ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

நீரின்றி அமையாது உலகு

கிராமப்புற குழந்தைகளிடம் மழைநீர் சேமிப்பு தொடர்பாக அவர் உரையாடிய போது கிராமத்து சிறுவன் ஒருவனிடம் மழை நீரை எங்கு சேமிக்கலாம் எனக் கேட்டுள்ளார்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 7:20 am IST

அண்மையில் உதகமண்டலம் நகராட்சி ஆணையர் ஒரு நல்ல பணியைச் செய்துள்ளார். வீட்டு உபயோகத்துக்கு நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளில் மின்சார மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவோருக்கு அபராதம் விதிப்பது தொடர்பான அறிவிப்பு அது. வீடுகளில் இவ்வாறான முறைகேட்டில் ஈடுபட்டால் ஐந்தாயிரம் ரூபாயும் வணிக நிறுவனங்களில் இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபட்டால் ரூ. 25 ஆயிரம் என அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ உள்ளிட்ட காலநிலை மாற்றச் சூழலில் அங்கு இருக்கக்கூடிய நீர் வளம் குறைவதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு அந்த நிர்வாகம் நகர்ந்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும் நீர்வளத்தை முறையாகப் பராமரிக்க முன்வந்துள்ள அந்த நகராட்சி, நீர் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்குத் தொடக்கப் புள்ளியாக அமையட்டும்.

முந்தைய காலங்களில், குறிப்பாக கிராமங்களில் குளத்து நீரை கொண்டு வந்து அப்படியே வடிகட்டக் கூடச் செய்யாமல் அருந்திய காலம் உண்டு. வாய்க்கால்களில் சென்ற நீரையும் அருந்தியது உண்டு. பிறகு தனிப்பட்ட நபர்கள் அவரவர் வீடுகளில் கிணறுகள் தோண்டி தண்ணீர் எடுத்து பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தினர்.

இதே காலகட்டங்களில் சுமார் 1980-களில் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பெரிய அளவில் தோண்டப்பட்ட கிணறுகள் இருக்கும். அவற்றை சாவடி கிணறுகள் என்று அழைப்பார்கள். அந்தக் கிணற்றில் பல ராட்டினங்கள் இருக்கும். வீடுகளில் கிணறுவசதி இல்லாத பலரும் அந்தக் கிணறுகளுக்குச் சென்று, அந்த ராட்டினங்கள் மூலம் தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்துவர்.

நாகரிகப் பரிணாமத்தில் நிலம் திரிந்து அதனால் நீரும் திரியத் தொடங்கிய பின்னர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்ற கருத்தோட்டத்துக்கு வரத் தொடங்கினோம். இதனால் கிராம, நகர வேறுபாடின்றி அனைத்துப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பாகிவிட்டது.

ஆரம்ப காலங்களில் குடிப்பதற்கு மட்டும்தான் உள்ளாட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் குறித்த நேரங்களில் மட்டுமே விநியோகிக்கப்படும். தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் பிடித்துவைத்துக் கொள்வர். மற்ற உபயோகங்களுக்கு வீட்டில் உள்ள கிணற்றுத் தண்ணீர்தான் உபயோகப்படுத்தப்படும். இது இல்லாத நிலையில் குளம், பொதுக் கிணற்றிலிருந்து கொண்டுவருவர்.

பின்னர், இந்த நிலை மாறி வீட்டின் அனைத்துத் தேவைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் வளம் வற்றாமல் இருக்கும் வரை மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீரை இவ்வாறு வழங்க இயலும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இன்றைக்கும் ஆங்காங்கே கிணறுகள் இருக்கலாம். பல்வேறு தனி நபர்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக அவை பயன்படுத்தப்படலாம். ஆனால், இன்றைக்கு கிராமங்களில் யார் ஒருவரும் கிணறு எடுப்பது என்ற நடைமுறையே கிடையாது. இருக்கும் எந்தப் பொதுக் கிணறும் பராமரிக்கப்படுவதோ பயன்படுத்தப்படுவதோ கிடையாது. தேவைப்படும் தனி நபர்கள் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெரும்பாலான கிராமங்களில் தெருக்குழாய் இணைப்புகளில் நேரடியாக மின்சார மோட்டார் மூலம் தண்ணீரை இரைத்துக்கொள்ளும் போக்கு அளவுக்கு அதிகமாகி விட்டது. குடிநீர்த் தேவைக்கான தண்ணீரை தோட்டங்கள், கால்நடை பராமரிப்பு போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்துவதும் இயல்பானதாகிவிட்டது.

உதகமண்டலம் நகராட்சியைப் போல ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் சீராக அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது சாத்தியப்படும். குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்புதான். இதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால், அதே நேரத்தில் மக்களுக்கும் அவரவர் வீடுகளில் மழைநீர் சேமிப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய கடமையையும் நினைவில் நிறுத்த வேண்டும்.

2004-களில் புதுதில்லி தேசிய கல்வி ஆராய்சி பயிற்சி நிறுவன பணிமனைக்கு சென்ற போது, அங்கு உரையாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கிராமப்புற குழந்தைகளிடம் மழைநீர் சேமிப்பு தொடர்பாக அவர் உரையாடிய போது கிராமத்து சிறுவன் ஒருவனிடம் மழை நீரை எங்கு சேமிக்கலாம் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவன் தண்ணீர் பாட்டிலில் சேமிப்பேன் என்று கூறினானாம்.

இந்த அனுபவத்தைப் பகிர்ந்த அவர், அந்த சிறுவன் குளம், ஏரியில் சேமிப்பேன் என்று சொல்லியிருந்தால் அவனது கிராமத்தின் தண்ணீர் தேவையைப் பற்றி யோசிக்கிறான் எனப் பெருமைப்பட்டிருப்பேன். ஒருவேளை கிணற்றில் என்று சொல்லியிருந்தால்கூட அவனது வீட்டின் தேவையை யோசிக்கிறான் என்று மகிழ்ந்திருப்பேன். ஆனால், தண்ணீர் பாட்டிலில் என்று பகிர்ந்ததன் மூலம் அவனது அந்த நாளையத் தேவையைக்கூட அல்ல, அந்த மணி நேரத்தின் தேவையை மட்டுமே யோசிக்கிறான் என்று வருத்தப்பட்டேன் என்றார்.

அவர் பகிர்ந்த காலகட்டமான 2004-ஆம் ஆண்டிலேயே இந்த நிலை. இன்றைய சிறுவர்களிடம் கேட்டால் ஏன் சேமிக்க வேண்டும்; அதுதான் காசு கொடுத்தால் கிடைக்கிறதே என்றுகூடக் கூற வாய்ப்புள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.