கொடுமையிலும் கொடுமை - தலையங்கம்
எண்ணிப் பார்க்கக்கூட முடியாத கொடுமை நிகழ்ந்துவிட்டது. அதுவும் நம் தமிழகத்தில்.


கொடுமையிலும் கொடுமை
எண்ணிப் பார்க்கக்கூட முடியாத கொடுமை நிகழ்ந்துவிட்டது. அதுவும் நம் தமிழகத்தில்.
தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்து, நான்கு தலைமுறைகளாகச் சீரிய தொண்டாற்றி வந்துள்ள ஒரு பெருங் குடும்பத்தின் வழித்தோன்றல், அடுத்த இரு வாரங்களில் மீண்டும் பாரதப் பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து, வெறியர்களின் வெடிகுண்டுக்கு இரையாகிவிட்டார்.
ராஜீவ் காந்தியின் அகால மரணம், நாட்டின் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். 1948-ல் மகாத்மா காந்தியும், 1984-ல் இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்பட்டபோது அனுபவித்த வேதனைக்கு நாடு மீண்டும் உள்ளாக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.
ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு யார் காரணம் என்று இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. மிகவும் சக்திவாய்ந்த இந்தக் குண்டை வெடித்தது பயிற்சிபெற்ற பயங்கரவாதிகளின் செயலாகவே இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. எனினும், முழு உண்மை வெளியாகும்வரை அரசியல் கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலும் வீண் பழி சுமத்தல்களிலும் ஈடுபடாது, நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணித்து, அமைதி மீளும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம்.
ராஜீவின் மறைவையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழகத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பெருந் தலைவர்கள் மறைவில் மக்களுக்குத் துயரம் ஏற்படுவது இயற்கையே; எனினும் பஸ்களையும் கார்களையும் கொளுத்துவதும், ரயில், சாலைப் போக்குவரத்தை மறிப்பதும், பொதுச் சொத்துகளுக்கும் தனியார் உடைமைகளுக்கும் சேதம் விளைவிப்பதும் இவற்றால் பொதுமக்களுக்கு அளவிலா தொல்லைகள் தருவதும் இத் துயரத்திற்கு நியாயமான வடிகால் அல்ல. அமைதியான மெளன ஊர்வலங்களும், பிரார்த்தனைக் கூட்டங்களுமே மறைந்த தலைவருக்கு அஞ்சலி தெரிவிக்கும் கண்ணியமான வழிகளாகும். இனியாவது இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் சில கட்டுப்பாடான வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும்.
இப்பொழுது நடக்கும் தேர்தல்கள் நாட்டில் இதுவரை கண்டிராத அளவுக்கு வன்முறையைத் தோற்றுவித்துள்ளன. வேட்பாளர்களும், வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரிய அளவில், திட்டமிட்ட முறையில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டும், வாக்குச் சீட்டுகள் வாக்குப் பெட்டிகளில் திணிக்கப்பட்டும் வருகின்றன. மத்திய, மாநில அமைச்சர்கள்கூட இத்தகைய தேர்தல் ஒழுங்கீனங்களிலும் வன்முறைச் செயல்களிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகக் கூறும் செய்திகளை நம்புவதே கடினமாக உள்ளது.
ராஜீவ் காந்தியின் மரணத்தையடுத்துத் தோன்றியுள்ள பதற்றநிலையில் தேர்தல்களைத் தொடர்ந்து நடத்துவது முடியாத காரியமாகும். எஞ்சியுள்ள வாக்கெடுப்புகளை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது தவிர்க்க முடியாததாகும்.
முந்தைய தேர்தல்களில் இராத அளவுக்கு இப்பொழுது மத வேறுபாடுகளும் சாதி வேறுபாடுகளும் தேர்தல் பிரச்சினைகளாக்கப்பட்டு, மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு, வன்முறைக்குக் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறைக் கலாசாரத்திற்கு களப்பலியாக ராஜீவ் காந்தியை நாடு பறிகொடுத்துவிட்டது.
அமைதிப் பூங்கா என்று ஒரு காலத்தில் பெயரெடுத்த தமிழகத்தை இனியும் அவ்வாறு அழைப்பது பொருந்தாது என்பதை நமது மாநில மண்ணில் நடந்துள்ள இந்தப் படுகொலை உறுதிப்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புகளும், ரயில் கவிழ்ப்புகளும், படுகொலைகளும், கடத்தல்களும் தமிழகத்தில் பரவிவரும் ஆயுதக் கலாசாரத்தின் வெளிப்பாடுகளேயாகும். சென்னைக்கு வெகு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திறந்தவெளியில் திரளான மக்கள் முன்னிலையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது தமிழ் மக்களை வெட்கித் தலைகுனியச் செய்துவிட்டது.
நம் நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில், இனியாவது வன்முறைக்கும், வன்முறையைத் தூண்டும் அரசியலுக்கும் இடம் கொடோம் என்று மக்கள் உறுதி பூண்டால் அதுவே ராஜீவ் காந்தியின் நினைவுக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள அஞ்சலியாக அமையும்.
ராஜீவ் படுகொலையை அடுத்து வன்முறை அரசியலுக்கு இடம் தரக் கூடாது என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட தலையங்கம். (23.5.1991)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...