-பெ. நாயகி
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் என்பவை வெறும் சம்பிரதாயமாகப் பார்க்கப்பட்ட காலம்போய் இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் முன்பு சொன்ன வாக்குறுதிகளில் எதையெல்லாம் நிறைவேற்றவில்லை என்று அலசி ஆராயப்படுவது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அறிகுறி. மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் எல்லா கட்சிகளுக்கும், குறிப்பாக ஆட்சிக் கட்டிலில் அமர முயற்சிக்கும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பது நல்ல விஷயம்.
மக்களின் உடனடி கவனத்தையும் ஆதரவையும் ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டு சில இலவசத் திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது.
முதியோர்களுக்கான கொள்கை- இப்போதைய மருத்துவ உலகின் முன்னேற்றமான சிகிச்சைகளின் உதவியுடன் பெரும்பாலான மனிதர்களால் சராசரியாக 70 வயது வரை வேலைக்கான தகுதித் திறனுடன் இருக்க முடிகிறது. 60 வயதில் பணி ஓய்வு கொடுத்து அனுப்பிய பிறகு, அவர்களில் தகுதியானவர்களின் அனுபவ அறிவு மற்றும் வேலைத் திறன்களை அரசுப் பணிகளிலோ, நிறுவன முன்னேற்றப் பணிகளிலோ சரியான வகையில் உபயோகித்துக் கொள்ளும் வகையில் மனிதவளக் கொள்கைகள் தேவை. மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை 2011-இல் அமலுக்கு வந்தது. தற்போதைய சமூக, காலச் சூழலுக்கேற்ற வகையில் அதைப் புதுப்பித்து தமிழக அளவில் ஒரு முன்மாதிரி ஏற்படுத்த யோசிக்கலாம்.
நெகிழி மற்றும் மின்னணுக் கழிவு அமைச்சகம்- அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வசதிப் பெருக்கங்களால் கழிவுப் பொருள்கள் மேலாண்மை என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் சூழலில் அதை வேறு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் தனி அமைச்சகம் மூலம் முழுக் கவனம் செலுத்த யோசிக்கலாம். உலகத்தையே அச்சுறுத்திவரும் மின்னணுக் கழிவுகளின் அழிப்பும் இப்போதே கவனம் செலுத்தியாக வேண்டிய ஒன்றாக மிரட்டி வருகிறது.
தூய்மைப் பணிகளின் மேம்பாடு- தூய்மைப் பணிகள் முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப்பட்டு தொடாச் செயலாக ஆக்கப்படும் வரை மனித சமுதாயத்தின் ஒருபகுதிக்கு நாம் அநீதி இழைத்தபடிதான் வாழ்கிறோம் என்பதை ஆழமாக உணர்ந்து நிவாரணம் தேட ஒரு நேர்மையான கொள்கை அவசியம்.
பிரம்மாண்ட நீர் மேலாண்மைத் திட்டம்- ஒருகாலத்தில் குறைவான மழையே பெற்று வந்த தமிழகம் இப்போது காலநிலை மாற்றங்களால் ஆண்டு சராசரியாக அதிகமாகவே மழை பெறுகிறது. ஆனாலும், சரியான சேமிப்பு வசதிகள் பெரிய அளவில் திட்டமிட்டு நிறைவேற்றப்படாததால், அதிக அளவு மழை நீரைச் சேமிக்க முடியாமல் கடலுக்குப் போக விடுவது வாடிக்கையாகி விட்டது. ஆந்திரத்திலும் அண்மையில் தெலங்கானாவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் போன்ற மிகப் பெரிய அளவிலான நீர் மேலாண்மைத் திட்டங்கள் தமிழ்நாட்டிலும் திட்டமிடப்பட வேண்டியது அவசியம்.
தானிய சேமிப்புக் கிடங்குகள்- தமிழகத்தின் மொத்த தானிய உற்பத்தியின் அளவுக்கு ஏற்ற முழுக் கொள்ளளவையும் மழையின் தாக்கம் இன்றிச் சேமித்துவைக்க கிடங்குகள் ஒரே மூச்சில் திட்டமிடப்பட்டு ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட வேண்டும். பருவம் தப்பிப் பெய்யும் மழைக்குக் கவலைப்படாதவர்களாக விவசாயிகள் ஆகும் வரை, நம் பொங்கல் கொண்டாட்டங்கள் அர்த்தமற்ற திருவிழாக்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
வடிகால் வாய்க்கால் தூர் வாருதல்- காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பிப் பெய்யும் மழையால் ஏற்படுத்தப்படும் பெரும் சேதங்களுக்குக் காரணம், பாசன வாய்க்கால்களுக்கு இணையாக இருக்கும் வடிகால் வாய்க்கால்கள் வழியே அதிகப்படி நீர் பாய்ந்தோடிக் கடலில் சேர இயலாமல், அவை ஆகாயத் தாமரைகளால் அடர்த்தியாக மூடப்பட்டுக் கிடப்பதுதான். அவை அறவே அகற்றப்பட வேண்டும்.
சமூக நலத் திட்ட ஒருங்கிணைப்பு- தமிழகத்தின் மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவனங்கள் தமது ஆண்டு லாபத்தில் 2% சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் துண்டு துண்டாக நிறைவாகவோ, குறைவாகவோ ஆங்காங்கே ஏதோ செய்கின்றன. அந்த மொத்த நிதியின் (பல நூறு கோடிகள் இருக்கும்) மேலாண்மையையும் ஒருங்கிணைத்து அரசின் முன்னுரிமைத் திட்டங்களுக்குத் திருப்பினால் நல்ல பல திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். அந்தவகைச் செலவினம், நிறுவனம், அரசு, மக்கள் என மூவருக்கும் திருப்தி அளிக்கும்.
பள்ளிகளின் தரம்- தமிழகத்தில் கல்வியின் தரமும் கற்போரின் தரமும் சந்தேகத்திற்கிடமின்றி பெரும் மேம்பாடு அடைந்துள்ளது என்பதில் இரு கருத்து இருக்காது. ஆனால், பள்ளிகளின் தரம் (கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள்) பெரிய கேள்விக்குறி. போர்க்கால அடிப்படையில் அனைத்து அரசுப் பள்ளிகளின் தரமும் உயர்த்தப்பட ஓர் அவசரத் திட்டம் வேண்டும்.
நூலகங்கள் மற்றும் நூல்களின் பெருக்கம்- தமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கை மிக அதிகம். புத்தக சந்தையில் நூல்களின் வரவும் அதிகம். இடநெருக்கடி என்கிற பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நூலகங்களில் புதிய புத்தகங்கள் இடம்பெற வேண்டுமானால், பழைய புத்தகங்கள் கழிக்கப்பட வேண்டும். அவ்வாறு கழிக்கப்படும் புத்தகங்களைக் கையாள்வது குறித்த தெளிவான கொள்கை அத்துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையோடு வகுக்கப்பட வேண்டும்.
அத்தகைய புத்தகங்கள் வீணாகி விடாதவாறு புத்தகம் வாங்க வசதியற்ற ஏழை வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு செயலாக்கம் பெற வேண்டும்.
இத்தகைய கோணங்களிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அமையுமானால், எதிர்கால தலைமுறையினர் குறித்த அக்கறை கொண்ட அரசு தமக்கு அமையப் போகிறது என்கிற திருப்தி பொதுமக்களுக்கு ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?
கொள்கையில்லாத கூட்டணிகள்

கொள்கையில்லாத கூட்டணிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


