‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எது சுதந்திரம்?

பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பெண்களின் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கல்வியும் பொருளாதார சுதந்திரமும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

உமா ஷக்தி.

பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பெண்களின் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கல்வியும் பொருளாதார சுதந்திரமும் அவர்களின் தனித்தன்மையை (individuality) அதிகரிக்கச் செய்துள்ளது. ‘இது என் விருப்பம், இதுவே என் தேர்வு, இந்தக் கல்யாணம் இப்போது எனக்கு வேண்டாம், உன்னை நான் காதலிக்கிறேன்’ என்று தன் வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான முடிவுகளை அவர்கள் துணிவாக எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். வேலையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி, முக்கியமாக பொறுப்பைத் தாமே ஏற்கிறார்கள்.

தனியாக வாழ, தனியாகப் பயணம் செய்யப் பெண்கள் பயப்படுவதில்லை. சில பெண்கள் தனியாக ஹோட்டல்களுக்கு, பீச்சுக்கு, சினிமாவுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். ஆணை சார்ந்து மட்டும் இயங்கி வந்த அவர்களின் உலகம் சற்று நிதானமாகி தனியாகவே சமூகத்தை எதிர்கொள்ளும் திறன் வளர்ந்துள்ளது.

ஆனால் இது எல்லா சமயங்களிலும் அவர்களுக்கு சந்தோஷம் அளிக்கிறதா என்பதை அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சுதந்திரத்தை அவர்கள் சரியான வகையில் பயன்படுத்துகிறார்களா என்பது தான் கேள்வி.

உறவுச் சிக்கல்களிலும் தேவையற்ற பழக்கங்களினாலும் சில பெண்களின் கவனம் சிதறுவதுண்டு. மது அருந்துவது, பஃப் போன்ற இடங்களுக்குச் செல்வது, நள்ளிரவு வரை நேரம் செலவழித்து வீடு திரும்புவது எல்லாம் சமீபத்தில் சில பெண்களின் வழக்கமாகி உள்ளது.  ‘இவை என் தனிப்பட்ட விஷயம்’ என்று சிலப் பெண்கள் சொல்லலாம். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு ஆண் குடிக்கும் போது அதனால் அவனுக்கு மட்டுமின்றி அவன் குடும்பத்தையும் சேர்த்து பாதிப்பதைப் போலத்தான் பெண்ணுக்கும். அது அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கும். அக்குடும்பத்தையும் பாதிக்கும். ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்.

ஆண் பெண் இருவரும் சமம் எனும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புகளைத் தவறான விஷயங்களில் நவீனப் பெண்கள் சிதறவிடக்கூடாது.ஒரு பெண் தன் அறிவையும் அன்பையும் கேடயமாக வைத்துக் கொண்டு தான் இந்தச் சமூகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும். பெண் விடுதலை என்பது அப்போதைய காலகட்டத்தில் பெரிய விஷயம் ஆனால் இப்போது அவர்களுக்கு விடுதலை கிடைத்திருந்தாலும், உண்மையில் எது சுதந்திரம் என்ற தெளிவு இன்னும் சரிவர ஏற்படவில்லை.

தானும் சந்தோஷமாக இருந்து தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்வாக வைத்திருந்து, குடும்பம் மற்றும் சமூக நலனில் அக்கறை மற்றும் பொறுப்புணர்வோடு இருந்து, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருப்பவளே வெற்றிகரமான பெண். இதைச் செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் அது சாதனையாகாது. தனி மனித வெற்றிகள் ஒரு புறம் இருந்தாலும், பெண் என்பவள் மிகப்பெரிய சக்தி. அவளுடைய ஒவ்வொரு அசையும் வளர்ச்சியை நோக்கித்தான் இருக்க வேண்டும்.

பெண்கள் இன்னும் தைரியமாகவும் நினைத்ததை விரல் நுனியில் நடத்திக் காட்டும் சாதனையாளர்களாகவும், எல்லாத் துறைகளிலும் சாதிப்பவர்களாவும் தான் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்னும் சற்று நிதானமாக இன்னும் கொஞ்சம் தெளிவுடன் அவர்களின் இந்த நீள்வழி பயணம் அமைந்துவிட்டால் இடர்பாடுகள் தடைக்கற்கள் எல்லாவற்றையும் மீறி அவர்களது கொடி விண்ணை எட்டும்.

பெண்களின் ஆதார குணங்களான அன்பு, பொறுமை, கருணை, ஈகை இவற்றை என்றும் விலகாத அணிகலன்களாக உடன் வைத்திருக்க வேண்டும். தேவையற்ற அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்றவை தற்போது அவசியம் இல்லையென்றாலும், அச்சப்பட வேண்டியவற்றுக்கு அச்சப்பட்டுத்தான் ஆகவேண்டும். 'என்று ஓர் இளம்பெண் நகைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் அச்சமின்றி தனியாக நடமாட முடிகிறதோ அன்றுதான் நாம் முழுமையான விடுதலை அடைந்தவர்களாவோம்’ என மகாத்மா காந்தி சொல்லியிருந்தாலும் இன்றளவும் அது மெய்ப்படவில்லை. இரவு வேளைகளில் பாதுகாப்பாகப் பயணம் செய்வது தான் அறிவுடைய செயல். வீரம் என்ற பெயரில்  ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளக் கூடாது. எனக்குத் தெரியும் என்று தலைக்கனத்துடன் எல்லா விஷயங்களையும் அணுகக்கூடாது. ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும்  என்ற தெளிவுடன்  நடக்க வேண்டும்

பெண்கள் படிப்றிவை மட்டுமல்லாமல் பட்டறிவையும் விரிவு செய்தபடி இருக்க வேண்டும். நிறைய படிக்கவும், நிறைய மனிதர்களுடன் பழகவும், நிறைய பயணம் செய்யவும் பெண்கள் துணிய வேண்டும். அது அவர்களின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும்

உலகம் உள்ளங்கையில் என்று ஃபோனில் டீவியில் நேரத்தை செலவிடுதைவிட இயற்கையை ரசிப்பதிலும் வாழ்க்கையை அனுபவிக்க நேரத்தைச் செலவிட வேண்டும். கலாச்சாரத்தையுக்  அடையாளங்களையும் ஒருபோதும் விட்டுவிலகக்கூடாது. அதற்காக பழமைவாதியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. புதுமையான சிந்தனைகள், நவீன ஆடைகள் என மாற்றங்கள் இருந்தாலும் வேர்களையும் மரபுகளையும் விட்டு விலகி விடக்கூடாது.

அடுத்துப் பெண்களின் மிகப் பெரிய பொறுப்பு குழந்தை வளர்ப்பு. அதில் அலட்சியம் காட்டினால் பிள்ளைகள் தடம் மாறி விடுவார்கள். நல்ல குழந்தைகள்தான் நாளைய சமூகத்தின் பக்கபலம். ஆனால் குழந்தைகளைக் காப்பகத்திலும்,விடுதிகளிலும் விட்டுவிட்டால் அவர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் அரவணைப்பு கிடைக்காமல் ஏங்கிப் போய்விடுவார்கள். வளர் இளம் பருவத்தை தனிமையில் கழிக்கும் குழந்தைகள் வளர்ந்து வேலைக்குச் சென்றபின் பெற்றோர்களை ஒதுக்கத் தானே செய்வார்கள்!  நாம் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும் என்பது பொதுவிதி. தங்களால் இந்தப் பொறுப்பை ஏற்கமுடியாது குழந்தைகளை கவனிக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவே கூடாது. திருமணமும் தேவை இல்லை என நினைக்கும் பெண்கள் தனியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறை (லைஃப் ஸ்டைல் அதிக மாற்றங்கள் அடைந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. சிறு நகரங்களில் கூட விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களைச் சூழ்ந்துள்ள அபாயகரமான உலகத்தை நன்றாக அவதானித்து அதற்கேற்றபடி பெண்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். ஏமாறுபவர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் இல்லாமல் ஒவ்வொரு பெண்ணும் ஞானச் சுடர்களாக அற்புதமான ஆளுமைகளாக உருவாக வேண்டும். பாரதி கண்ட கனவு மேன்மேலும் பலித்துக் கொண்டே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.