‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

க்ராண்ட் மாஸ்டர் ஆவேன்!

சாதனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். சாதனையாளர்களின் வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:14 am

உமா ஷக்தி.


சாதனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். சாதனையாளர்களின் வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் பெருமை. அடுத்தடுத்து சாதிக்கத் துடிப்பவர்களுக்கும் இவர்கள் முன்னுதாரணமாக இருப்பார்கள். செந்தமிழ் யாழினி அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர். 15 வயதில் யாழினி எட்டிப்பிடித்த இடம் உண்மையில் பாராட்டுக்குரியது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய விளையாட்டு இளைஞர்நலன் துரை அமைச்சகத்தின் சார்பாக இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் படிவம் 4 மூன்று முறை பெற்றுள்ளார். இந்த முறை இதன் 60ஆம் ஆண்டு தேசியச் சதுரங்கப் போட்டி சேலம் எஸ்.எஸ்.ஆர்.எம். மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிப் பெற்றுத் தங்கம் வென்றுள்ளார் யாழினி.

யாழினி குடியாத்தம், நெல்லூர்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தேசிய அளவில் வெற்றி பெருவது இதுவே முதல்முறை என்று பெருமையுடன் சொல்கிறார்கள் யாழினியின் பெற்றோர்கள் செந்தமிழ் சரவணன், சத்தியப்பூங்குழலி. ‘எங்க மகள் இந்தப் பரிசை வாங்கினது ரொம்ப சந்தோஷம். இந்தப் போட்டி யாழினிக்கு ரொம்ப முக்கியமானது. இந்தியாவில உள்ள எல்லா மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 489 சதுரங்க விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்குபெற்றாங்க. 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் தமிழ்நாடு சார்பாக எங்க பொண்ணு இந்தப் போட்டியில் பங்குபெற்றார். மொத்தம் 5 சுற்றுகளாக இந்த போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டியில் மூன்றிற்கு 2.5 வெற்றிப் புள்ளிகள் பெற்றுத் தமிழ்நாடு முதல் பரிசு பெற்றார் யாழினி.

யாழினியை வாழ்த்தி அவரிடம் பேசினோம்.

எந்த வயதில் சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தீர்கள்?

இப்ப எனக்கு பதினைந்து வயதாகிறது. செஸ் கத்துக்கறதை ஒன்பது வயசிலேதான் தொடங்கினேன். முதல்ல அடிப்படை விஷயங்களை என் அப்பா வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தார். அதன்பிறகு காட்பாடி மணிகண்டசாமி என்கிறவர்கிட்டே சில டெக்னிக்ஸ் கத்துக்கிட்டேன். எங்க ஊரு செருலங்கி, அது குடியாத்தத்துல இருக்கு. தினமும் அங்கிருந்து காட்பாடி வரை போய் வர ரொம்ப கஷ்டம். அதனால ட்ரெயினிங் எடுக்க தொடர்ந்து போக முடியலை. அப்பாவே மறுபடி பயிற்சிக் கொடுக்க ஆரம்பித்தார். அப்பறம் மதுரையில் கெளஸ் கமாருதீன் என்கிறவர்கிட்ட கோச்சிங் எடுத்துக்கேட்டேன். மூணு மாசம் இருக்கும், வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்தது கஷ்டமா இருக்கவே, அம்மா அப்பா கிட்ட சொன்னேன். அவங்க ஊருக்கே கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கப்பறம் தீவிரமா வீட்டலேயே ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பித்தேன்.

தினமும் எத்தனை மணி நேரம் பயிற்சி செய்வீங்க?

தினமும் 8 லேர்ந்து 12 மணி நேரம் வரை கடுமையா பயிற்சி எடுப்பேன். அதனாலதான் என்னால ஜெயிக்க முடிஞ்சுதுன்னு நினைக்கறேன்.

சதுரங்க விளையாட்டில் உங்களோட ஸ்பெஷாலிட்டி என்ன?

வெள்ளைக் காய்களுடன் ஆடும்போது ‘e4’ திறப்புகள் அடிப்படையில் விளையாடுவேன். கருப்புக் காய்களுடன் ஆடும்போது சிசிலியன் டிபன்ஸ், க்ருயன்பெல்ட் டிபென்ஸ் நுட்பங்களைப் பயன்படுத்துவேன்.

பள்ளியில் உங்க முயற்சிக்கு ஊக்கம் கிடைத்ததா?


ஆமா. நிறைய கிடைச்சது. என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க. நீண்ட நேரம் பயிற்சி எடுக்க வேண்டிய சூழல்ல, எங்க தலைமை ஆசிரியை தன்னோட அறையில் உட்கார வைச்சு பயிற்சி எடுத்துக்க சொன்னதை மறக்கவே முடியாது. என் அப்பா தியரி மாதிரி எழுதிக் கொடுத்தவற்றை தலைமை ஆசிரியை அறையில்தான் பயிற்சி செய்வேன்.

நாள் பூரா பயிற்சி செஞ்சிட்டு இருந்தீங்கன்னா படிப்பு பாதிக்காதா?


நான் ஒன்பதாம் வகுப்புல முதல் ரேங்க் வாங்கினேன். இப்ப பத்தாம் வகுப்பு போகப்போறேன். நிச்சயம் ஸ்டேட் ரேங்க் வாங்கிடுவேன். தவிர செஸ் விளையாட்டு எனக்கு எனர்ஜி தரும் விஷயம்தான். அதனால படிப்பது இன்னும் ஈஸியா ஆகுதுன்னு தான் சொல்லணும். செஸ் விளையாடிப் பழகியதால் படிக்கும் போது கவனம் சிதறாது. கொஞ்ச நேரம் படிச்சாலும் மனசில நல்ல பதிஞ்சிடும். எக்ஸாம் டென்ஷன் எல்லாம் இருந்ததே இல்லை. ரிலாக்ஸ்டா நிதானமா எப்பவும் இருக்க செஸ் விளையாட்டு உதவி செய்யுது.

செஸ் தவிர வேற என்ன ஆர்வம்?

கபடி பிடிக்கும். நேரு ஸ்டேடியம்ல பத்து நாள் கேம்ப் போனது மறக்க முடியாத அனுபவம். அப்பறம் ஷட்டில் விளையாடவும் பிடிக்கும். என் அக்கா செந்தமிழ் இன்மொழி மாநில அளவில் இறகுப்பந்து வீராங்கனை. நாங்க ரெண்டு பேரும் தொடர்ந்து அவங்கவங்க துறையில பயிற்சி செய்யறோம்.

உங்க உணவுப் பழக்கம் என்ன?


அம்மா சமைச்சுக் கொடுக்கறதை இது வேணாம் அது வேணாம்னு சொல்லாமச் சாப்பிடுவேன். ரெகுலர் உணவில் காய்கறி அதிகம் சேர்த்துப்பேன். ஸ்னாக்ஸ் தவிர்த்து அதுக்கு பதிலா பழங்கள் அதிகம் சாப்பிடுவேன். சரியான நேரத்துக்கு சாப்பிடணும்னு அம்மா சொல்றதைக் கேட்டுப்பேன்.

உங்க எதிர்க்கால திட்டம் என்று கேட்க, யாழினியின் தந்தை சி.செந்தமிழ்ச்சரவணன் பதில் சொன்னார்.

யாழினி க்ராண்ட் மாஸ்டர் ஆகணும். அதுக்காகத் தான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைச்சிட்டு இருக்காங்க. சர்வதேச க்ராண்ட் மாஸ்டர்களிடம் பயிற்சி பெற அவளுக்கு உதவி கிடைக்கணும். இன்னும் சில அடிப்படைக் கோரிக்கைகள் அரசாங்கம் நிறைவேற்றினா நல்லா இருக்கும்.

அரசுப் பள்ளிகளில் சதுரங்க மென்பொருட்கள், சதுரங்கப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாநில அளவில், மாவட்ட அளவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகிற மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையைப் போல தேசிய வெற்றியாளர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்பட வேண்டும்.

பெண் விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் செல்லும்போது தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

விளையாட்டுச் சங்கங்களில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் யாவரும் விளையாட்டுப் புரவலர்களாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு நிர்வாகத்திற்குள் வரக்கூடாது என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றக் கருத்தைப் பின்பற்ற வேண்டும்.

விளையாட்டுச் சங்கங்களில் பட்டியல்வகுப்பினர், பெண்கள், கிராமப்புறத்தினருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.

யாழினியின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.