மகிழ்மதியின் ஈடு இணையற்ற ராஜதந்திரி ராஜமாதா சிவகாமி தேவி. அவளது கருணையில் உயிர் கொள்கிறான் அமரேந்திர பாகுபலி. மகாபாரதம் போலவே ஊனமான மூத்த சகோதரனை விலக்கி ஆரோக்கியமான இளையவருக்கு பட்டம் கட்டப்படுவதால் ஆரம்பம் முதலே சினத்தில் மூழ்கித் தவிக்கும் பெரிய தந்தையார் பிங்கல தேவர். இதில் பிங்கல தேவர் கதாபாத்திரம் சகுனி, திருதராஷ்டிரன் இருவரது கதாபாத்திரங்களையும் இணைத்து ஒருவரே என உருவாக்கப்பட்டுள்ள விதம் அருமை. கூடவே அரியாசனத்தின் அடிமையாக ராஜ விசுவாசியான கட்டப்பா. கட்டப்பா கதாபாத்திரம் எனக்குப் பல விதங்களில் விதுரரையும், பீஷ்மரையும் ஒரு சேர ஞாபகப் படுத்துகிறது. படம் பார்த்த மற்ற எவருக்கும் இப்படித் தோன்றியதோ என்னவோ. ஆனால் ராஜ விசுவாசியாக அவர் பல்லாள தேவன், பிங்கல தேவன் கூட்டணியைப் பொறுத்துப் போவது கெட்டவனே ஆனாலும் ராஜ விசுவாசியாக துரியோதனன் பக்கம் நிற்கும் பீஷ்மரை நினைவூட்டுகிறது. முதல் பாகத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க நடமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவந்திகாவுக்கு இந்தப் பாகத்தில் வேலையே இல்லை. ஆனால் அனுஷ்காவுக்கு இரண்டாம் பாகத்தில் மிக அருமையான வேடம். அம்மா அனுஷ்காவை விட யுவராணி அனுஷ்கா தான் அப்படியே மனதில் பச்சக் என ஒட்டிக் கொள்கிறார். அழகு அனுஷ்கா வயதான கதாபாத்திரத்தை விட யுவராணியாக வரும் போது கதைக்கு மேலும் வலிமை கூட்டுகிறார். அதைத் தாண்டி அனுஷ்காவின் பாத்திரப் படைப்பில் புதுமை என எதுவுமில்லை. வீர, தீர, பராக்கிரமம் நிறைந்த மகாப்பெரிய மகிழ்மதி தேசத்தின் யுவராஜனான அமரேந்திர பாகுபலியின் மனதை ஒரு சிற்றரசின் யுவராணி கவர வேண்டுமெனில் அவளுக்குள் உறைந்திருக்க வேண்டிய அத்துணை பராக்கிரமங்களும், சண்ட, பிரசண்டங்களும் நிறைந்த துணிவு மிக்க இளவரசியாக அனுஷ்கா கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இனி தென்னிந்திய நடிகைகளில் மகாராணி வேடம் ஏற்கத் தகுந்த ஹீரோயின் எவர் எனக்கேட்டால் யார் வேண்டுமானாலும் தயங்காமல் அனுஷ்காவைக் கை காட்டலாம்.