சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கனவல்ல... எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்

உலக சரித்திரத்தில் ஒரு மனிதனின் மரணம் இதுபோல எல்லை, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்குமா என்பது

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:29 am

ஆசிரியர்

உலக சரித்திரத்தில் ஒரு மனிதனின் மரணம் இதுபோல எல்லை, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்குமா என்பது சந்தேகம்தான். நமது தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், பெரியவர் - சிறியவர், பணக்காரர் - ஏழை, படித்தவர் - பாமரர் என்கிற அத்தனை வேறுபாடுகளையும் மீறி, எந்தவொரு பிரிவினருக்கும் மாறுபட்ட கருத்து இல்லாமல் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்றால் அது ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
 இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக்கி உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் என்பது மட்டுமல்ல அவரது பங்களிப்பு. இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின், மாணவச் செல்வங்களின் மனதில் "வல்லரசான வலிமையான பாரதம்' என்கிற நம்பிக்கையை விதைத்து, நாளைய தலைமுறையின் கனவுக் கதாநாயகனாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்பதுதான் அவரது தனிப்பெரும் சிறப்பு.
 ஜூலை 27-ஆம் நாள், மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று காலமானார் என்கிற செய்தி ஒட்டுமொத்த உலகத்தை, குறிப்பாக, இந்தியத் திருநாட்டை ஒரு விநாடி ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அடுத்த மூன்று நாள்களும், ஆங்காங்கே படத்தை வைத்து அந்த பாரத ரத்தினத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் இதயம் வடித்த கண்ணீர் கடலளவு!
 யாரும் சொல்லவில்லை. எந்தவித உள்நோக்கமோ காரணமோ கிடையாது. உணர்வால் உந்தப்பட்டு ஆட்டோ நிறுத்தங்கள், பெட்டிக் கடைகள், சிறு குடியிருப்புகள், குடிசைப் பகுதிகள் என்று எங்கு பார்த்தாலும் அவரது படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தபோதுதான், அடடா, எவ்வளவு பெரிய தாக்கத்தை இந்த மாமனிதர் இந்தியர்களின் மனதில் ஏற்படுத்தி இருக்கிறார் என்பது பலருக்கும் உரைத்தது.
 ராமேசுவரத்துக்கு அவரது உடல் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஜூலை 29-ஆம் தேதி காலையில் இருந்தே ரயிலிலும், பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவ - மாணவியர் தங்கள் லட்சிய நாயகனுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள், அதில் பலர் கைக்குட்டையால் தங்கள் வாயைப் பொத்தியபடி அழுது கொண்டிருந்த காட்சியைப் பார்த்திருக்க வேண்டும். அவருக்குக் குழந்தைகள் இருந்திருந்தால்கூட இப்படி அழுதிருக்க மாட்டார்கள் என்று நினைக்கத் தோன்றியது.
 ஒரு மனிதன் உலகப் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால், உள்ளூரில் அவரை எள்ளிநகையாடவும், அவரது செயல்பாடுகளை விமர்சிக்கவும் நான்கு பேர் இல்லாமல் இருக்கமாட்டார்கள். ஆனால், ராமேசுவரம் நகரமே அவருக்காக அழுதது. புனிதத்தலமான ராமேசுவரத்துக்கு, புதிய பல பெருமைகளைத் தேடித் தந்த மண்ணின் மைந்தனின் மறைவுக்கு ஒவ்வொரு வீடும் துக்கம் அனுசரித்தது. பாரத ரத்தினத்தை, தேசத்தின் முதல் குடிமகனை ஈன்ற திருமண் என்கிற புதிய பெருமையை ராமேசுவரத்துக்குத் தேடித் தந்த தலைமகன் அல்லவா அவர்!
 சிங்கப்பூரிலிருந்து "தமிழ் நேசர்' முஸ்தபா தொலைபேசியில் அழைத்தார். ""வேறு எந்த மாமனிதருக்கும் கிடைத்திராத இறுதி மரியாதை நமது கலாம் சாருக்கு கிடைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அவருக்குத் தமிழகத்தின் தலைநகரில் ஒரு பொது இடத்தில் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை நாம் அவரது அன்பர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? அந்தக் கடமை கலாம் சார் மிகவும் நேசித்த "தினமணி' நாளிதழுக்குக் கிடையாதா?'' என்கிற கேள்வியை எழுப்பினார்.
 கலாம் சார் நம்மிடையே உலவவில்லையே தவிர அவர் மறைந்துவிட்டார் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அஞ்சலி நிகழ்வுகள் நடத்துவது என்பதை அவரே ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம்தான். அவரது நினைவைப் போற்றுவது என்பது அஞ்சலியாக இருக்க முடியாது, வருங்கால இந்தியக் கனவின் எழுச்சியாகத்தான் இருக்க முடியும் என்கிற முடிவுக்கு நானும், கலாம் சாரின் நிழலாகத் திகழ்ந்த டாக்டர் வெ. பொன்ராஜும் வந்தோம்.
 கலாம் சார் பற்றிய "கனவல்ல... எழுச்சி!' என்கிற ஆவணப் படம் ஒன்றைத் தயாரிப்பது என்கிற எண்ணத்தை விதைத்தவர் "பாஃப்டா' திரைப்படக் கல்லூரியின் நிறுவனரான "யூடிவி' தனஞ்ஜெயன். அதற்குப் பிறகு மளமளவென்று திட்டங்கள் தீட்டினோம். குறும்படத்துடன் நின்று விடாமல், கலாம் சார் தொடர்பான பல்வேறு புகைப்படங்களுடன் கூடிய கண்காட்சி ஒன்றையும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
 நிகழ்ச்சியை எங்கே, எப்போது நடத்துவது என்கிற கேள்விக்கே இடமில்லை. ஆகஸ்ட் 23-ஆம் தேதி "தினமணி' நடத்த இருந்த தமிழ் இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வில் மேதகு டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொள்வதாக இருந்தது. அதே நாளில், அதே மாலை வேளையில், அதே இடத்தில் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி நிகழ்வை நடத்துவது என்று தீர்மானித்தோம்.
 சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் கலாம் படித்த பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகம் எங்களுடன் இந்த நிகழ்வில் இணைய வேண்டும் என்கிற எங்கள் எண்ணத்தைத் துணைவேந்தர் பேராசிரியர் இரா. தாண்டவனிடம் வெளிப்படுத்தியதுதான் தாமதம், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தைத் தந்துதவ முன்வந்தார். பிறகென்ன? "கலாம்' என்கிற பெயரைச் சொன்னாலே கனவெல்லாம் நனவாகி எழுச்சியுடன் செயல்படத் தொடங்கிவிடும் என்பதைச் சொல்லவா வேண்டும்?
 ஆகஸ்ட் 23, 2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல், சென்னைக் கடற்கரைச் சாலையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கணக்கிலடங்காத புகைப்படங்களுடன் கூடிய புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுகிறது. அன்பர்கள் கலாம் சாருக்கு மலரஞ்சலி செலுத்தி, அவர் நமக்கு அளித்திருக்கும் பத்து கட்டளைகளை உறுதிமொழி எடுத்துக் கொண்டு, புகைப்படக் கண்காட்சியைப் பார்வை இடலாம்.
 மாலை 5 மணி அளவில், "கனவல்ல... எழுச்சி!' என்கிற குறும்படம் திரையிடப்படுகிறது. கலாம் சாரின் பன்முக ஆளுமை குறித்து, பேராசிரியர் தாண்டவன், கவிக்கோ அப்துல் ரகுமான், டாக்டர் வெ. பொன்ராஜ், டாக்டர் சுதா சேஷய்யன், ஆ.ப.ஜெ.மு.ஜெ. ஷேக் சலீம், "தினமணி' ஆசிரியரான நான் ஆகியோர் உரையாற்ற இருக்கிறோம்.
 மாணவ, மாணவியரும், இளைஞர்களும் மட்டுமல்ல, சமூக, அரசியல், இலக்கிய, கலைத் துறைப் பிரமுகர்களும், பொதுமக்களும், டாக்டர் அப்துல் கலாம் என்கிற மாமனிதரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும், "வலிமையான வல்லரசான பாரதம்' உருவாக வேண்டும் என்று விழையும் தேசபக்தர்களும் ஆகஸ்ட் 23, 2015 மாலையில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது "தினமணி' சார்பில் எனது அன்பு வேண்டுகோள்!
 இந்த நிகழ்வு உங்களுக்காக நாங்கள் ஒருங்கிணைத்திருக்கும் நிகழ்வு, அவ்வளவே! இது அனைவருக்குமான நிகழ்வு, அதனால் அழைப்பிதழ் எதுவும் தேவையில்லை.
 டாக்டர் அப்துல் கலாம் வெறும் கனவல்ல.. எழுச்சி...!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.