"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி' என்றால், அந்த மூத்தகுடியின் தலைப்பிள்ளையாய்த் திகழ்ந்தது புலவர் குடி. தொன்மைக் காலந்தொட்டுத் தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிக செல்வாக்குப் பெற்றவர்கள் மன்னர்கள்தான். மூவேந்தர்கள் தொடங்கிப் பல அரசமரபினர் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர். குறுநில மன்னர்களாகிய வேளிர்களும் தங்களுக்குரிய நிலப்பகுதியிலிருந்து சிறந்த ஆட்சியை வழங்கியிருக்கிறார்கள்.
உண்மையில் தமிழக வரலாற்றில் பெருஞ்செல்வாக்கோடு காலம் முழுவதும் ஆளுமைத் திறத்தால் கொடிகட்டிப் பறந்தவர்கள் புலவர்கள்தான். அரியாசனத்துக்கு இணையான சரியாசனம் அமைத்து அரசனுக்குச் சமமான, அரசனினும் உயர்ந்த நிலையில்
இருந்து இந்தச் சமுதாயத்தைச் செங்கோலுக்கும் முந்தித் தன் எழுதுகோலால் வழிநடத்தியவர்கள் புலவர்களே. சங்கம் அரசவைக்கு நிகரான தமிழவையாகத் திகழ்ந்திருக்கிறது. எல்லா மொழிக்கும் இத்தனை சிறப்பு அமைந்து விடுவதில்லை. தமிழ்ச்சங்க அமைப்பு பாரிசில் பதினான்காம் லூயி நிறுவிய ராயல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் உடன் ஒப்பிடத்தக்கது.
இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிற அக, புற இலக்கியச் செல்வங்களையெல்லாம் தந்திருக்கிற அப்புலவர் பெருமக்கள் வாயிலாகவே மன்னர்களின் வரலாற்றையும் அறிய முடிகிறது. மன்னர்களின் குரலாகவே தம் குரலை உரக்க ஒலித்து வரலாற்றின் திசைகளில் தங்களை நிறைத்துக் கொண்டவர்கள் புலவர்கள்தான்.
அந்த வரிசையில் மன்னர்களே புலவர்களாக இருந்துதான் தம் பதிவுகளைப் படைத்துள்ளார்கள். ஏனைய மன்னர்களின் குரலாக ஒலித்தவர்களும் புலவர்கள்தாம். அதிலும்கூட மன்னனின் குரலாக அல்லாமல் தன் குரலையே - அறத்தின் குரலையே - மன்னனின் குரலாக ஒலித்திருப்பதுதான் சிறப்பு. முல்லைக்குத் தேரீந்து வரலாற்றில் பேரிடம் பெற்ற வள்ளல் பாரியின் குரலாக விளங்கியவர் வாய்மொழிக் கபிலர்.
முல்லைக் கொடிக்குத் தேர் தந்தது தொடங்கிப் பாரியின் வாழ்வியற் பதிவுகளை உற்ற தோழராயிருந்து பதிவிட்டவர், மூவேந்தர் முற்றுகையிட்ட வேளையில் பாரியாகவே மாறி அவர்களை எச்சரிக்கிறார். இதுபோன்றே ஒüவையார், கோவூர்க்கிழார், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பல புலவர்கள் மன்னர்களோடு இணைந்த உறவு கொண்டு விளங்கியிருக்கிறார்கள். மோசிகீரனாரைப் போல மன்னர்களிடம் பெருமதிப்பு மிக்க புலவர்களையும் பிசிராந்தையாரைப் போல உயிர்நட்புப் பூண்ட புலவர்களையும் காணலாம்.
நம்முடைய தமிழ் வரலாறு புலவர்களின் மெய்ம்மை நிறைந்த பாக்களாலேயே நிறைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் மன்னர்கள் புலவர்களின் பொன்போலும் சொல்லைப் பெரிதும் மதித்துப் போற்றினர். இலக்கிய மரபில் மன்னனை, "அவன்' என்றும் புலவரை, "அவர்' என்றும் சுட்டும் மரபு இன்றும் தொடர்வது புலவர்களின் செல்வாக்கைப் புலப்படுத்தும்.
இனம், மொழி, இயற்கை உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் பதிவுகளையும் திறம்பட கையாண்டவர்கள் புலவர்கள்தான். இவற்றைவிடப் பெரிதினும் பெரிதாக உலக மேன்மைக்கான சிந்தனைகளையும் தங்கள் வாழ்க்கையில் பயிற்சியாக மேற்கொண்டு அவற்றில் வெற்றி கொண்டு அதையும் அறமாக்கி உலகுக்கு அறிவித்த பெருமையும் அவர்களுக்கே உண்டு.
இத்தனை ஆற்றல் மிகுந்த புலவர்குடி, மன்னர்கள் கொட்டிக் கொட்டிக் கொடுத்த போதும் வறுமையையே தன் வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்னுக்கோ, புகழுக்கோ ஏனைய புற இன்பங்களுக்கோ தன் தமிழை விற்பதில்லை; விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் ஒருபோதும் மயங்குவதில்லை என்னும் பெற்றியோடு மன்னன் பக்கம் நில்லாது, மக்கள் மனத்தில் நிலைத்து நின்றார்கள். முற்றொருமைக்கு மாறாகத்
தன்மானம் குன்றாது தலைநிமிர்ந்து வாழ்கிற பெருவாழ்வு அவர்கள் விருப்பத்திற்குரியதாக இருந்தது. ஒவ்வொரு புலவரும் ஒரு மன்னனின் அவைக்களப் புலவராக இருப்பதே சிறப்பு என்று கருதப்பட்டாலும் பெரும்புலவர்கள் பலரும் சுதந்திரப் பறவைகளாகவே உலா வந்திருக்கிறார்கள். ஆயினும் ஆட்சி செய்வோரைச் சார்ந்து வாழ வேண்டிய போக்கு பாரதியார் வரையிலும் தொடர்ந்திருப்பதை நாம் அறிகிறோம்.
ஆதிகாலம் தொட்டே வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்ட தமிழ் நிலத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களும் ஒரு நிலத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், அவர்கள் ஒருக்காலும் ஒன்றிணைந்து பெரும்பான்மையும் இயங்கியதில்லை. ஒருவரை ஒருவர் பூசல்கொண்டு போரிட்டு வென்று அழித்தே ஆட்சி செய்தனர் என்றாலும் அவர்கள் யாவரும் தமிழுக்காக மட்டும் தங்கள் உயிரையும் தரத் தயாராக இருந்தனர். இதற்கும் அடிப்படையாக விளங்கியவர்கள் புலவர்களேயாவர். தன் வாழ்நாளை விடவும் தமிழ் வாழும் சிறப்பினையே மன்னன் விரும்பியதற்கு ஒüவைப் பெருமாட்டியின் உள்ளங்கை நெல்லிக்கனியே நற்சான்று.
ஒற்றுமை கண்டவிடத்துப் புலவர்கள் மகிழ்ந்ததைப் போல வேறு எவரும் மகிழ்ந்திருப்பார்களா என்பது தெரியவில்லை.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரின் பார்வையில் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவச் சோழனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிப் பாண்டியனும் இணைந்திருந்த காட்சி மகிழ்ச்சியை நல்குகிறது. "நீங்கள் இருவரும் ஒன்றுபட்டிருந்தால் கடல்சூழ்ந்த உலகம் முழுதும் பயன் எய்தும்; நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுக' என்று வாழ்த்துகிறார்.
இனம், மொழி, வர்க்க பேதங்களைக் கடந்த உலக மானுட மேன்மையை முன்னிறுத்தி உயிரிரக்கப் பண்பைத் தாங்கித் தாங்களே முன்னின்று வாழ்ந்து காட்டிய பெருஞ்சான்றாளர்களாகப் புலவர்களே திகழ்கிறார்கள். போர்வெறி கொண்ட மன்னர்களைத் திருத்தி அறநெறி கொள்ளச் செய்ததும் காமக் கடலில் மூழ்கித் தத்தளித்தவர்கள் வீட்டின்பம் உணருமாறு ஆன்மிக ஒளிகாட்டித் திருத்தியதும் புலவர்கள்தான்.
புலவர்கள் வாயில் புகழுரை கேளாத மன்னர்கள் இகழென்றே கருதி வருந்தினார்கள் என்பதை முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் இவ்வாறு கூறுகிறார்.
"வேற்றுமை இல்லா
விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல
மாய்ந்திசினோர் பலரே;
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப (புறம். 27)
உயர்வுதாழ்வற்ற நற்குடிப் பிறந்த மன்னரை நினைத்தால், புகழும் பாட்டும் பெற்றவர்கள் சிலர் மட்டுமே. தாமரையின் இலைபோலப் பயனின்றி இறந்தவரே பலராவர். அவருள்ளும் புலவரால் பாடப்பெற்ற பெருஞ்சிறப்புடையோர் மனிதர்கள் இல்லாத வானவூர்தியில் செல்லும் நிலைபெற்றவர்கள் என்பது இதன் பொருளாகும். நன்மை கண்ட விடத்துப் புகழ மட்டுமன்றித் தீமை கண்டவிடத்து இகழவும் அஞ்சாதவர்கள் புலவர்கள். அதனால்தான் வில்லை ஆயுதமாக உடையவர்களின் பகையைக் கொண்டாலும் தப்பலாம்; மாறாகச் சொல்லை
ஆயுதமாக உடைய புலவர்களின் பகையை ஒருபோதும் கொண்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கின்றனர்.ஒருநாட்டின் ஆட்சி மன்னவன் திறத்தால் நிகழ்ந்தாலும், அதைப் புலப்படுத்தும் பொறுப்புப் பெற்றுப் புலவர்கள் நீதியரசர்களாக விளங்கியிருக்கிறார்கள். கல்வி, அறிவியல், வணிகம், இயற்கை, சமுதாயச் சூழல், மானுடம் என்று புலவர்கள் பாடாத துறையே இல்லை எனலாம். மன்னனின் வரிவிதிப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பிசிராந்தையாரைவிட வேறு யார் சிறப்பாகப் பாடி விட முடியும்?
தமிழுக்கு எவ்வாறு ஏனைய மொழி, இன, எல்லைகளின் பேதமில்லையோ அதுபோலவே பால்பேதமுமின்றித் தன்னைத் தழுவிய யாவரையும் புலவராக்கிப் பெருமைப்படுத்தியது. பெண்பாற் புலவர்களின்
தொகையை சங்ககாலம் தொடங்கிச் சமகாலம் வரையிலும் கணக்கிட்டால் அதுவும் எண்ணிறந்ததாகும்.
மாநிலமாளும் மன்னர்களும் கூடப் பலரும் புலவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதனை விடவும் மண்ணைப் படைத்த மகேசனே தமிழ்த் தலைவனாகத்தான் போற்றப்படுகிறார். நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண் என்று போற்றுவார் அப்பர் சுவாமிகள். அருளாளர்கள், சித்தர்கள், ஞானியர் பலரும் புலவர்களாகவே போற்றப்பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் தமிழ்க்குடியின் தலைப்பிள்ளையாக விளங்கியது புலவர்குடி என்று போற்றுகிறோம்.
மொழியாட்சி செய்யும் நாட்டில் ஏனைய எல்லாச் செல்வங்களும் செழித்திருக்கும். அதிலும் அறிவுச் செல்வமாகிய இலக்கியங்கள் தழைத்தோங்கி வளரும். புலவனுடைய உயிரும் மனமும் மிக நுண்மையானவை. அவை அடிமை நாட்டில் தோன்றுவதில்லை. ஒரே வழித் தோன்றினாலும், நிலைத்து வாழ்வதில்லை. கலைஞன் மனம் பரந்தும் விரிந்தும் இருப்பதாகும். அத்தகைய மனநிலையை அடிமையாக வாழ்பவர்கள் போற்றுவதில்லை. குறுகிய மனப்பான்மையும், பிளவுபட்ட மனமுமே அடிமை நாட்டின் அடிப்படை. இதில் எவ்வாறு கவிஞன் தோன்ற முடியும்? என்பார் அ.ச.ஞா.
பல கோடிக்கணக்கில் புலவர்கள் தோன்றியிருந்தாலும், எல்லாப் புலவர்களும் வரலாற்றில் இடம்பெற்று விடவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் தன் படைப்புகளின் மூலம் தான் சார்ந்த சமுதாயத்தை உயர்த்த இயங்கியவர்கள் இந்தப் புலவர்கள். "என்றுமுள தென்தமிழை இயம்பி இசைகொண்டு, எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம்' என்று உலகுக்கு உயர்வூட்டும் புலவர்குடி என்றும் தழைத்தோங்கட்டும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒழுக்கமும், நல்ல எண்ணங்களும் தேவை!

பொய்யடிமை இல்லாத புலவர்

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

வள்ளுவரின் புகழ்பாடும் கோயில்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


