நெல்லை மாவட்டப் புறநகர்ப் பகுதியிலிருந்து நெல்லை மாநகரில் நடைபெற்ற தனது தோழியின் திருமணத்துக்காக பஸ்ஸில் புறப்பட்ட பெண், சுமார் 25 கி.மீ. தொலைவைக் கடக்க 4 மணி நேரத்துக்கும் மேலானது. அவர், திருமணம் நடைபெற்ற மண்டபத்தை அடைந்தபோது, அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுவிட்டார்கள்.
"எங்கோ ஜாதிச் சண்டையாம், அதற்கு இங்கும் பிரச்னை செய்கிறார்கள் இந்த பாழாய்ப்போன கலவரக்காரர்கள். போலீஸ் பாதுகாப்போடு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போலீஸôரோ 5 அல்லது 10 பஸ்களை சேர்த்தே இயக்குவோம் என்று அடம்பிடிக்கின்றனர். சே, ஒரு கல்யாணத்துக்குகூட நிம்மதியாக வர முடியலை' என்று தனது கோபம் தீர வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தார் அந்தப் பெண்.
இன்றைய சூழலில் அரசியல், சமுதாயம் சார்ந்த பிரச்னைகள் எழும்போதெல்லாம் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவதும், பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளாவதும் வாடிக்கையாகிவிட்டது. வெட்டியாக சண்டை போட்டு வெட்டு, குத்து போன்றவற்றை அரங்கேற்றுவதுதான் வீரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு தலைவரின் குரு பூஜை நிகழ்ச்சியின்போது நிகழ்ந்த சில அசம்பாவிதங்களால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, போக்குவரத்து பாதிப்பு, பொதுச் சொத்துகள் சேதம், தனியார் அலுவலகங்கள் தாக்குதலுக்குள்ளானது என பிரச்னைகள் ஏற்பட்டன. அவை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்களும், சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும்போது அரசு வாகனங்கள், ஏ.டி.எம். மையம் என ஏராளமான பொதுச் சொத்துகளை அவர்கள் சேதப்படுத்தினார்கள். அப்படியானால் இவர்களால் சேதப்படுத்தப்படும் பொதுச் சொத்துகளுக்கு யார் நஷ்ட ஈடு தருவது?
இது மட்டுமின்றி ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரின் வாழைத் தோட்டம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்துகிறார்கள். ஒரு மனிதரின் ஓர் ஆண்டு உழைப்பை ஒரு நிமிடத்தில் உபயோகமற்றதாக்கிவிடுகிறார்கள்.
பஸ்களை கல்வீசித் தாக்கிவிட்டு ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். இவர்களின் கல்வீச்சில் தாக்குதலுக்குள்ளாவது அப்பாவி பொதுமக்களே.
நம்முடைய உறவினரில் ஒருவர் தாக்கப்பட்டால் நாம் எவ்வளவு கோபப்படுகிறோம்? நம்மைப் போன்றுதானே மற்றவர்களும் என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள்?
எங்கேயோ, யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, வேறு எங்கேயோ, சம்பந்தமே இல்லாத ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதும், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதும் எந்த வகையில் நியாயம்?
ஒரு பகுதியில் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதன் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்ப முடிவதில்லை. நோயாளிகள் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை. வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்ப முடிவதில்லை.
இதுபோன்ற நேரங்களில் தங்கள் மகன் அல்லது மகள் வீடு திரும்பாவிட்டால், பெற்றோரின் மனம் படும்பாட்டை சொல்லிமாளாது.
இதையெல்லாம்விட கொடுமை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வருவதற்காக ரயில், பஸ் போன்றவற்றைப் பிடிப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் இருந்து இரவில் கிளம்பி வந்த பலர், ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டதால், ரயில், பஸ்களைப் பிடிக்க முடியாமல் தவறவிடும் நிலை ஏற்பட்டது. இரவில் பஸ்கள் ஓடாததால் தனியாக வந்த பெண்கள் மீண்டும் ஊருக்குத் திரும்ப முடியாமல் தகுந்த துணையின்றித் தவித்தனர்.
பாதுகாப்புக்கு நின்ற போலீஸôரிடம் ஏதாவது தகவல் கேட்டால், அவர்களும் பொறுப்பாக பதில் சொல்லாமல் பொதுமக்களிடம் கோபத்தைக் காட்டினார்கள். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் காரணமாகவும் இதே போல பாதிப்புகள் ஏற்பட்டன.
பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறதா? பொதுச் சொத்தைச் சேதப்படுத்தினால் நம்மிடம் திருப்பி வசூலிக்க மாட்டார்கள் என்ற துணிச்சல்தான் காரணம். அதனால்தான் தாக்குதல் நடத்துகிறார்கள். இனி வரும் காலங்களில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமானால், இரண்டு மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
பொதுச் சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடமே அதற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்கள், கலவரங்களைத் தூண்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்காக ஏற்கெனவே உள்ள சட்டத்தை மேலும் கடுமையாக்கி அமல்படுத்த வேண்டும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது, ஆறுதல் கூறுவது போன்றவற்றின் மூலம் பிரச்னையை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இதே நிலை தொடருமானால் எதிர்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.
மகத்தான ஒரு தலைவருக்கு விழா எடுக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. அமைதியான முறையில் விழாவை நடத்தினால் மட்டுமே அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

