இப்போது சங்கரராமன் கொலை வழக்கிலான தீர்ப்பு அதையேதான் கூறுகிறது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் நான் எழுதிய அந்தக் கட்டுரைத் தொடரில் ஒன்று - "அபிமன்யு போல நிராதரவாக நிற்கும் சங்கராச்சாரியார்!'. அந்தக் கட்டுரையில், தன்மீது அபாண்டமாக சுமத்தப்பட்டிருக்கும், கொலைப் பழியால் திகைத்துப்போய் செய்வதறியாமல் நிற்கும் சங்கராச்சாரியாரை, இறை மறுப்பாளர்களும், இந்துமத வெறுப்பாளர்களும், திராவிடக் கட்சியினரும், போலி மதச் சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட சமூக சிந்தனையாளர்களும், அரசியல் கட்சிகளும் வல்லூறுகளைப் போலக் கொத்திக் குதறக் காத்திருக்கிறார்கள். காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் புனையப்பட்ட செய்திகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் நமது ஊடகங்களும், திராவிட இயக்க பிரச்சார இயந்திரமும் சங்கராச்சாரியாரைக் களங்கப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் முனைந்து செயல்படுகின்றன. வழக்கால் ஏற்படும் பாதிப்பை விட இதுபோன்ற ஆதாரமற்ற தவறான பிரசாரங்களால் ஏற்படுத்தப்படும் கருத்துருக்கள்தான் சங்கராச்சாரியாருக்கு அதிக களங்கம் ஏற்படுத்துகின்றன'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.