முதலில் பொதுவுலகத் தொடர்பு சாதனங்களான பத்திரிகைகளையும், தொலைக் காட்சிகளையும் எடுத்துக் கொள்ளலாம். நடக்கும் தவறுகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டினால் அவைகளைத் திருத்தி விடலாம் என்று அவை நினைக்கின்றன. திருத்துவது அவ்வளவு எளிது என்றால் ஆண்-பெண் சம உரிமை, மேன்மையான சட்ட- ஒழுங்கு பராமரிப்பு, விரைவான நீதி மன்ற உத்திரவுகள் என்று நிலவும் மேலை நாடுகளில், ஓர் உதாரணத்திற்கு, மனிதாபிமானமற்ற பாலியல் பலாத்காரம் போன்ற கீழ்மையான செயல்களை ஒழிக்க முடியாது போயிருந்தாலும் ஓரளவிற்காவது கட்டுப்படுத்தியிருக்க வேண்டுமே! அங்கு நடக்கும் பாலியல் பலாத்காரம் பற்றிய புள்ளி விவரங்கள் கேட்போர் எவரையும் பதைபதைக்கச் செய்யும். சென்ற குளிர்காலத்தில் டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டுக் பாலியல் பலாத்காரச் சம்பவத்திற்குப் பின், இவ்வாறான பலாத்காரங்களும், கொலைகளும் மிகுந்த இந்திய நாடு எப்படி ஆன்மிகத்தில் திளைத்த ஒரு நாடு என்று சொல்லிக்கொள்ள முடியும் என்று மேலை நாடுகளின் ஊடகங்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அதற்குச் சரியான பதில் ஓர் இந்தியரிடம் இருந்து வரவில்லை. எமர் ஓடூல் என்ற ஆங்கிலேயப் பத்திரிகையாளர் “தி கார்டியன்” என்ற தினசரிப் பத்திரிகையின் 1 ஜனவரி 2013 இதழில், டெல்லியில் ஆண்டிற்கு 625 பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடக்கின்றன என்றால், டெல்லியின் மக்கட்தொகையில் மூன்றரை மடங்கே அதிகம் உள்ள ஒட்டுமொத்த இங்கிலாந்திலும் அவ்வாறு நடக்கும் சம்பவங்கள் ஆண்டிற்கு 9500 ஆக இருக்கின்றனவே என்று பதிலடி கொடுத்தார். அதற்குப் பத்து நாட்கள் கழித்து “தி இன்டிபென்டன்ட்” என்ற இன்னுமொரு ஆங்கிலேய தினசரி, தனது 10 ஜனவரி 2013 இதழில், இங்கிலாந்தில் ஆண்டிற்கு 1,00,000 பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடக்கின்றன என்றும், அவைகளில் 1000 பேர்களே தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்றும் சொல்லி, அவ்வளவு குறைவான எண்ணிக்கையில் உள்ள தண்டனைகளைப் பற்றி வேதனைப்படுவதாகவும் எழுதியது. அமெரிக்காவின் நிலைமையும் இதே போன்றதுதான். அமெரிக்க அரசின் நீதித்துறை அந்நாட்டில் 2006-ம் ஆண்டில் 3,00,000 பெண்மணிகள் கற்பழிக்கப்பட்டதாகப் புள்ளி விவரம் தருகிறது. இது தவிர, நவீனமயத்தின் சிகரமான அமெரிக்காவில், அதே ஆண்டில் 92,000 ஆண்களைப் பெண்கள் கற்பழித்தார்களாம்! இதில் கூடவா அவர்கள் ஆண்-பெண் சம உரிமையைக் கோருவார்கள்? இணையதளம் www.ojp.usdoj.gov/nij கொடுக்கும் தகவல்படி 1.77 கோடி பெண்களும், 280 லட்சம் ஆண்களும் வாழ்வில் ஒருமுறையாவது கற்பழிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் குறைந்த பட்சமாக பெண்கள் ஆண்களைக் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்வதில்லை என்றாவது சொல்லிக் கொள்ளலாம்.