இரும்புப் பெண்மணி என்று அனைவரால் போற்றப்படும் இரோம் ஷர்மிளா தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வரும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஏஎஃப்.எஸ்.பி.ஏ.) நீக்க வேண்டும் என்று 2000, நவம்பர் 4-ஆம் தேதி தனது 28-ஆவது வயதில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஷர்மிளா.
மணிப்பூரில் பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்த 10 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என்று நினைத்து ஆயுதப் படையினர் கொன்றச் சம்பவம்தான் ஷர்மிளாவை போராட்டத்துக்கு தூண்டியது.
ஷர்மிளாவின் போராட்டம், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூரிலிருந்து தில்லிக்கு வந்த பிறகு தேசிய அளவில் பிரபலம் அடைந்தது. அதன் பிறகுதான் அவருக்கு "இரும்புப் பெண்மணி' என்ற பெயர் கிடைத்தது.
தில்லியில் அவரது போராட்டம் பிரபலமாகி அவருக்கு விருதுகளும் குவிந்தன. இதனால், தற்கொலைக்கு முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் மணிப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அங்கு அரசு மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டு மூக்கில் செயற்கைக் குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு அளிக்கப்பட்டு வந்தது.
கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தலையை முடியமாட்டேன், கண்ணாடி பார்க்க மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்த ஷர்மிளா, இத்தனை ஆண்டு காலத்தில் தனது தாயை ஒரு முறையே சந்தித்துள்ளார்.
அஹிம்சை வழியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா கடந்த ஒன்பதாம் தேதி, முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். தனது கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக போவதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்தார். மருத்துவமனையில் இருந்து விடுதலையாகி நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்குச் சென்ற ஷர்மிளாவுக்கு அப்பகுதி மக்கள் கதவை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்து கண்ணீருடன் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பினார். மறுநாள் அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் அவருக்கு அடைக்கலம் அளித்தது. தனது மக்கள் தன்னை ஏற்றுகொள்ள விரும்பவில்லை என்றால் மணிப்பூரை விட்டே வெளியேறப் போவதாக ஷர்மிளா அறிவித்தார்.
ஷர்மிளாவுக்கு எதிராக அப்பகுதி மக்களே மாறியதற்கு என்ன காரணம்?
காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக அமைதி வழியில் நீண்டகால போராட்டம் நடத்தியவருக்கு இந்த அவமதிப்பு ஏற்பட என்ன காரணம்?
வெள்ளையனை வெளியேற்ற அஹி ம்சை போராட்டம் நடத்திய காந்தியடிகள், கோரிக்கை நிறைவேறிய பிறகுதான் போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
அதேபோல் அமெரிக்காவில் நிற வெறிக்கொள்கைக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மார்ட்டின் லூதர் கிங், தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, ஜனநாயகம் மலர அறவழியில் போராட்டம் நடத்தி 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூகி ஆகியோர் தங்களின் போராட்டங்களின் நோக்கம் நிறைவேறும் வரை தங்களின் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
ஆனால் ஷர்மிளா தனது உண்ணாவிரத களத்தை மாற்றி, அரசியல் களத்தை தேர்ந்தெடுத்ததுதான் மணிப்பூர் மக்களின் எதிர்ப்புக்கு காரணம்.
அரசியல் களத்தில் இறங்கி போராடப்போவதாக ஷர்மிளா கூறியது, அந்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியலில் ஷர்மிளா சேர்த்துவிட்டதாக அப்பகுதி மக்களை எண்ண வைத்தது.
இரோம் ஷர்மிளாவுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவுக்கு அவருக்குள் மலர்ந்த காதலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
கோவாவில் வாழும் பிரிட்டனைச் சேர்ந்த 48 வயதான மனித உரிமை ஆர்வலர் டெஸ்மான்ட் குடினோவை திருமணம் செய்துக் கொள்ள ஷர்மிளா முடிவு செய்துள்ளாராம்.
இதற்கு ஷர்மிளாவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், இது, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எதிர்தரப்பினர் மேற்கொண்ட சதி என்றும் கூறுகின்றனர்.
மேலும், மணிப்பூர் தீவிரவாத அமைப்புகள் ஷர்மிளா மீது கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதுதான் அவரது உயிருக்கு பெரும் ஆபத்து என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்தை பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்றுள்ளன. அவரை தங்கள் கட்சியில் சேர்த்து கொள்ள அந்தக் கட்சிகள் வெளிப்படையான அழைப்பும் விடுத்துள்ளன.
ஆனால் ஷர்மிளா சுயேச்சையாக போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளார். மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் 47 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சி வலுவான ஆட்சியை நடத்தி வருகிறது.
மூன்று முறை தொடர்ந்து முதல்வராக ஒக்ரம் இபோபி சிங் நீடித்து வருகிறார். அவரது கோட்டையான தௌபல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரான பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஷிர்மிளா சூளுரைத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்று, அரசியல் களமிறங்கி குறுகிய காலத்தில் அரசியல் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
அவரது பாணியில் தற்போது இரோம் ஷர்மிளா, இத்தனை தடைகளையும் மீறி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளார். இது காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

