அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பொறுப்பால் உயரும் பெருமை!

அதிகாரம் கையில் இல்லாதபோது பணிவாக இருப்பவர் பதவி கிடைத்த பின்னும், அதே பணிவை வெளிப்படுத்தினால் அப்பதவி அவரால் அழகு பெறுவதைப் பற்றி...

News image

பொறுப்பால் உயரும் பெருமை! - படம்: எக்ஸ்பிரஸ்.

Updated On :26 ஏப்ரல் 2026, 11:30 pm

தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும். ஒரு சிறந்த தலைமைக்கு, மண்ணையும் பொன்னாக்கும் வல்லமை உண்டு. ஒரு தலைவனின் தொலைநோக்குப் பார்வை, நம்பிக்கை மற்றும் உழைப்பால் நிகழும் ரசாயன மாற்றம் அது என்றும் சொல்லலாம். பதவி என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரபூர்வமான தளம். ஒருவர் தன் பதவியை சரியாகப் பயன்படுத்தினால், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பை சீரமைத்து அதன் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த முடியும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியை, அதன் தலைமை ஆசிரியர் ரவி காசிவெங்கட்ராமன் தன் முயற்சியால் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) பெற்று சிறந்த உள்கட்டமைப்புகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியுள்ளார். 2021-ஆம் ஆண்டு அந்தப் பள்ளிக்கு அவர் பணியிடமாறுதலில் வந்தபோது ஒரு சவாலான சூழலையே எதிர்கொண்டார்.

அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் பின் தங்கிய நிலையில் அந்தப் பள்ளி இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் அந்தப் பள்ளியை மிகச் சிறந்த பள்ளியாக தரம் உயர்த்திக் காட்டிவிட்டார். தற்போது அந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எப்படி அவரால் இது சாத்தியமாயிற்று? அது என்ன சிஎஸ்ஆர்?. இந்திய சட்டப்படி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் லாபமீட்டும் பெரிய தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் குறைந்தபட்சம் இரண்டு சதவீதத்தை சமூக நலத் திட்டங்களுக்காக செலவிட வேண்டும்.

நிறுவனங்கள் இந்த நிதியை நேரடியாகவோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். ஒரு பள்ளி, கல்லூரி, நிறுவனம் மற்றும் அரசுத் துறை என எதுவாக இருந்தாலும் அங்கு தலைமைப் பதவியில் இருப்பவர் உள்ளார்ந்த அக்கறையோடும், ஆர்வத்துடனும் செயல்பட்டால் மட்டுமே அந்த நிறுவனம் அல்லது துறை வளர்ச்சியடையும். ஒருவர் பணியிடமாற்றம் பெற்று ஒரு நிறுவனத்துக்கு வந்தால், அவர் பொறுப்பேற்ற அந்த விநாடியிலிருந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும்.

அதே போல தலைமை பொறுப்பில் இருப்பவர் அங்குள்ள அனைத்துக் குறைகளையும் நிவர்த்தி செய்ய முயல வேண்டும். அப்படி தன் வேலையை நேசிப்பவர்கள், கடுமையாக உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைவு. சிலரின் பணிக்காலத்தைப் பொற்காலம் என்று கூறி மகிழ்கிறோம்; பாராட்டுகிறோம். ஒருவரின் பணி என்பது வெறும் வாழ்வாதாரத்துக்காக செய்யும் வேலையாக மட்டுமல்லாமல் அது ஒரு தவம் போலவும், அறமாகவும் மாறும்போது அது பொற்காலம் ஆகிறது. அவர்கள் சவால்களைக் கண்டு பின்வாங்குவதில்லை. தன் உயர்ந்த நோக்கம் நிறைவேறும் வரை அயராது உழைக்கிறார்கள்.

எந்த ஒரு சூழலிலும் சமரசம் செய்துகொள்ளாத நேர்மையும், சோர்வறியா உழைப்பும், நெருக்கடியான நேரங்களில் எடுக்கும் முடிவுகளும் அந்தப் பதவிக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது. பதவியில் இருப்பவர்களால் மட்டுமே அந்த நிறுவனத்தை உயர்த்த முடியும். பதவி அதற்கான ஆயுதம். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து விதிகளையும் பயன்படுத்தி, நிதி பெற்று அந்த நிறுவனத்தை உயர்த்த வேண்டும். பல இடங்களில் நிரந்தர தலைமையை நியமிக்காமல் பொறுப்பு முதல்வர் என ஒருவரிடம் நிர்வாகத்தைக் கொடுக்கிறார்கள்; பொறுப்பு தலைமையால் பெரிய முடிவுகளை எடுக்க முடியாது.

தற்போது பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றிச் செயல்பட்டு வருகின்றன. இவை நிர்வாகக் குழுக்களால் நடத்தப்படுகின்றன. எவ்வளவு மாதங்களாக ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பது? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எதிர்பாராமல் காலமாகி விட்டால் அடுத்த தேர்தல் வரும்வரை அந்தத் தொகுதி பிரதிநிதி இல்லாமல் இருக்கிறதா? அல்லது பொறுப்பு சட்டப்பேரவை உறுப்பினர் என்று எவரையாவது நியமிக்கிறார்களா?- இல்லையே? அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த முடிகிறது. அவ்வாறு எல்லா தலைமைப் பணியிடங்களையும் விரைந்து நிரப்பினால் ஒரு நிறுவனம் வேகமான வளர்ச்சியை எட்டும். அப்படி நிரப்பப்படாமல் இருக்கும்போது தேக்கம் ஏற்படத்தானே செய்யும்?.

தலைமைப் பண்பு என்பது ஒரு தனிப்பட்ட கலை. ஒரு கல்லூரியில் ஒருவருக்கு தலைமைப் பதவியை அளிக்க முன்வந்தபோது, அந்த நபர் தான் தொலைவில் இருந்து வருவதாகவும் அதன் காரணமாக பதவியை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கூறி மறுத்துவிட்டார். அதனால் வேறு ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அதன் பின் முதலாமவர் எதற்கும் ஒத்துழைப்பு நல்காமல், எல்லாவற்றையும் குறை கூறிக்கொண்டே இருந்தார்; இது அழகல்ல. சிலர் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள். எவரையும் கலந்து ஆலோசிக்க மாட்டார்கள். மற்றவரிடம் கடுமையான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார்கள். அவர் கீழ் பணிபுரிபவர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருப்பார். சிலர் குழுவினருடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். அங்கு இணக்கமான சூழல் இருக்கும்.

ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து வேலை செய்வார்கள். சிலர் மென்மையாகப் பேசி, இலக்கினை புரிய வைத்து, அனைவருடனும் கைகோத்துக் கொண்டு செயல்படுவார்கள். இவர்கள் சிறந்த தலைமைக்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவருக்கும் படிப்படியாக உயர்ந்து தலைமைப் பதவியை எட்ட வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். சிலருக்கோ அத்தகைய வாய்ப்பு கிட்டாமலேயே போய்விடுகிறது. சிலர் பேராசிரியராக இருக்கும் போது எந்த விதிக்கும் கட்டுப்படாமல், மறைமுக ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

எந்த வேலையையும் எடுத்துச் செய்யாமல் நழுவி விடுவார்கள். அதே நபர் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது, எல்லோரும் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?. சிலர் பதவிக்காலத்தில் தன் வளர்ச்சி, தன் முன்னேற்றம் மட்டுமே முக்கியம் என்று அலுவலக நேரத்தையும் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய சுயவிவரக் குறிப்பை நீண்ட பட்டியலாக மாற்றிக் கொள்வார்கள். அப்போது அவர்களின் கவனம் எப்படி பொதுநலத்தில் இருக்கும்?.

மாறாக, சிலர் தன் பதவிக்காலத்தில் முடிந்த அளவு தன் நிறுவனத்தை கைத்தூக்கிவிட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தன்னையே மறந்து எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அந்த நிறுவனத்தின் முன்னேற்றம் மட்டுமே முக்கியம் என்று திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் மற்றவர் கண்களுக்கு பிழைக்கத் தெரியாதவர்கள்.

ஒரு நிறுவனத்தை ஒருவர் பதவியில் இருக்கும்போது, அரும்பாடுபட்டு, அதைப் பல நிலைகளிலும் வளர்ச்சி அடைய வைத்திருப்பார். அவருக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்தவர் தன் மோசமான திட்டங்கள், அணுகுமுறையால் அதைக் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குவதும் உண்டு. அந்த நிறுவனம் அப்படியே சீட்டுக் கட்டு சரிவது போல் சரிந்து விடும். இது போன்ற அதிகாரிகள் எத்தகைய வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாகவே இருப்பார்கள். ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதை அப்படியே தொடர்வது நல்லதுதானே?

பல அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் தரம் உயர்த்தப்பட்டு தனியார் கல்வி நிறுவனம்போல நிமிர்ந்துநிற்கின்றன. அதற்குக் காரணம் அந்த பதவியில் இருப்பவர்கள். ஒருசில பள்ளியால் முடியும்போது ஏன் எல்லா பள்ளிகளிலும் முடியாது? நிதியுதவி அளிக்கத் தயாராக இருக்கும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி உதவியைப் பெறுதலில் முனைப்புக் காட்டலாமே?. தான் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைய வேண்டாமா?. இந்த எண்ணம் இல்லாதவர்கள், அந்தப் பொறுப்பை ஏற்கக் கூடாது.

எந்த வளர்ச்சியைப் பற்றியும் அக்கறை காட்டாமல், காலத்தை ஓட்டுபவர்கள் தயவுசெய்து பதவியை ஏற்றுக் கொள்ளாமல் மறுதலித்துவிட வேண்டும். திறமை ஒதுக்கப்பட்டு வெறும் பொம்மை அமரக் கூடாது. முடிவாக, ஒரு நிறுவனம் புத்துயிர் பெறுவதற்கு நவீன வசதிகளும், போதுமான நிதி ஆதாரங்களும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது அதை வழிநடத்தும் தலைவரின் ஆளுமை; அவரைப் பார்த்து மற்றவர்களும் உத்வேகம் அடைவர். பதவியில் இருக்கும் போதே எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவும் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்பவர்களின் பெயர்கள் கல்வெட்டில் செதுக்கிய எழுத்துப்போல மக்கள் மனதில் பொறிக்கப்படும். பதவிக் காலத்தை வீணே கழிப்பவர்களின் பெயர்கள் நீர்மேல் எழுத்துப்போல மறைந்துவிடும்.

அதிகாரம் கையில் இல்லாதபோது பணிவாக இருப்பவர் பதவி கிடைத்த பின்னும், அதே பணிவை வெளிப்படுத்தினால் அப்பதவி அவரால் அழகு பெறுகிறது. பதவி கிடைத்தவுடன் குணம் மாறுபவர்கள் அந்தப் பதவியின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். ஒருவர் தன் அறிவாலும், அனுபவத்தாலும், மனிதநேயத்தாலும் ஒரு பதவியின் மதிப்பை உயர்த்துகிறார். பதவி என்னும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிட்டுவதில்லை. எனவே, பதவி கிட்டியவர்கள் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். தலைமைக்கென ஓர் இலக்கணம் உண்டு. அதிலிருந்து வழுவாமல் தன் நிறுவனத்தை உயர்த்த வேண்டும். அதுவே பதவிக்கான அறம்.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.