில வாடிக்கையாளர்களுக்காக இரவுச் சாப்பாடும் தயார் செய்து தருவதாகவும் சுந்தரி அக்கா யூ டியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.