பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மாறாத "பிளஸ் டூ' தமிழ்ப்பாட நூல்

கற்றல் கற்பித்தலில் முக்கியக் கருவி பாடநூல். மொழிப்பாடநூல்கள் மாணவர்களுக்கு அடிப்படை அறிவைத் தர வல்லன. அதேசமயம், மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய இனிமை...

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:45 am

தஞ்சாவூர் கவிராயர்

கற்றல் கற்பித்தலில் முக்கியக் கருவி பாடநூல். மொழிப்பாடநூல்கள் மாணவர்களுக்கு அடிப்படை அறிவைத் தர வல்லன. அதேசமயம், மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய இனிமை, பிழையின்றிப் பேசவும் எழுதவுமான இலக்கண நெறிமுறைகள், கருத்தை விளக்கி எழுதும் படைப்பாற்றல் திறன் ஆகியவற்றையும் மாணவர்களின் உள்ளத்தில் பதியச் செய்யும் ஆற்றல் மிக்கவை. அத்தகைய பாடநூல்கள் கருத்துத் தெளிவுடன் பிழையின்றி இருக்க வேண்டியது அவசியமானதாகும். குறிப்பாகத் தமிழ்ப்பாட நூல்கள் தாய்மொழிப் பற்றை உருவாக்கவல்ல திறனைப் பெற்றிருத்தல் வேண்டும். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும்.

மேனிலை வகுப்பு இரண்டாமாண்டு அரசுத் தேர்வுக்குரிய பொதுத் தமிழ்ப்பாடநூல் 2005-இல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டு, இன்றுவரை பள்ளிகளில் நடைமுறையிலிருந்து வருகிறது. சாதாரணமாக, ஒரு வகுப்பிற்குரிய பாடநூல் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலத்துக்குச் செயற்படுத்தப்படும். அதற்குள் பாடத்திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும். பணி அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வகுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்குள் பாடநூல்களைத் தயார் செய்வார்கள். அதை மேலாய்வாளர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் கொடுத்ததும் அச்சிடும் பணி நடைபெறும். அதன் பின்னரே அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால், மேனிலை இரண்டாம் ஆண்டிற்குரிய தமிழ்ப்பாட நூல் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகக் கல்வித்துறை இதைக் கண்டுகொள்ளாதது வியப்பிலும் வியப்பே. ஐந்தாம் ஆண்டின் இறுதியிலேயே இதை மாற்றியிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் போன்ற பாட நூல்ளைப் பல்வேறு காரணங்களுக்காக மாற்றாவிட்டாலும், மொழிப்பாட நூல்களையாவது மாற்றித் தந்திருக்கலாம்.

2005-இல் இந்தத் தமிழ்ப்பாட நூலைப் படித்துமுடித்து பள்ளியைவிட்டு நீங்கிச் சென்ற ஒருவர், கல்லூரிப் படிப்புகளை முடித்துத் தமிழாசிரியராக நியமனம் பெற்றிருந்தால் அவர், தாம் படித்த அதே பாட நூலையே தமது மாணவர்களுக்குக் கற்றுத் தரக்கூடிய விநோதமான நிலையைத் தமிழகக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

அண்மையில் மேனிலை அரசுத் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்டுள்ள விளையாட்டுத்தனமான போக்கு இதனுடைய விளைவாகக் கூட இருக்கலாம். 2013, மார்ச் முதல் நாளன்று தொடங்கிய மேனிலை வகுப்பு அரசுத் தேர்வில் தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளில், 2012 ஆம் ஆண்டு அரசுத் தேர்வு வினாத்தாளிலிருந்து 64 சதவிகித மதிப்பெண்ணுக்குரிய வினாக்கள் சொல் மாற்றமின்றி இடம் பெற்றுள்ளன. மொத்த வினாக்கள் 50-இல் 32 வினாக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. அதுவும், வினா எண்கள் 12 முதல் 16, 24, 26, 27, 28, மற்றும் 33 முதல் 49 முடிய உள்ள 26 வினாக்கள் 2012-ஆம் ஆண்டு வினாத்தாளிலிருந்து வினா எண் கூட மாறாமல் கற்றை கற்றையாக இவ்வாண்டு வினாத்தாளில் இடம் பெற்றிருந்தன.

வினாத்தாள் தயாரிப்பதற்குப் பல நெறிமுறைகள் உள்ளன. அவற்றினின்று சிறிதும் பிறழாது வினாத்தாள் தயாரிக்கப்படும். இப்பணிக்கு மூத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் கமுக்க நிலையில் வினாத்தாளைத் தயாரித்துக் கொடுக்கின்றனர். அதனை வல்லுநர் குழுவொன்று ஆய்வு செய்கிறது. அதன்பிறகே வினாத்தாள் அச்சிட அனுப்பப்படுகின்றன. இத்தனை வழிமுறைகள் இருந்தும் இவ்வாண்டு வினாத்தாளில், கடந்த ஆண்டு வினாத்தாளிலிருந்து 64 சதவிகித மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருக்கும் அவலத்தை என்னென்பது?

சாதாரணமாக முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் மீண்டும் இடம்பெறுவதுண்டு. இது இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழக்கூடியது. ஆனால் ஒரே வினாத்தாளிலிருந்து பாதிக்கு மேற்பட்ட வினாக்கள் கொத்துக் கொத்தாகத் திரும்பவும் இடம்பெற்றிருப்பது தயாரிப்பின் பொறுப்பற்ற நிலையைக் காட்டுகிறது. இது நல்ல வினாத்தாளுக்குரிய இலக்கணமன்று.

பாடநூல்களிலும் தேர்வுமுறைகளிலும் இம்மாதிரித் தவறுகள் எற்படுவது அண்மைக் காலத்தில் பெருகி வருகிறது. சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் நடைமுறைக்கு வந்து மூன்றாண்டுகளாகியும் பல பதிப்புகள் வெளிவந்தும் இன்னும் நீக்கப்படாத பிழைகள் ஏராளமாக உள்ளன. ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை தேர்வுகள் நடத்தினாலும் வினாத்தாள் தரங்குறையாது மிடுக்காக இருக்க வேண்டும். இதுவே தயாரித்த ஆசிரியர்க்கும் துறைக்கும் பெருமை தருவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.