திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருத்தி எழுதிய தீர்ப்பு

பெண்களுக்கு மிக உயர்ந்த இடத்தை இந்தியா அளித்திருப்பதாகவும், அவர்கள் தாயாக வணங்கப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:56 am

உதயை மு. வீரையன்

பெண்களுக்கு மிக உயர்ந்த இடத்தை இந்தியா அளித்திருப்பதாகவும், அவர்கள் தாயாக வணங்கப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். பூமியை "பூமாதேவி, பூமித் தாய்' என்றும், நீரை "கங்கா மாதா' என்றும், வீரத்தை "சக்தி' என்றும், கல்வியை "சரஸ்வதி' என்றும் வணங்குகிறோம். ஆனால், பெண்கள் அந்த அளவுக்குச் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார்களா? இந்தக் கேள்விக்குப் பதில் மெüனம்தான்.
 குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல், கல்வி மறுப்பு, சொத்துரிமை மறுப்பு எல்லாம் ஆண் ஆதிக்கத்தின் கொடுமைகள். அவற்றை எதிர்த்து மனசாட்சியுள்ள ஆண்களும் போராடினாலும், அவர்கள் அடிமைத் தளைகளிலிருந்து முற்றாக விடுதலை பெறவில்லை.
 அரசியலில் அவர்களுக்கு 33 விழுக்காடு என்ற கோரிக்கை இதுவரை சட்டமாக்கப்படவில்லை. என்றாலும், மகளிர் சிலர் எதிர்நீச்சல் போட்டு பல சாதனைகள் செய்திருப்பதை மறுக்க இயலாது. அதற்காக அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாமா? மாறாக, அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 நாடு முழுவதும் பாலியல் வன்முறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் தொடங்கி கடைக்கோடி சிற்றூர்கள் வரை இது பரவியுள்ளது. கடுமையான சட்டங்கள் மூலம் இது குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போய் விட்டார்கள்.
 அண்மையில் இரண்டு தீர்ப்புகள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. ஒன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு, மற்றொன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தது; எதிர்மறையான கருத்துகள் உடையவை. இரண்டும் சமூக அக்கறையோடு வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்பதில் ஐயமில்லை.
 மத்தியப் பிரதேசத்தில் 2008 டிசம்பர் 27-ஆம் தேதி 7 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய மதன்லாலுக்கு கீழ்நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்தது.
 குற்றவாளிக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் சமரசம் உருவானதால், அதன் அடிப்படையில் "வன்புணர்வுக் குற்றவாளி' என்ற தீர்ப்பையும், 5 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரத்து செய்தார். சிறுமியை மானபங்கம் செய்த வழக்குக்காக மட்டும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்தியப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி. பந்த் அடங்கிய அமர்வு உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, மறு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. குற்றவாளியைக் கைது செய்யுமாறும் அறிவுறுத்தியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமுதாயத்தைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது.
 "பாலியல் வன்முறை வழக்குகளில் மென்மையான அணுகுமுறை கூடாது. மேலும், இந்த வழக்குகளில் சமரசத்துக்கோ, மத்தியஸ்தத்துக்கோ ஒருபோதும் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் 1.7.2015-இல் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
 பாலியல் வன்முறையால் பெண்ணின் கண்ணியத்துக்குக் களங்கம் ஏற்படும்போது, மனித சமுதாயக் கட்டமைப்பே மாசடைந்து விடுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பது என்பது அவரது வாழ்வின் உன்னதமான தருணம் ஆகும். இதில் அவரது பெருமைக்குக் களங்கம் ஏற்படும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது.
 பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் வாழ்வில் அவர்களைத் திக்குமுக்காடச் செய்து விடுகின்றன. அவர்களது தன் மதிப்புக்கும் கேடு விளைவிக்கின்றன.
 தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணை அந்தக் குற்றத்தைச் செய்தவரே திருமணம் செய்து கொள்வது போன்ற சதித் திட்டங்களை நீதிமன்றங்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
 பெண்ணின் உடல் ஆலயத்துக்கு ஒப்பானது. அது புனிதமான சொத்து. எனவே, இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர், குற்றவாளிக்கு இடையே மத்தியஸ்தம், சமரச முயற்சிகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைத்துக்கூட பார்க்கக் கூடாது.
 இது தேசத்துக்கு எதிரான குற்றம்; பெண்ணின் மாண்புக்கு எதிரான குற்றம். மாண்பு என்பது ஒருவரது வாழ்வில் விலை உயர்ந்த அணியாகும். அதை அழிப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.
 இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் குற்றவாளியான மதன்லாலுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும்படியான நடவடிக்கைகளில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது' என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
 மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் மாதிரியே சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பலத்த சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உத்தரவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை வி. மோகன் பாலியல் வன்முறை செய்தார். இதில் கர்ப்பமான அந்தச் சிறுமி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது தொடர்பான வழக்கில் மோகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த கடலூர் மகளிர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
 இந்த உத்தரவை நிறுத்தி வைத்து, தனக்குப் பிணை வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி. தேவதாஸ் விசாரணை செய்தார்.
 பாலியல் குற்றவாளிக்கு இடைக்காலப் பிணை வழங்கியதுடன் இவ்வழக்கை சமரச மையத்துக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.
 "இந்த வழக்கைப் பொருத்தவரை அப்பாவியான சிறுமியும், அவரது பெண் குழந்தையும் பெரிய கேள்விக்குறியாக உள்ளனர். அந்தச் சிறுமிக்குப் பெற்றோர் இல்லை. இதுபோன்ற வழக்குகளில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட பெண் மட்டும் பாதிக்கப்படுவார். ஆனால், இவ்வழக்கில் பாலியல் வன்முறையில் பிறந்த குழந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய சோகம்.
 ஆண்களின் இச்சைக்குப் பெண்கள் எளிதாக இலக்காகி விடுகின்றனர். அதனால், அப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. நம் நாட்டில் பெண்கள் பெரும் சொத்தாகக் கருதப்படுகின்றனர். பெண்களை சக்தி, தாய், சகோதரி, செவிலித் தாய், வாழ்க்கைத் துணை, முக்கிய அடையாளம் என்றெல்லாம் அழைக்கின்றனர்.
 ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பதாகப் பாராட்டுகின்றனர். பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆம் பிரிவு வழி வகுக்கிறது. இருப்பினும் நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் நிலை மிகவும் வருந்தத்தக்க நிலையிலேயே இருக்கிறது.
 அவர்களுக்கு நியாயமான அதிகாரத்தை வழங்குவதன் மூலமே பெண்களிடம் முன்னேற்றத்தைக் காண முடியும். ஆண்களிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கவில்லை. சம வாய்ப்பைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 காலம், செலவு போன்றவற்றைக் கணக்கில் கொண்டுதான் மாற்றுமுறை தீர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகளில் கூட சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் சமரசத் தீர்வு காண முயற்சி செய்யலாம்.
 அதற்குக் குற்றவாளி சிறையில் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, குற்றவாளி மோகனுக்கு இடைக்காலப் பிணை அளிக்கப்படுகிறது. சமரச மையத்தின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.
 இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளியின் மனுவை ஏற்று நீதிபதி இந்தப் பரிந்துரையை அளித்துள்ளாரே தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தை அறிய முயற்சி செய்யவில்லை. சமரச மையத்திடம் அந்தப் பொறுப்பை அளித்துவிட்டார். அங்கும் அந்தச் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. உச்சநீதிமன்றம் கூறியதுபோல, தண்டனை பெற்ற குற்றவாளியின் சார்பாக நடந்த சதித் திட்டம் என்றே எண்ண வேண்டியுள்ளது.
 குற்றவாளியைப் பார்க்கவே விருப்பமில்லை, அவர் தண்டனை பெறுவதே தனக்கு நீதி வழங்கப்படுவதாக இருக்கும் என்று சொல்லும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தைக் கேட்காமலேயே சமரசம் பேச ஏதுவாகக் குற்றவாளிக்குப் பிணை வழங்கியது எப்படிச் சரியாகும் என்னும் கேள்வி நியாயமாகவே தெரிகிறது.
 இந்தத் தீர்ப்பு குறித்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெüலை மூத்த வழக்குரைஞர்கள் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். சமரசத் தீர்ப்பு மையத்துக்கு அனுப்பப்பட்ட இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்; எந்த வகையான வழக்குகளைச் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்ற பொதுவான விதிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். பல்வேறு விவாதங்களுக்கு அப்போதுதான் தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால் இவ்வாறு தண்டனை பெற்ற குற்றவாளிகள் பலரும் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, விடுதலையாகித் தலைமறைவாகவும் கூடும்; பாதிக்கப்பட்ட பெண்ணை மறுபடியும் ஏமாற்றவும் வழி ஏற்பட்டு விடும். இதற்கு இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாகிவிடக் கூடாது.
 தண்டனை என்பது குற்றவாளி திருந்துவதற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர, அவரது எதிர்கால வாழ்வையே அழிப்பதாக இருக்கக் கூடாது என்பது சிலர் வாதம். இதற்கான பதில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வர வேண்டுமே தவிர, தண்டிக்கப்பட்ட குற்றவாளியிடமிருந்து வர முடியாது.
 "ஒரு பெண் தாக்கப்படுவாளாயின் தான் செய்வது அஹிம்சையா, இம்சையா என்று ஆலோசித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதுதான் அவளின் முதல் கடமை. தனது மானத்தைக் காத்துக் கொள்வதற்குத் தனக்குத் தோன்றும் எந்த முறையையும் கையாள்வதற்கு அவளுக்கு உரிமை உண்டு...' என்கிறார் மகாத்மா காந்தி.
 நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிப் பெண்களின் பக்கம்தான் நிற்க வேண்டும். அதுவே நம்மை மனிதர்களாகவும், மனிதநேயமிக்கவர்களாகவும் அடையாளம் காட்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின் திருத்தி எழுதிய தீர்ப்பும் அதைத்தான் கூறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.