பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...

சித்தர்கள் உடலால் மறைந்தாலும் உயிரால், ஆன்மாவால் மறைவதில்லை. கற்பாந்த காலம் வரையில் ஜீவன் முக்தர்களாய் வாழ்ந்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:01 pm

தி. இராசகோபாலன்

சித்தர்கள் உடலால் மறைந்தாலும் உயிரால், ஆன்மாவால் மறைவதில்லை. கற்பாந்த காலம் வரையில் ஜீவன் முக்தர்களாய் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அவர்கள் சொல்லிவிட்டுப் போனதும் ஒரு காலத்திற்கு மட்டும் அன்று; எழுகின்ற ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்துவனவாய் இருக்கும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத் தாண்டி
எனக் கடுவெளிச் சித்தர் பாடினார். குயவனாக உவமிக்கப்படும் பிரம்மனிடம் ஜீவன் என்னும் ஓர் ஆண்டி, பத்து மாதமாக கருப்பையில் இருந்து உடல் என்னும் தோண்டியை வேண்டிப் பெற்று, பின்னர் அதனைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்துவிடுகிறான்' என்பது, கடுவெளிச் சித்தர் பாடிய காலத்தில் அதன் பொருள் ஆகும்.
இன்றைக்கு அதன் பொருள் வேறு. இந்திய விடுதலை என்னும் தோண்டியை மகாத்மா காந்தி என்னும் ஜீவன் பல்லாண்டுகளாகப் போராடிப் போராடிக் கொண்டு வந்தார். ஆனால், அதனை இன்று பல கூத்தாடிகள், கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர். சுதந்திரப் பயிர் தண்ணீர்விட்டு வளர்க்கப்பட்டதில்லை; உள்ளம் கருகக் கருக வடிக்கப்பட்ட கண்ணீரால் வளர்க்கப்பட்டது. எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரில் வளர்ந்த வண்ண விளக்கிது, மடியத் திருவுளமோ?' என மகாகவி பாரதியார் கதறிக்கதறிப் பாடினார். அந்தப் பயிர் மடிந்துவிடுமோ என்னும் அச்சம், இப்பொழுது நெஞ்சைக் கப்பிக் கொண்டிருக்கிறது.
நனவுலகத்தில் பக்கத்தில் படுத்திருக்கின்ற குழந்தை அழுகிறது. அதனை மறந்துவிட்டு, கனவில் கண்ட கதாநாயகனுக்குப் பால்குடம் ஏந்திச் செல்லுகின்ற ஏமாளிகளையும் கோமாளிகளையும் இன்று கண்டு கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்ந்த மக்களை பாரதியார், அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும், உச்சத்திற் கொண்டாரடி! கிளியே! ஊமைச் சனங்களடி' என்று வெதும்பிப் பாடினார். பாரதியார் பார்த்த ஊமைச் சனங்களில் இன்னும் ஒருத்தரும் சாகவில்லை; அப்படியே இருக்கிறார்கள். 
1913-ஆம் ஆண்டு மும்பையில், காந்தியடிகள் வழக்கறிஞராகத் தொழில் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது தாதா சாகேப் பால்கேவினால் தயாரிக்கப்பட்ட அரிச்சந்திரா' எனும் ஊமைப்படம் வெளியாயிற்று. அதனை காந்தியடிகள் பார்க்கவில்லை. அடுத்து சுபேதாவும் மாஸ்ட்டர் விட்டலும் நடித்த ஆலம் ஆரா' எனும் முதல் பேசும் படம் வெளிவந்தது. அதையும் காந்தியடிகள் பார்க்கவில்லை. பின்னர், பாலகங்காதர திலகர் மறைந்தவுடன், அவர் பெயரில் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு நினைவு நிதி திரட்ட வேண்டும் என்று விஜயவாடா காங்கிரஸ் மகாசபை தீர்மானம் நிறைவேற்றியது. அதனை முன்னிட்டு சங்கர்லால் பாங்கர் எனும் காங்கிரஸ் தலைவர், காந்தியடிகளைச் சந்தித்து ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார்.
நம்முடைய மாகாணத்திலுள்ள முக்கியமான நாடகக் கம்பெனிகள் யாவும் ஒன்றுகூடி, சிறந்த நடிகர்களைக் கொண்டு நல்லதோர் நாடகத்தை நடத்திக் காட்டவிருக்கின்றன. அன்று நீங்களும் நாடகத்தைப் பார்க்க வந்தால், அன்றைய வசூல் முழுவதையும் திலகர் நிதிக்குக் கொடுக்கத் தயாராகவிருக்கிறார்கள். அத்துடன் இலட்சக்கணக்கில் பணம் தருவார்கள். ஏனென்றால், டிக்கெட்டுகளின் விலையைக் கூட்டிவிடுவார்கள்' என்றார் சங்கர்லால் பாங்கர். அதற்குக் காந்தியடிகள், இது முடியாத காரியம். நான் ஒருபோதும் ஆட்டக்கார நடிகர்களின் நாடகத்தைப் பார்க்கப்போவதில்லை. எனக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும், நான் என் கொள்கையிலிருந்து தவற மாட்டேன்' எனச் சொல்லிவிட்டார். 
இப்பொழுதும் நம்முடைய தெருக்களில் கழைக்கூத்தாடிகள் வந்து நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவர். கழைக்கூத்தாடி ஒரு துண்டை விரிப்பார். ஒரு நீண்ட மூங்கிலின் உச்சியில் ஐந்து வயதுக் குழந்தையைக் கிடத்துவார். தரையிலே படுத்துக் கொண்டு அந்த கழைக்கூத்தாடி நீண்ட மூங்கிலின் அடித்தண்டைத் தன் மார்பிலே நிறுத்துவார். தான் சுற்றிச் சுற்றித் திரும்பும்பொழுது, மூங்கிலின் உச்சியில் இருக்கும் குழந்தையும் சக்கரமாகச் சுற்றும். எல்லாரும் ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள். வித்தை முடிந்தவுடன், வித்தைக்காரர் துண்டில் போடப்பட்ட நாணயங்களை எடுத்துக் கொண்டு, அடுத்த தெருவிற்குப் போய்விடுவார்.
இன்றைக்கும் கழைக்கூத்தாடிகள் வருகிறார்கள். துண்டுக்குப் பதிலாகக் கொடியை விரிக்கிறார்கள். தொண்டைக் கிழிய வீராவேசத்தைக் காட்டுகிறார்கள். பேசி முடித்தவுடன் வசூலை முடிந்து கொண்டு, கோட்டைக்குப் புறப்படுகிறார்கள், கொடியேற்ற!
தமிழ்நாட்டில் இன்று யாராவது நூறு எடுபிடிகள் பின்னாலே வருவதைப் பார்த்தால், முன்னாலே போகின்றவன், தலைவன் ஆகிவிடுகின்றான். ஒரு தலைவனுக்குரிய இலக்கணத்தை பாரதியார், தாதாபாய் நெளரோஜியைப் பாடுகின்றபொழுது அற்புதமாக வெளிப்படுத்துவார். கல்வியைப் போலறிவும் அறிவினைப் போலக் கருணையும், அக்கருணையைப் போலப் பல்வித ஊக்கங்கள் செயுந் திறனுமொரு நிகரின்றிப் படைத்த வீரன்; வில்விறலாற் போர் செய்தல் பயனிலதாம் என்பதனை வெறுத்து உண்மைச் சொல்லிறலாற் போர் செய்வோன்; பிறர்க்கன்றி தனக்கு உழையாத் துறவி யாவோன்' என்பது பாரதியார் ஒரு தலைவனுக்கு வடித்துக் கொடுத்த தலைமைப் பண்புகளாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் மகாத்மா காந்தியடிகளும் வல்லபபாய் படேலும், கர்மயோகி ஜெயப்பிரகாஷ் நாராயணனை எப்படியாவது அமைச்சரவைக்குள் திணித்து விடுவது என்று பெருமுயற்சி செய்தனர். ஆனால், ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்தத் தலை அந்தக் கனத்தைத் தாங்காது' என்று சொல்லிவிட்டுச் சேவா தளப் பணிகளை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி அமைச்சரவை அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உடன் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் காமராசர், அகில இந்தியக் காங்கிரசு கமிட்டித் தலைவரை அணுகுகிறார். அப்பொழுது அ.இ.கா. கமிட்டித் தலைவர் காமராசரையே முதலமைச்சர் ஆகும்படி வற்புறுத்துகின்றார். அதற்குக் காமராசர், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மூதறிஞர் இராஜாஜி முதலமைச்சர் ஆனால்தான் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற முடியும்' எனச் சொல்லி, சொன்னவண்ணமே செய்தும் முடிக்கின்றார். இந்தத் தலைமைத் தன்மை இப்பொழுது பட்டம் சூட்டிக் கொள்ளத் துடிக்கும் எந்தத் தலைவருக்கும் இல்லையே! 
சீனாவில் புரட்சியை உருவாக்க நினைத்த மாசே துங் 95,000 போராளிகளோடு 368 நாள்கள் கிராமம் கிராமமாக, 6000 மைல்கள் நடந்து, வெகுஜன இயக்கத்தை உருவாக்கினார். மாவீரன் லெனின் ஜெனீவாவில் தங்கியிருந்த சமயத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சைக்கிளில் சென்றார். அவசர கதியில் சென்ற அவர் ஒரு டிராம் வண்டியில் மோதிவிட்டார். அதனால் கால் தசைகள் பிய்ந்ததோடு, ஒரு கண்ணும் பழுதடைந்துவிட்டது. என்றாலும், டாக்டரின் உதவியால் கட்டுக்களோடு மேடை ஏறி, மென்ஷ்விக்' கட்சியினரின் போலி வாதங்களைத் தவிடு பொடியாக்கிவிட்டு வந்தார். ஜார் மன்னனால் சைபீரியக் காடுகளுக்குத் துரத்தப்பட்ட அவர், பிழைக்கக்கூடாது என்பதற்காக அவருடைய பாதங்களில் விஷ மருந்தை வைத்துக் கட்டிவிட்டு, அவரை நடக்க முடியாமல் செய்துவிட்டனர் இராணுவத்தினர். இந்தத் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும், இன்றைய திடீர்த் தலைவர்களுக்கு வருமா?
பாடிஸ்டாவின் கொடிய ஆட்சியை ஒழிப்பதற்காக பிடல் காஸ்ட்ரோ மேற்கொண்ட போர்முறைகள் அசாத்தியமானவை. கொரில்லாப் போர்முறையில் தன்னை மறைத்துக்கொண்டு, எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய மணி ஓசை' எனும் நாவலைப் படித்தார். அதில் அமெரிக்கப் போர்வீரன் ஒருவன், ஸ்பெயின் நாட்டுக்காரர்களுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபடுகிறான். 
எல்லாவித முயற்சிகளும் எதிரிகளின் கூடாரத்திற்குள்ளிருந்தே பெறப்படுகின்றன. கொரில்லாக்கள் எப்படிப் பதுங்கினார்கள், எப்படித் தாக்கினார்கள் என்பதை எல்லாம் அந்த நாவலைப் படித்தே காஸ்ட்ரோ தெரிந்து கொண்டு, அவற்றை வைத்தே, பாடிஸ்டாவைத் தோற்கடித்தார். தோண்டியை உடைக்க எண்ணும் கூத்தாடிகள், காஸ்ட்ரோவின் தலைமைப் பண்பைத் தவமிருந்து கற்க வேண்டாமா?
உலக பூகோள அமைப்பில் இங்கிலாந்தினுடைய மக்களைப் போல், அறிவார்ந்த இனத்தை எங்கும் பார்க்க முடியாது. 1945 -ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இரண்டாவது உலகப் போரில், உலகத்தின் காப்பாளராகத் திகழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சில், தம்மைத் தேர்ந்தெடுக்கும்படி மக்களை வேண்டினார். அதற்கு இங்கிலாந்து மக்கள், போர்க்காலத்திற்குத்தான் சர்ச்சில், அமைதிக் காலத்துக்கு அட்லியே போதும்' எனச் சொல்லி, தொழிற்கட்சியைத் தேர்ந்தெடுத்தனர்.
அட்லியின் காலத்தில் இங்கிலாந்தின் இராணுவ பலம் குறைந்து விட்டது. அட்லி, தோட்டக்கலையிலும், தச்சுத் தொழிலிலும், கோல்ஃப், டென்னிஸ் ஆட்டங்களிலும், குறுக்கெழுத்துப் போட்டிகளிலும் காட்டிய ஆர்வத்தை ஆட்சிக் கலையில் காட்டாத காரணத்தால், நாட்டு மக்கள் அட்லியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
தலைவனுக்குரிய தகுதிப்பாடு என்றாலும், தொண்டனுக்குரிய முதிர்ச்சி என்றாலும், நம்மை இருநூற்றைம்பது ஆண்டுகள் அடிமைப்படுத்திய ஆங்கிலேயனிடமிருந்துதானே கற்க வேண்டியிருக்கிறது!

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.