திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரியோ ஒலிம்பிக்: அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள்!

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்தாலும் ரியோ ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் முறையாக 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை களமிறக்குகிறது.

News image
Updated On :21 ஜூலை 2016, 5:56 am

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்தாலும் ரியோ ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் முறையாக 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை களமிறக்குகிறது.

இந்த முறை 121 பேர் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். 2012ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்குடன் ஒப்பிடுகையில் இந்த முறை 38 பேர் கூடுதலாக பங்கேற்கவுள்ளனர்.

இதில் அறிமுக வீரர்களும், அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் கலக்க காத்திருக்கும் அறிமுக வீரர்கள் 5 பேரை பற்றிய ஒரு தொகுப்பு இது...

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்

Story image

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையோடு களமிறங்க காத்திருக்கிறார் தீபா கர்மாகர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், தனது 7-ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் களம்புகுந்தார். ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க கால் பாதங்கள் உள் வளைந்து இருக்க வேண்டும். ஆனால் தீபாவின் கால் பாதங்கள் தட்டையாக இருந்தன.

கடுமையான பயிற்சியின் மூலம் அதை சரி செய்த தீபா, பின்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார். 2014-இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மிகவும் அரிதான மற்றும் அபாயகரமான புரோடுநோவா வால்ட் பிரிவில் பங்கேற்று தீபா வெண்கலம் வென்றபோது உலகமே அவரைப் பார்த்து வியந்தது.

அதன்பிறகு தொடர்ச்சியாக கலக்கிய தீபா, ரியோவில் நடைபெற்ற தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கிறார். 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கும் முதல் இந்தியரான தீபா கர்மாகர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதே தனது முதல் இலக்கு என்று சூளுரைத்திருக்கிறார். அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டாலே பதக்கமும் உறுதியாகிவிடும். சொன்னதை செய்வாரா கர்மாகர்?

ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டீ சந்த்

Story image

1980-இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 100 மீ. ஓட்டத்தில் பி.டி.உஷா ஓடினார். அதன்பிறகு இந்தியாவின் சார்பில் 100 மீ. ஓட்டத்தில் மற்றொரு வீராங்கனை கலந்து கொள்வதற்கு 36 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த வீராங்கனைதான் டூட்டீ சந்த்.

ஒடிஸா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரதார் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும் தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்திலிருந்து தடம்புரளாமல் ரியோ ஒலிம்பிக் வரை வந்திருக்கிறார். இந்திய தடகளத்தில் வேகமாக வளர்ந்த டூட்டீ சந்துக்கு டெஸ்டோஸ்டீரான் வடிவில் காத்திருந்தது சோதனை. அவருடைய உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் (ஆண் தன்மை கொண்ட ஹார்மோன்) இருப்பதாகக் கூறி 2014-இல் அவர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதித்தது சர்வதேச தடகள சம்மேளனம்.

ஆனால் மனம் தளராத டூட்டீ சந்த், அதை எதிர்த்து மத்திய விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதோடு, ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றிருக்கிறார். 100 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான டூட்டி சந்த், ஒலிம்பிக்கில் வரலாறு படைப்பாரா?

துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிதுராய்

Story image

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்தியர்களில் துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராயும் ஒருவர். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்ற கையோடு ஒலிம்பிக்கில் களமிறங்குகிறார்.

உலகக் கோப்பையில் மட்டும் 6 பதக்கங்களை வென்றிருக்கும் ஜிதுராய், 2014-இல் உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி என பங்கேற்ற அனைத்திலும் பதக்கங்களை குவித்துள்ளார்.

28 வயதான ஜிதுராய், ரியோ ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் மற்றும் 50 மீ. பிஸ்டல் போட்டிகளில் பங்கேற்கிறார்.

நேபாளத்தில் பிறந்தவரான ஜிது ராய், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீ. பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார். சர்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அவர், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஜிது ராயின் தோட்டாக்கள் இலக்கை துல்லியமாக துளைக்குமா?

ஜூடோ வீரர் அவதார் சிங்

Story image

2004-க்குப் பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள முதல் இந்திய ஜூடோ வீரர் அவதார் சிங். இவர் 90 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கிறார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சேர்ந்தவரான அவதார் சிங் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவருடைய பயிற்சியாளர் கூறியதால் 2008-இல் ஜூடோ விளையாட்டிலிருந்து வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனால் அவருடைய பெற்றோர் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக மீண்டும் ஜூடோவில் களமிறங்கிய அவதார் சிங், உலகின் முன்னணி வீரர்களை புரட்டியெடுத்தார்.

இந்த ஆண்டு தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான ஈரானின் சய்யது மொராடியால்கூட அவதார் சிங்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 6 அடி 4 அங்குல உயரம் கொண்டவரான அவதார் சிங், ஒலிம்பிக்கில் அவதாரம் எடுப்பாரா?


பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த்

Story image

2014-இல் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான சீனாவின் லின் டானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றபோது பாட்மிண்டன் உலகின் புதிய அவதாரமாக உருவெடுத்தார் ஸ்ரீகாந்த். சூப்பர் சீரிஸ் பிரீமியர் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் வசமானது.

ஹைதராபாதில் பிறந்தவரான ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் சீன ஓபன் போட்டி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்த், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்துக்கு முதல் சுற்றே கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவாலை சமாளிப்பாரா ஸ்ரீகாந்த்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.