சம்பவம் 1
லாவண்யாவிற்கு ரஞ்சித்திடமிருந்து ஒரு ஃபோன் வருகிறது. பேசி முடிப்பதற்குள் அவள் உடல் முழுவதும் வேர்த்து, நடுங்க ஆரம்பித்துவிட்டது. அரை மணி நேரத்துக்குள் தன் வீட்டுக்கு அவள் வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியிருக்கிறான் அவள் முன்னாள் காதலன் ரஞ்சித். சில மாதங்கள் முன்பே இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் லாவண்யாவைப் பிரிந்து இருக்க முடியாமல் அடிக்கடி ஃபோன் செய்வதும் நேரில் வரச் சொல்லியும் கெஞ்சியிருக்கிறான் ரஞ்சித். அவள் சரிவர பேசாததால் ஆத்திரத்தில் இப்போது இப்படி ஒரு ப்ளாக்மெயில் லாவண்யாவுக்கு வேறு வழியில்லை. உயிர் பிரச்னை என்று பதறி அவன் இருப்பிடம் நோக்கி ஓடுகிறாள்.
சம்பவம் 2
விதுபாலா ராகவ் தம்பதியின் ஒரே பெண் குழந்தை ரிக்விதா. விதுவுக்கும் ராகவுக்கும் அடிக்கடி நடக்கும் சண்டையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள். சண்டைக்காட்சியின் க்ளைமேக்ஸில் எப்போதும் விது தன் அறைக்குள் போய் கதவை படாரென்று சாத்திக்கொள்வாள், ராகவ், கதவை தட்டி ''அதான் ஸாரி சொல்லிட்டேன்ல, ஒண்ணும் செஞ்சிக்காதே, கதவைத் திற'' என்று பலதடவைகள் கெஞ்சியதும் சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு விது வெளியே வருவாள் . இதையே பார்த்து வளர்ந்த ரிக்விதா ஒரு நாள் மெதுவாகக் விது கண்டித்த போது உடனே அறைக்குள் போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு வெளியே வரவேயில்லை.
அவள் கேட்டதைத் தருகிறோம் திட்ட மாட்டோம் என்று கெஞ்சிக் கூத்தாடிய பிறகே வெளியே வந்தாள்.
சம்பவம் 3
'எத்தனை நாள் தான் உன்பின்னால் சுத்தறது, நீ என்ன பெரிய ஐஸ்வர்யாராய் என்ற நினைப்பா, நாளைக்கு எனக்கொரு பதிலை சொல்லலை ...அப்பறம் நடக்கறதே வேற' என்று பூஜாவைப் பார்த்து மிரட்டி விட்டுச் செல்லுகிறான் மனோஜ். குரைக்கும் நாய் கடிக்காது என்ற நினைப்புடன் அதே ரூட்டில் அவள் கல்லூரிக்குச் சென்ற ஒரு நாள் , மறைத்து வைத்திருந்த பாட்டிலைத் திறந்து திராவகத்தை அவள் முகத்தில் வீசி விட்டான் மனோஜ். பூஜா உயிருக்குப் போராடிக்கொண்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் அதேவேளை, அவன் சட்டத்தில் பிடியில் சிக்கிக் கொள்கிறான்.ஆனாலும் குற்றவுணர்வு சிறிதும் இல்லாமல் கொஞ்ச நாட்களில் வெளியே வந்துவிடுவதாக சவால் விடுகிறான்.
மேற் சொன்ன மூன்று சம்பவங்களுடன் டாக்டர் அபிலாஷாவை அணுகினோம். அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இச்சமயத்தில் முக்கியமானவைகளாகவும் இருந்தன.
இந்த சம்பவங்கள் வேறு வேறாக இருந்தாலும், அடிப்படையான விஷயம் தங்கள் உரிமை என்ற நினைப்பு. அப்படித் தாங்கள் கருதுபவர்களை அச்சுறுத்திப் பேசி,எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து கவனம் பெற வேண்டியே பெரும்பாலும் அப்படிச் செய்கிறார்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற நினைப்பு அவர்களை உணர்வுரீதியாக துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த இந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
கணவன் மனைவி விஷயத்தில் அலலது காதலர்கள் விஷயத்தில் இது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். 'நான் சொல்ற பேச்சை நீ கேட்கலைன்னா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது ' இந்த ரீதியில் பேசி , ப்ளாக் மெயில் செய்து காரியத்தைச் சாதித்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் இணைக்கு கசப்புணர்வு அதிகமாகி கொஞ்சம் நஞ்சம் உள்ள காதலும் தொலைந்து போய்விடும். அவர்கள் உயிரை விடுவார்களோ இல்லையோ. இவர்கள் காதலை இழந்து விட வேண்டி வரும்.அந்த அளவுக்கு வெறுப்பின் எல்லைக்கு விரட்டப் பட்டு விடுவார்கள்.
இப்பவே வேணும், இந்த நிமிஷம் நான் சொல்றதை நீ கேட்கணும், இல்லாட்டா நான் இப்படி செய்வேன் என்று அடம் பிடித்து அழுவது முதல் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எமோஷனல் ப்ளாக்மெயில்கள் பெருகிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இது சரியோ நியாயமோ இல்லை என்று தெரிந்தும் நினைத்த காரியத்தை சாதிக்கவே ப்ளாக்மெயிலர்கள் பார்ப்பார்கள். எந்தச் சமாதானமும் அவர்களிடம் செல்லுபடியாகாது. அடம் பிடித்து ஒரு பொருளை வாங்கியே பழக்கப்பட்டக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டாலும் கூட தான் ஆசைப்பட்ட ஒன்றை அடைய நினைத்தால் எந்த எல்லைக்கும் போவதைப் போன்றதுதான் இது.
இந்த எமோஷனல் ப்ளாக்மெயில் எந்த சூழலில் உருவாகிறது?
1. நம்பி ஒரு விஷயத்தை சொல்வது
2. ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு அதை நம்பத் தொடங்குவது.
பொதுவாக இப்படி உணர்வுரீதியாக அச்சுறுத்துபவர்கள் ஆளுமை குறைபாடு உடையவர்கள் (பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்). இவர்கள் அளவுக்கு அதிகமாக இன்னொருவரை சார்ந்திருக்கும் மனநிலையை உடையவர்களாகவும், சந்தேகப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
இத்தகைய ஆளுமை குறைபாடு உடையவர்கள் தங்கள் காரியம் நடக்க தங்கள் துணையை அல்லது பெற்றோரை மிரட்டி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவதையும், அல்லது உடல்ரீதியாக அடுத்தவர்களைக் காயப்படுத்துவதையும் அதன் உச்சம் என்று சொல்லலாம்.. இப்படி செய்தால் அவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என்று இத்தகையோர் நம்புகிறார்கள் . அல்லது அப்படிச் சொல்லிவிட்டு அதை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள் .
இப்படி உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டுபவர்களில் பலர் அப்படிச் செய்வதில்லை, ஆனால் மிகச் சிலர் மிகை உணர்ச்சியால் அந்த துயரமான முடிவையும் தேடிக் கொள்வதுண்டு. ஆனால் உடல்ரீதியாக அடுத்தவர்களைத் துன்புறுத்துபவர்கள் சாடிஸ்ட். இப்படிச் சொன்னால் அல்லது இச்செயலைச் செய்தால் அவர்கள் துன்புறுவார்கள் என்று தெரிந்தே செய்பவர்கள் சாடிஸ்ட். தங்களுடைய இருப்பை உணர்த்த வன்முறையின் உச்ச கட்டத்தை இவர்க்ள் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்படி எமோஷனல் ப்ளாக்மெயில் செய்பவர்கள் ஒரு கட்டத்தில் திருந்த நினைத்தாலும் கூட இவர்களின் முந்தைய செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை பெரும்பாலும் நம்புவதில்லை.
இது மிகவும் உணர்வு பூர்வமான விஷயம் ஆகும் . இந்த விஷயத்தில் நியாயம் சொல்ல மூன்றாமவர் இடையில் வந்தாலும் கூடத் தடுமாறச் செய்து விடுவார்கள்.உண்மைக்காக உயிரையே கூட விடத் தயாராக இருப்பதாக அவர்கள் காட்டிக் கொள்வார்கள். பொய் சத்தியம் செய்யக் கூட அஞ்ச மாட்டார்கள். மூன்றாமவர் முன்னிலையில் இன்னும் உருக்கமாக,நம்பகத் தன்மையுடன் பேசுவார்கள்.ஆனால் அவர்களின் பேச்சை நம்பிவிடக் கூடாது
இந்தப்பிரச்னையை முளையிலேயே கிள்ளிவிடுவதுதான் நல்லது. ஒரு குழந்தை சமூகத்துக்குத் தேவையான நல்லவனாகவோ அல்லது அதே சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுமரம் போல் கெட்டவனாகவோ பின்னாட்களில் விளங்குவதற்கு காரணம் வளர்ப்பு முறை தான். பெற்றோர்கள் கையில் தான் இது முக்கியமாக உள்ளது.
குழந்தைகள் ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிக்கும் போது அதற்கு உடனே பணிந்து விடக் கூடாது. அப்படி ஒரு முறை பணிந்து அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டால் அது ஒரு தொடர்கதை ஆகி விடும். விரும்பியது கிடைக்காத சமயங்களில் அச்சுறுத்தத் தொடங்கிவிடுவார்கள். எனவே முளையிலேயே இப்பழக்கத்தை கிள்ளிவிட வேண்டும். மிரட்டிப் பணிய வைக்கும் பழக்கத்துக்கு பெற்றோர்கள் ஆரம்பத்தில் ஆதரவளித்தால், அதற்கான விளைவையும், விலையையும் பின்னாட்களில் அவர்கள் தான் சந்திக்க நேரிடும்.. அதன் பின் வருத்தப்பட்டு பயன் இல்லை. தவறான முன் உதாரணமாக ஒருபோதும் பெற்றோர்கள் இருந்துவிடக் கூடாது.குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தங்கள் கணவன் அல்லது மனைவியை மிரட்டிப் பணிய வைக்க அவர்கள் செய்யும் உத்தி முற்றிலும் தவறானது. குழந்தைகள் மனதில் இது கல்வெட்டாகப் பதிந்து போய் விடுகின்றது.உடனே அதை தாங்களும் செய்து பார்க்க துணிவார்கள். டீன் ஏஜ் பிள்ளைகளில் பெரும்பாலனவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்.
மீடியாவும் இப்படிப்பட்ட எமோஷனல் ப்ளாக்மெயில்களைக் கற்றுக் கொடுக்கும் இலவசப் பாடசாலையாக உள்ளது. சானலைத் திருப்பினால் எதாவது ஒரு திரைப்படத்தில் அல்லது சீரியலில் யாரோ யாரையோ ப்ளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறார்கள். காதலை உயர்த்திப் பேசும் படங்களைக் காட்சிப் படுத்த எத்தனையோ வழிமுறைகள் உள்ளன வசனங்களில் மிகவும் கவனம் எடுத்து எழுத வேண்டும். நீ இல்லைன்னா நான் செத்துடுவேன் என்று சொல்லப்படும் போது அதைக் கேட்கும் எண்ணற்ற பார்வையாளர்களில் ஒருவர் மனதில் அது ஆழப் பதிந்து அதனால் அவர் உயிரிழக்க நேரிட்டாலும் கூட அது குற்றம் தானே?
கடந்த வருடம் நிகழ்ந்த வித்யா வினோதினி இருவர் மரணத்தையும் இன்னும் நாம் மறந்திருக்க மாட்டோம். இரண்டுமே இப்படிப்பட்ட எமோஷனல் ப்ளாக்மெயில்களர்களால் தான் நிகழ்ந்தவை. அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்கள். ப்ளாக்மெயில் செய்து தனக்குத் தானே தீங்கு செய்து கொள்பவன் முட்டாள் என்றால், இப்படி அடுத்தவர்கள் மீது ஆசிட் எறிவதும், கொலை முயற்சி செய்பவர்களும் வெறியர்கள். இவர்கள் சமூக விரோதிகள். அவர்களிடம் நாம் தான் ஜாக்கிரதையாக முன் எச்சரிக்கையுடன், விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இப்படி எமோஷனல் ப்ளாக்மெயில் செய்த பின் குற்றவுணர்வு ஏற்பட்டுத் திருந்தியவர்களை பெற்றோர்களோ, அல்லது துணைவர்களோ நம்புவதில்லை. அவர்களை இவர்கள் அலட்சியப்படுத்தத் தொடங்குவார்கள்.. புலி வருது கதை தான். அவன் தானே,கொஞ்ச நேரம் மிரட்டி விட்டு ஓய்ந்து விடுவான் என்று ஒரு கட்டத்தில் சாதாரணமாக அதை எடுத்துக் கொள்வார்கள்.
எப்படி தவிர்ப்பது?
தேவையான இடத்தில் செல்லம் கொடுத்தும் தேவையான சமயங்களில் கண்டித்தும் பிள்ளைகளை வளர்ப்பது தான் சரியான முறை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை வேண்டுமென்றே தன் வகுப்பில் படிக்கும் மற்றொரு குழந்தையின் புத்தகத்தை எடுத்து வந்துவிட்டால், பெற்றோர்கள் உடனே அவன் செய்த தவறை சுட்டிக் காட்டி, அவனையே கொண்டு மறுநாள் புத்தகத்தை உரிய மாணவனிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கேட்கச் சொல்ல வேண்டும். மாறாக இன்றைய பெற்றோர்கள், தாங்களே அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள் அல்லது கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். தவறுகள் முளையிலேயே களையப் பட்டால் அல்லது தண்டிக்கப்பட்டால் தான் குழந்தைக்கு எது நல்லது எது கெட்டது, இந்தச் செய்கை சரி இது தவறு என்று தெரியும். எனவே நேர்மை, நற்பண்பு குணங்களை குழந்தையின் இளம்மனதில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். இல்லா விட்டால் 'அம்மா அப்பாவே ஒண்ணும் சொல்லலை நாம செஞ்சது கரெக்ட் தான் 'என்று எண்ணத் தொடங்கி விடுவார்கள். நியாய அநியாயங்களுக்கான வேறுபாடுகள் புரியாமல் போய்விடும். ஒருகட்டத்தில் பூமராங் போல தங்களையே குற்றச் செயல்கள் குறி வைக்க ஆரம்பிக்கும் போது தான் பெற்றோர்கள் பதறவே ஆரம்பிக்கிறார்கள்.
பத்து வயது பள்ளி மாணவி ஒருத்தி டீச்சர் திட்டினார்கள் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் படிக்கும் போது நம்மால் அதை அப்படியே கடந்து போக முடிவதில்லை. அதை ஒட்டிய சிந்தனை நாள் முழுவதும் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்தச் சிறுமிக்குத் தற்கொலை என்பது பற்றி எப்படித் தெரிந்திருக்கும்? கம்யூட்டரை திறந்து கூகிளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று போட்டால் நூறு வழிகளுக்கு மேல் கற்றுத் தருகிறது இணையம். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இன்றைய சூழலில் யார் நல்லவர் யார் கெட்டர்வர் என்று எப்படிக் கண்ண்டுபிடிப்பது? இப்படியான உலகில் பிள்ளைகளை எப்படித்தான் வளர்ப்பது. அளவுக்கு மீறிய கண்டிப்பால் எதாவது செய்துக் கொள்வார்களோ என்ற பயம் ஒரு பக்கம், செல்லம் கொடுத்தால் மிஞ்சி விடுவார்களோ என்ற குழப்பம் இன்னொருபுறம். இது சவாலான விஷயமாகத் தெரிந்தாலும் லகான் நம் கையில் இருக்கையில் எந்தச் சண்டிக் குதிரையையும் நம் வசம் ஆக்கி விட முடியும்.. பாவம் இந்த சின்னஞ் சிறிய குழந்தைகளையா சரியாக வளர்க்க முடியாமலா போய்விட முடியும்.?
டிப்ஸ்
குழந்தைகளுக்காக குவாலிட்டி நேரம் ஒதுக்க வேண்டும்.
அவர்களுடைய விருப்பு வெறுப்புகள், ஸ்கூல் பிரச்னைகள், நண்பர்கள் யார், என்று எல்லா தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரம் மாத்திரம்தான் என்பதைப் போன்று அலுத்துக் கொள்ள வேண்டாம்.
தப்பு என்றால் தப்பு தான் அதை துணிச்சலாக குழந்தைக்கு உணர்த்தவேண்டும். தப்பு செய்த குழந்தைக்கு சிறிய தண்டனை கொடுப்பதில் தவறில்லை. அந்த நேரத்து வலி மட்டுமே அது. ஆனால் வாழ்நாள் முழுவதும் அவன் நல்லவனாக இருப்பான். தவறை வளர்த்துவிட்டால் வீட்டுக்குமட்டுமல்ல நாட்டுக்கே கேடு வரும் அபாயமுண்டு.
தற்கொலை, மிரட்டல் ப்ளாக்மெயில் வசனங்கள் கொண்ட திரைபப்டங்களுக்கு சென்சார் கொஞ்சம் கடினமாக்கப்படவேண்டும்.
குழந்தைகள் எமோஷனல் ப்ளாக் மெயிலர்களாக தொடர்ந்து நடப்பார்களாக இருந்தால் அவர்களை குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்களிடம் அழைத்துச் சென்று கலந்தாலோசிக்கலாம்.
பெரியவர்கள் என்றால் மனநல மருத்துவர்களின் பரிந்துரைபப்ட சைக்கோ தெரபி எடுத்துக் கொள்வது ஒரு தீர்வு. தொடர் கவுன்சிலிங்கிலும் குணப்படுத்திவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

