நீரின்றி அமையாது உலகு!
உலகளவில் சோமாலியாவும், மெக்சிகோவும்தான் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்தன.


வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்
உலகளவில் சோமாலியாவும், மெக்சிகோவும்தான் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்தன. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் தண்ணீர்ப் பஞ்சத்தில் மிகுதியாகப் பாதிக்கப்பட்டது. இந்தளவில் பெங்களூரு, பெய்ஜிங், ஜகார்த்தா, கெய்ரோ, மாஸ்கோ, இஸ்தான்புல், மெக்சிகோ, லண்டன், டோக்கியோ, மியாமி முதலிய நகரங்களும் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்படும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
உலகில் 122 நாடுகளின் தரவரிசையில் தண்ணீர் பற்றாக்குறை, நல்ல தண்ணீர் கிடைக்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் கடைசியாக 120-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இப்படி தண்ணீர்த் தட்டுப்பாடு வரும் என்று ஐ.நா. மட்டுமல்ல, முந்தைய திட்டக் குழுவும், தற்போதைய நீதி ஆயோக் அமைப்பும் எச்சரிக்கை விடுத்ததையெல்லாம் நாம் புறந்தள்ளினோம்.
குளங்கள் தூர்வாரப்படவில்லை. ஆற்று மணலை கொள்ளையடித்து விற்றாயிற்று. மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டோம். இயற்கையை கபளீகரம் செய்துவிட்ட பிறகு சாதாரண பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மட்டுமல்லாமல் கோவில்பட்டி, தூத்துக்குடி நகர், விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வரை உள்ள மக்களின் தாகத்துக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் பயன் அளிக்கிறது. பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களை கடல்நீரைக் குடிநீராக்கி பயன்படுத்தும்படி கூறிவிட்டு, தாமிரவருணி தண்ணீரை மக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே வைக்காதது யார் குற்றம்?
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதேதான் நிலைமை. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ரேஷனில் தண்ணீர் வழங்குவதையும், அங்குள்ள மக்களின் துன்பத்தையும் சொன்னபோது, இப்படியெல்லாம் தமிழ்நாட்டுக்கு வராதுங்க. சும்மா பயமுறுத்தாதீங்க என்றார் ஒருவர். இத்தனைக்கும் அவர் மக்களின் பிரதிநிதியாக நீண்டகாலம் இருந்தவர்; இப்போது தண்ணீர்ப் பஞ்சம் தமிழகத்துக்கே வந்துவிட்டது.
நம்மிடம் தொலைநோக்குப் பார்வையில்லை. காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு சிந்திக்காத, புரிதலில்லாத காரணத்தால்தான் தீர்க்க முடியாத தண்ணீர்ப் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது.
சென்னையில் சில உணவு விடுதிகள் மூடப்படும் நிலை; மருத்துவமனைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. சென்னையில் 13 மருத்துவமனைகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் நிலத்தடி நீரில் கடல்நீர் சேர்ந்து அந்தத் தண்ணீர் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆகிவிட்டது.
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி, பேரூர் போன்ற இடங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் உப்பு நீக்கப்பட்டு கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம் குளோரைடு, பொட்டாஷியம் ஃபுளோரைடு போன்ற முக்கிய சத்துகள் நீரில் திரும்பவும் சேர்க்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மெக்சிகோவில்தான் பெரிய திட்டமாக அமைந்துள்ளது. அடுத்து அரபு நாடுகளில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உப்புநீரை நன்னீராக்கும் 20,516 ஆலைகள் உள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுக்கு சராசரி மழைப் பொழிவு 960 மில்லிமீட்டர் ஆகும். கடந்த 2018-இல் 810 மி.மீ.தான் மழைப் பொழிவு இருந்தது. 2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே மே மாதம் வரை 100-லிருந்து 150 மி.மீ. மழைப் பொழிவு இருந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 34 மி.மீ. மழைப் பொழிவுதான் இருந்தது.
சென்னை குடிநீர் வாரியத்துக்கும், மற்ற பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கவும் போதிய நிதி ஒதுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அதைத் தமிழக அரசு செய்யவில்லை. கிராமப்புறங்களில் புதிய ஆழ்துளை குடிநீர்க் கிணறுகள், பழுதடைந்த குடிநீர்க் குழாய்கள், பாழடைந்த குடிநீர் கிணறுகள் ஆகியவற்றை சீர் செய்திருக்க வேண்டும்.
தேனி நிலத்தடி நீர் அதிகமுள்ள வட்டாரம் என்றாலும் அங்கும் குடிநீர்ப் பஞ்சமே. காவிரி பாயும் திருச்சியிலும் 1,000 அடிக்கும் அதிகமாக ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதேபோல, தஞ்சாவூரிலும் காவிரி-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் இப்போதைய தேவைக்குப் போதுமான தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள திருமானூர் நீரேற்ற நிலையத்தின் கிணறுகளில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, கோமுகியாறு, மலட்டாறு, கெடிலம் போன்ற ஆறுகளெல்லாம் வற்றி வறண்டுவிட்டன.
கள்ளக்குறிச்சி, செஞ்சி, விழுப்புரம், விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் வரை தண்ணீர்ப் பற்றாக்குறை. புதுச்சேரி மாநிலத்தில் பாகூர் கொம்யூனிலும் நீரளவு குறைந்து குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பெரும் நெருக்கடி.
திருவண்ணாமலை, வெயில் வாட்டியெடுக்கும் வேலூரிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. காவிரியில் நீர் வற்றிவிட்டதால் சேலத்துக்கு வரவேண்டிய குடிநீரும் முறையாக வருவதில்லை. சேலத்தில் நிலத்தடி நீரும் இல்லாததால் ரூ.270 கோடியில் 2015-இல் தொடங்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.
தருமபுரி மாவட்டத்திலும் ஒகேனக்கல் தண்ணீர் வரத்தில்லாமல் குடிநீர்ப் பற்றாக்குறை. அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் வறட்சியினால் கிடைக்க வேண்டிய கூட்டுக் குடிநீர் திட்டத்துக்குக் கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், வரும் தண்ணீரை அங்குள்ள அரசு சிமெண்ட் ஆலைகள் எடுத்துக் கொள்கின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் வறண்ட குடிநீர் கிணறுகளும் ஏரி, குளங்களால் 10 நாள்களுக்கு ஒரு முறைகூட தண்ணீர் வழங்குதல் கிடையாது. கரூர் வட்டாரத்திலும் பெரும் பிரச்னைதான்.
தொழில் பகுதியான திருப்பூரில் 1,000 ரூபாய்க்கு 1,000 லிட்டர் தண்ணீர் வாங்க வேண்டிய நிலையில் தொழிற்கூடங்கள் உள்ளன. கோவையிலும் 2 வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி நீரின் வரத்தும் பற்றாக்குறையில்தான் உள்ளது.
மழை வளம் அதிகமுள்ள நீலகிரியிலும் குடிநீர் திண்டாட்டம்தான். ஊட்டிக்கு பார்சன் வேலியிலிருந்து தண்ணீர் கிடைக்கக் கூடிய ஏற்பாட்டை செய்யலாம். அதேபோல, குன்னூருக்கு ரேலியா அணையிலிருந்தும், கூடலூர், பந்தலூர், கோத்தகிரிக்கு தண்ணீர் கிடைக்கக் கூடிய வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மேட்டுப் பகுதியில் தண்ணீர் கிடைக்கக் கூடிய வகையில் திட்டங்கள் வேண்டும். சுற்றுலாத் தலம் என்பதால், ஊட்டி விடுதிகளிலும் நீர் வேண்டும். சுற்றுலாப் பயணிகளும் சிரமப்படுகின்றனர்.
மதுரையிலும் வைகை அணையின் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 1.10 கோடி லிட்டரும், மற்ற வகையில் 4.90 கோடி லிட்டரும் மற்ற நீராதாரங்களின் மூலமாகக் கிடைத்து வந்தது. ஆனால், இந்தளவு கூட கிடைக்காமல் பற்றாக்குறையில் உள்ளது.
வானம் பார்த்த விருதுநகர் மாவட்டத்துக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம்தான் கைகொடுத்தது. எனவே, இங்கு இதுதான் பிரச்னை. திருநெல்வேலி மாவட்டத்திலும் தாமிரவருணி நீர் குறைந்துவிட்டதாலும், மற்ற மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தாமிரவருணி நீர் செல்வதால் இங்கு பெரும் குடிநீர்த் தட்டுப்பாடு.
தொடக்கத்திலேயே சொன்னதுபோல, தூத்துக்குடி ஒரு வானம் பார்த்த பூமி. இங்கும் பெரும் தட்டுப்பாடுதான். பசுமையான கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிய பின் சற்று மழை பெய்ததால் முழுமையாகத் தட்டுப்பாடு தீரவில்லை என்றாலும், தென்மேற்கு பருவக்காற்று மழையினால் ஓரளவுக்கு இந்த மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை இல்லை எனச் சொல்கின்றனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி பகுதிகளில் பெரும் குடிநீர்த் தட்டுப்பாடு. ஆனால், பொன்னேரி, காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வந்து சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாடு ஓரளவுக்கு எதிர்கொள்ளப்படுகிறது.
இப்படி தமிழகம் முழுவதும் வறட்சியும், குடிநீருக்கே தட்டுப்பாடு என்று நிலையில் தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 1,829 குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மண் அள்ளிப்போடும் இந்த வேளையில் ஒதுக்கிய பணிகளுக்கு பணத்தை அரசு செலவு செய்யாமல், அந்தப் பணத்தை இடைத்தரகர்கள் கொண்டு செல்லவிடக் கூடாது.
தமிழகத்தில் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடக்கும் என்று கூறினாலும், நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகள் சீராக நடந்திடவும் கண்காணிப்புத் தேவை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழ 60,000 நீர்நிலைகள் இருந்தன. அது தற்போது பாதி எண்ணிக்கையில்தான், அதாவது ஏரிகளும், குளங்களும், நீர்நிலைகளும் இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், ஆயக்கட்டு மற்றும் குடிமராமத்துப் பணிகளை முறையாகச் செய்யவும் எனது பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீர்நிலைகளை அழித்தோம், மரங்களை அழித்தோம், காடுகளை அழித்தோம். அதன் விளைவுகள்தான் இன்றைய குடிநீர்த் தட்டுப்பாடு.
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்,
செய்தித் தொடர்பாளர், திமுக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...