பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுயநிர்ணய உரிமை - தொடரும் விவாதங்கள்

இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்' என்பது வேதனையான உண்மை. அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை, சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால், இலங்கையின் பாரம்பரியத் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:08 pm

டி.கே. ரங்கராஜன்

இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்' என்பது வேதனையான உண்மை. அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை, சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால், இலங்கையின் பாரம்பரியத் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

இந்த அடிப்படை உரிமைகளுக்காக, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 2009-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நாசத்திற்குப் பின் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தங்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும், வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் இன்றும் இலங்கைத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

"சமரசம் என்பது ஒரு தவறான சொல்' என்று கருதலாகாது என விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையை புலிகள் இயக்கத்தினரும் பின்பற்றி இருக்கலாமோ என்ற கருத்தைப் பலர் வெளிப்படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகம் நன்கு அறிந்த ஒன்று.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் உருவாக இருந்த பல சமரசத் தீர்வுகள் தட்டி விடப்பட்டது உண்மை என்பதை மறைக்க முடியாது. அதுவும் இன்று நீடித்து நிற்கும் துயரத்திற்குக் காரணமாகும்.

இதே காலத்தில், நேபாளத்தில் உலகச் சூழ்நிலை மாறியுள்ளதைக் கணக்கில்கொண்டு, தங்கள் பலத்தைத் தக்க வைத்து, ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்தனர். தேர்தலில் பங்கேற்று ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றனர். மன்னரின் அதிகாரத்தைப் பறித்தனர். இது இனப் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆயுதப் போராட்டம் அல்ல என்றாலும் இவர்களின் நடைமுறை யுக்தி கவனிக்கத்தக்கது.

இலங்கையில் இன்று தமிழ் மக்கள் சந்தித்துள்ள இவ்வளவு சேதாரங்களுக்குப் பின்னரும், தமிழ் ஈழத்தைத் தவிர்த்து, வேறு எந்த ஆலோசனைகளையும் ஏற்க மறுக்கும் இயக்கங்கள் மற்றும் அறிவு ஜீவிகள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இலங்கையின் பழம்பெரும் மன்னர்கள் கால வரலாறு, தமிழர்களுக்கு அன்று இருந்த உயர்வான நிலை போன்ற ஆதாரங்களையும் தங்களின் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்கான சாட்சியாக அழைக்கிறார்கள்.

அரசியல் போராட்டங்களில் வரலாறு ஒரு குறிப்பிடத்தகுந்த ஆயுதமாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் மறைந்த வரலாற்றுப் பேராசிரியரும் மார்க்சிய சிந்தனையாளருமான எரிக் ஹாப்ஸ்வாம், வரலாற்றைப் பயன்படுத்துவது குறித்து தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது. ""ஹெராயின் என்ற போதை மருந்து தயாரிக்க பொப்பி மலர் ஒரு அவசியமான மூலப் பொருள். அதுபோல, அடிப்படைவாதக் கருத்துகள், இனக்குழு சார்ந்த கருத்துகள் மற்றும் தேசியவாதக் கருத்துகள் ஆகியவற்றிற்கு வரலாறு ஒரு மூலப் பொருளாக அமைகிறது. வரலாறு எழுதும் பணியானது, அணுக்கள் குறித்த ஆய்வுபோல் அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு பணி என எண்ணியிருந்தேன். ஆனால் வரலாறு எழுதும் பணியும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

தேசிய இனங்களின் பிரிந்துசெல்லும் உரிமையை நியாயப்படுத்த, காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் காலத்து வரலாற்றையும், தத்துவார்த்த விளக்கங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி, மாற்றுக் கருத்து கொண்டோரை, நையாண்டி செய்கிறார்கள். மார்க்சீயத்தின்பால் "அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை' நம்மைப் புல்லரிக்கச் செய்கிறது! இதுபோன்ற தர்க்கங்களில் ஈடுபடுவோரின் "மார்க்சீய பக்தி', "சுயநிர்ணய உரிமை' என்ற முழக்கத்துடன் சுருங்கி விடுகிறது. இதன் மீதான உண்மைத் தேடல்கள் தரும் விளக்கங்களைப் புறக்கணிக்க முடியாது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியா, இலங்கை, பர்மா, இந்தோனேசியா மற்றும் மக்கள் சீனம் ஆகியவை விடுதலை பெற்றன. இதில் மக்கள் சீனத்தார் கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைத்தனர். சற்றேறக்குறைய மேற்குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் இனம், மொழி மற்றும் மதம் ஆகியவை சார்ந்த பிரச்னைகளும் ஏற்றத் தாழ்வுகளும் இன்றளவும் தொடர்கின்றன.

இந்திய விடுதலையின்போது பாகிஸ்தான் உதயமானதைத் தொடர்ந்து சீக்கிய மதத்தினர் தங்களுக்கென்று ஒரு நாடு கேட்டனர். ஹிந்து மதத்தினர், "ஹிந்து ராஷ்ட்ரா' என்று முழங்கினர். திராவிட இனத்தவர் "திராவிட நாடு' என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் மொழி, இனம் மற்றும் மதம் என்ற பெயரில் முன்வந்த பிரிவினை முழக்கத்தை எப்படி எதிர்கொள்வது என கம்யூனிஸ்டுகள் சிந்தித்தனர்.

கம்யூனிஸ்ட் இயக்கம், பலதரப்பட்ட வாத, பிரதிவாதங்களை வலுவாக நடத்தியது. தமிழகத்தில் திராவிட நாடு கோரிக்கையை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. குறிப்பாக, சுயநிர்ணய உரிமை குறித்து இன்றைய வாதங்களைவிட ஆயிரம் மடங்கு வாதங்கள், தத்துவார்த்த விளக்கங்கள் முன் வைக்கப்பட்டன.

கடந்தகால வரலாற்றை முற்றாகப் புறக்கணிக்காமல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மார்க்சிய - லெனினியத்தின் மீற முடியாத கருவியாக இக் கோட்பாடு கருதப்பட்டது. இந்தத் திறவுகோலின் மூலமாக உண்மையைக் கண்டறிய வேண்டுமே அல்லாது ஆசையின் மூலம் அல்ல!

புவி அமைப்பையும், வானியலையும் ஆய்வு செய்த, நிக்கோலஸ் கோபர்நிகஸ் மற்றும் கலீலியோ ஆகியோரைத் தொடர்ந்து, அவர்களின் ஆய்வுகளின் மீது புதிய வெளிச்சத்தை உருவாக்கியவர் ஐசக் நியூட்டன் என்பதை அறிவோம். 1676-இல் ஐசக் நியூட்டன், ராபர்ட் ஹூகி என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ""எனது ஆய்வுகளைத் திறம்பட மேற்கொள்ள, கோபர்நிகஸ் மற்றும் கலீலியோ கண்டறிந்த உண்மைகளில் இருந்து புவியைப் பார்த்ததே என் சாதனை. அதாவது அந்த மாபெரும் பலசாலிகளின் தோள்களில் ஏறி நின்றே புவியைப் பார்த்தேன்; இதைப் பெருமையாகக் குறிப்பிட விரும்புகிறேன்'' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த இயற்பியலின் அடிப்படை அறிவியலை, சமூக அரசியலிலும் பொருத்திப் பார்க்க வேண்டும். அன்று ரஷியாவை ஆண்ட ஜார் மன்னனின் சர்வாதிகாரத்தினால், ஒட்டுமொத்த ரஷிய மக்களும் ஒடுக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, அளவில் சிறிதான பல தேசிய இனங்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தன. புரட்சி வெற்றி பெற்ற பிறகு, அரசியல் மாற்றம் மட்டுமல்லாது, சமூக உரிமைகளையும் சமப்படுத்தும் நோக்கத்துடன் சோவியத் ஒன்றியத்தை வடிவமைத்தனர். அந்த வடிவத்திற்குள் இணைய இருந்த, ஜார் மன்னனின் அச்சுறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான தேசிய இனங்களிடம், புதிய அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும், சோஷலிச அரசின் சம உரிமை குறித்த கொள்கையை அழுத்தமாக வெளிப்படுத்தவும் வேண்டிய அவசியம் அன்று லெனின் தலைமையிலான அரசுக்கு இருந்தது. எனவேதான் சோவியத் அரசியல் சட்டப்பிரிவு 17, "தேசியக் குடியரசுகளுக்கு பிரிந்து செல்லும் உரிமை உண்டு' என்பதையும் வலியுறுத்தியது.

மக்கள் சீனத்தில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டுகள், தங்கள் அரசியல் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சுயநிர்ணய உரிமை குறித்த விவாதத்திற்கு மாவோ பதிலளிக்கையில், ""இப்போதும்கூட சிலர் மார்க்சிய லெனினிய விளக்கங்கள் குறித்து, அரசியல் மாற்றம் அடைந்தவுடன், அனைத்து நோய்களையும் தீர்க்கத் தக்க, தயாரான நிலையில் உள்ள "சர்வரோக நிவாரணி' என்று புரிந்து கொண்டுள்ளனர். இது போன்று அறியாமையில் உள்ளவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும். அதுபோல் வாதிடுபவர்களின் கருத்து குழந்தைத்தனமானது என்பதைப் புரிய வைக்க வேண்டும். மிகச் சரியாகக் குறிப்பிடுவது என்றால் - அந்த அறியாமையில் உள்ளவர்கள் மார்க்சியம் லெனினியம் என்பது மதக் கோட்பாடு போன்றது எனப் புரிந்து வைத்துள்ளனர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், தங்களின் கருத்தியல் ஏற்றுக்கொள்ள முடியாதவை கோட்பாடுகள் அல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி எனத் திரும்பத் திரும்பக் கூறினர். ஆனால், சிலர் இந்த அதிமுக்கியமான, மிகப்பெரிய விளக்கத்தை மறுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து விடுகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார். (மா சே துங் 1942 - கட்சி வேலைகளின் பாணியை நெறிப்படுத்த)

தலாய் லாமா தலைமையில் திபெத்தியர்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருவதை மாவோ ஏற்றுக் கொள்ளவில்லை. சுயநிர்ணய உரிமை குறித்து வாதிடுபவர்கள் மாவோவைத் துணைக்கு அழைப்பதில்லை. இந்தியாவிலும், காஷ்மீர், மிஜோரம், நாகாலாந்து ஆகிய பகுதிகளில் முன்வைக்கப்பட்டு வரும் தனிநாடு கோரிக்கையை இந்திய அரசு ஏற்க மறுக்கிறது.

அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இதர பல அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை, பிரிவினைவாதமும் இருக்கும் என்பதைக் கணக்கில்கொள்ள வேண்டும். நியூட்டன், கோபர்நிகஸ் மற்றும் கலீலியோ ஆகியோரின் தோள்களில் நின்று புவியைப் பார்த்ததைப்போல், இந்திய மார்க்சிஸ்ட்டுகள், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் கருத்துகளின் மீது நின்று இன்றைய உலகையும், சமூகப் பிரச்னைகளையும் அணுகுகிறார்கள்.

ஆப்ரஹாம் லிங்கன், ""எந்த ஒரு நாடும் தானாகவே தன்னை துண்டாடிக் கொள்கிற வாய்ப்பை உருவாக்காது'' எனக் குறிப்பிட்டார். ஆம் அது முதலாளித்துவ அரசோ அல்லது கம்யூனிஸ்டுகள் தலைமையிலான அரசோ எதுவானாலும், தன்னிடம் உள்ள ஒரு பகுதி இன்றைய உலகச் சூழலில் பிரிந்து செல்வதை ஒருபோதும் அனுமதிக்காது. இன்றைய யதார்த்தத்தில் அப்படிப் பிரித்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதும், பொருத்தமாக இருக்காது.

கட்டுரையாளர்:

மத்தியக் குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.