தினமணியின் தலையங்கம் முக்கியமானது!
நான் பிறந்து வளர்ந்தது ஒரு சிறிய கிராமம். கீரப்பாளையம் என்று அதற்குப் பெயர். அங்கே ஒருவர் பட்டாணி கடை வைத்திருந்தார்.


நான் பிறந்து வளர்ந்தது ஒரு சிறிய கிராமம். கீரப்பாளையம் என்று அதற்குப் பெயர். அங்கே ஒருவர் பட்டாணி கடை வைத்திருந்தார். அவர் கடைக்குத் தினமணி பத்திரிகை வரும். எங்கள் ஊருக்கு வந்த ஒரே தமிழ் பத்திரிகை அதுதான். தினமணியைப் படிப்பதற்காகவே அந்தப் பட்டாணிக் கடைக்குச் செல்வேன்.
தினமணியில் ஏராளமான உலக விஷயங்கள் வரும். அரசியலில் அறியாத பல பெயர்களை முதன்முதலில் பார்த்து தெரிந்துகொண்டது தினமணி பத்திரிகையைப் பார்த்துதான். உதாரணமாக அஷோக் மேத்தா. அப்போது அவர் பெயர் எனக்குத் தெரியாது. நக்சல்பாரி என்கிற வார்த்தையை முதன்முதலில் தெரிந்துகொண்டது தினமணியைப் படித்துத்தான். விண்வெளியைப் பற்றி தெரிந்து கொண்டதும் தினமணியைப் படித்துத்தான். ஆசிரியர் ஏ.என்.சிவராமன் கட்டுரைகளைப் பார்த்துதான் இதையெல்லாம் தெரிந்துகொண்டேன்.
அக்கிராசனர் என்ற வார்த்தையை முதலில் தெரிந்துகொண்டது தினமணியைப் பார்த்துதான். நீண்டகாலம் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அதன் பிறகுதான் தலைவர் என்ற பதவிக்கு அக்கிராசனர் என்ற வடமொழி சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தது.இப்போதுகூட அந்த வார்த்தை நினைவில் இருக்கிறது.
காமராஜர், ராஜாஜியைப் பற்றி ஏராளமான விஷயங்களை அதில் படித்திருக்கிறேன். அன்றைய தினமணியில் காமராஜரைவிடவும், ராஜாஜிக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததை அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.
காந்தியை மகாகவி பாரதி சந்தித்த ஒரு நிகழ்வைப் பற்றி தினமணியில்தான் ஒரு சிறு செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். மகாத்மாவோடு பாரதி வேறுபட்டார் என்பதையும் அப்போதுதான் புரிந்துகொண்டேன்.
விவசாயத்தைப் பற்றி நிறைய செய்திகள் வரும். மேட்டூரில் தண்ணீர் திறப்பது. காவிரியில் தண்ணீர் வருவது. எவ்வளவு கொள்ளளவு தண்ணீர் இருக்கிறது என்கிற செய்திகளெல்லாம் அப்போது புதிய செய்திகள்.
அப்போது தினமணிக்கு காங்கிரஸ் சார்பு பத்திரிகை என்ற பெயர் உண்டு. திமுகவை எதிர்த்து அதிகம் எழுதுவதைவிட கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து அதிகம் எழுதுவார்கள். அதுவும் எனக்கு நினைவில் இருக்கிறது.
அதன் பிறகு அரசியல் நிலைமைகள் மாறமாற, பத்திரிகையின் நிலைமையும் மாற ஆரம்பித்தது. பாம்பே டையிங் நிறுவனத்துக்கும், அம்பானி நிறுவனத்துக்கும் ஏற்பட்ட தகராறுகளை தினமணியில் படித்துத் தெரிந்துகொண்டேன். வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் அது வெளிவரவில்லை. அது பெரிய செய்தி.
அம்பானி நிறுவனங்கள் எப்படி அரசாங்கத்தை, அதிகாரிகளை தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள், பிற தொழில் நிறுவனங்களைவிட, எப்படி அவர்கள் வளர்ந்தார்கள் என்பதைப் பற்றி கோயங்கா நிறைய எழுதியுள்ளார். ஆழமான செய்திகளை உள்ளடக்கிய தகவல் களஞ்சியமாக அந்தச் செய்திகள் அப்போது எனக்குப்பட்டது.
அதன் பிறகு, இந்திராகாந்தியின் காலம் வந்தபிறகு காங்கிரஸுக்கு எதிரான பத்திரிகையாக தினமணி மாறியது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது, மன்னர்மானியம் போன்றவற்றை தினமணி எதிர்த்தது.
இளம் வயதில் தகவல் தெரிந்துகொள்வதற்கான ஒரு பத்திரிகை என்கிற நிலையிலிருந்து, அது வலதுசாரி கொள்கைகளைப் பரப்பும் பத்திரிகையாக என் கல்லூரிக் காலங்களில் கருத்து ஏற்பட்டது. ஆனால், செய்திகளுக்காக தினமணியை எப்போதும் படித்து வந்துள்ளேன்.
1986-இல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆன பிறகு எனக்கு நிறைய செய்திகள் தேவைப்பட்டன. அப்போது எனக்கு இருந்த ஒரே செய்திக் களஞ்சியம் தினமணிதான். காவிரியைப் பற்றிய நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதினேன்.
அதில் சில தகவல்களில் தவறு இருந்துள்ளது. அப்போது நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர் தொடர்புகொண்டு, காவிரி ஒப்பந்தத்தை கருணாநிதி புதுப்பிக்காமல் விட்டது தவறு என்று கூறியிருப்பது சரியல்ல. இந்திராகாந்தியின் அழுத்தம் காரணமாகவே யுக்திக்காக அதைச் செய்தார். காவிரி பிரச்னையைச் சமூகமாகத் தீர்த்து வைப்பதாக பிரதமர் கூறியதாகவும் அதனால், அதை கருணாநிதி விட்டு விட்டதாகவும் கூறினார். அதனால், தினமணி என்பது பல்வேறு மாற்றுக் கருத்துகளைப் பதிவுசெய்யும் ஏடாக இருந்தது.
முதல் முறையாக நான் சட்டப்பேரவை உறுப்பினராக ஆன பிறகு தினமணியுடன் என் நெருக்கம் அதிகமாயிற்று. தொடர்ந்து சில கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
அதன் பிறகு, அரசியலில் தீவிரமாக நான் சில பொறுப்புகளை ஏற்ற பிறகு, தினமணி முழுமையும் பாஜகவின் பத்திரிகையாக மாறிப்போய்விட்டது. ஆசிரியராக வைத்தியநாதன் பொறுப்பேற்ற பிறகும் அதே நிலை தொடர்ந்தாலும், அதிலிருந்து கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், பாஜகவுக்காக ஒரு பிரசாரம் நடைபெறுகிறது. அதை இல்லையென்று நான் சொல்லவில்லை.
எனினும், 2 ஆண்டுகளுக்கு மேலாக தினமணி பத்திரிகை மிகவும் தரமாக வருகிறது. செய்திகளில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய, செய்திகளைப் பத்திரிகைகள் சொல்லும் விதம், எல்லாத் தரப்பு செய்திகளையும் வெளியிடும் விதம் எல்லாம் பாராட்டத்தக்கது. குறிப்பாக தினமணி தலையங்கத்தின் தரம் அப்படியே இருக்கிறது.
தினமணியின் தலையங்கம் என்பது தமிழகத்தில் மிகவும் முக்கியமானது. தினமணியின் தலையங்கத்தை வைத்து சட்டப்பேரவையில் நான் அதிக முறை பேசியுள்ளேன். எனவே, தமிழகத்தினுடைய பொதுவாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் எல்லாத் துறைகளில் தினமணி என்பது முத்தாரம் பதித்த ஒன்று. தினமணியை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...