தோழமையுடன் பழகிய ‘தினமணி’ ஆசிரியர்கள்!
தினமணிக்கு எண்பத்து ஐந்து வயது என்றால், இப்பொன்னான பத்திரிகையுடன் என் குடும்பத்தின் தொடர்பு எழுபத்து ஐந்து ஆண்டுகள் ஆயிற்றே!


தினமணிக்கு எண்பத்து ஐந்து வயது என்றால், இப்பொன்னான பத்திரிகையுடன் என் குடும்பத்தின் தொடர்பு எழுபத்து ஐந்து ஆண்டுகள் ஆயிற்றே!
என் தந்தையார், கே.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார் போற்றிய, நண்பர் ஆசிரியமணி ஸ்ரீ சிவராமன். ஒரு புதிய மொழி கற்க முயற்சி செய்யும்போது கஷ்டமாக இருக்கிறது என்று நான் தந்தையாரிடம் சொன்னபோது, "நம்ம சிவராமன் இருக்காரே, அவர் பதினேழு மொழிகளில் பேசுவார், எழுதுவார். மூன்றாவது மொழி கற்பதற்கு பின் வாங்குவார்களா?'' என்றார்.
எழுத்தாளனுக்கு வேண்டியது பன்மொழி ஞானம். உலகளாவிய பார்வை, மனிதநேயத்தில் நம்பிக்கை, தேசபக்தி, லட்சியங்கள் நிறைந்த வாழ்க்கை இவையனைத்தும் கொண்டிருந்த சிவராமன், ராம்நாத் கோயங்கா தோற்றுவித்த கோமுகிப் பொய்கை போன்ற எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் மூலம் நமக்களித்துள்ள அமுதசுரபியே இன்றைய தினமணி.
சமையற்கட்டே தனது சாம்ராஜ்யம் என்று இருந்த பல பெண்மணிகளை எழுத்தாளர்களாக்கிய வித்தை தினமணி ஆசிரியர்களால் (அவர்களிடம் பணிபுரிந்த நல்ல இணை ஆசிரியர்களால்) பல முறை நடந்துள்ளது.
நாற்பதாண்டுகளுக்கு முன்பு தினமணியில் இருந்த ஏ.ஜி. வேங்கடாச்சாரியை என்னால் மறக்க முடியாது. என் பெற்றோரைப் பார்க்க வந்தபோது, அம்மா தான் ஒரு சமயம் பார்த்த தோல் பொம்மை ஆட்டத்தைப் பற்றி சொல்வது கேட்டு, இவ்வளவு ரசமாக சொல்லும் நீங்கள் எங்க தினமணிக்கு எழுதுங்கள் என்றதால் தோன்றியதே அன்புள்ள அருணா எனும் கடிதக் கோவை.
என்னைப் பொறுத்தவரை, நான் வட மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால் தினமணி படிப்பது நின்று போயிற்று. என் பெற்றோர் எழுதும் கடிதங்களிலிருந்து அதன் வெற்றிகரமான, தைரியமான முன்னோடிகளைப் பற்றி தெரிந்து கொள்வேன். ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்தபோது, 1975-இல் இந்திராகாந்தி தோற்றுவித்த நெருக்கடி நிலையில் துவண்டது. அப்போது, தலையங்கப் பகுதியை காலியாக வைத்து எதிர்ப்பைக் காட்டியது. அதோடு அச்சமயம் சிவராமன் எழுதிய ஜனநாயகம் பற்றிய கட்டுரைகள் பற்றி என் தந்தையார் கடிதங்களில் குறிப்பிடுவார். மிகவும் பெருமையாக இருக்கும்.
அப்போது, நான் விஜயவாடாவிலிருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில தினசரிக்கு எழுதி வந்தேன். சென்சார்கள் பத்திரிகைக்குத் தந்த பிரச்னைகள் காரணமாக நானும், என் போன்றவர்களும் இலக்கியம், பண்பாடு என்று கட்டுரைகள் சமர்ப்பித்தோம். அதனால், தெலுங்கு, தமிழ் இலக்கியங்களையும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று என்னுள் ஆர்வம் வந்தது. தமிழ் இலக்கியத்தை நன்கு படிக்க ஆரம்பித்தேன்.
நான் திருவரங்கத்தில் குடிவந்தபோது, மீண்டும் தினமணி படிக்கத் தொடங்கினேன். அச்சமயம் ஒருநாள் எனக்கு ஐராவதம் மகாதேவனிடமிருந்து கடிதம் வந்தது. தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்துவீட்டீர்களாமே. இப்போது, தினமணி ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளேன். நீங்கள் எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டார். எனக்கு அவர் சொல்வது எப்பொழுதுமே கட்டளைதான்.
நான், ஆங்கில தினசரிகளில் எழுதி வந்த தலைப்புகளில் அணுசக்தி மற்றும் மது அருந்துதலின் ஆபத்து பற்றி முக்கியமாக எழுத வேண்டும் என்றார். அப்படியே செய்தேன். அவருக்கு இதுபோன்ற பிரச்னைகளின்போது கூட சிறிது சிரிக்க வைக்க முடியும் என்பதை ரசித்தவர்.
அணுசக்தியின் கழிவுகளுக்கு ஒரு இடம் பார்க்காமல் கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைக்கும் அரசாங்க முடிவு பற்றி எழுதியபோது, நான் கொடுத்த தலைப்பு "கழிவுப் பொருள்களுக்கு ஒரு குப்பைத் தொட்டி'. அதற்கு தொலைபேசியில் ஐராவதம் மகாதேவன் சிரித்த சிரிப்பு ஒன்றே போதுமே!. வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி தினமணி எனக்குத் தந்த பரிசு அல்லவோ?
அதுபோல மது அருந்துவது, அதை அரசாங்கமே லாபத்திற்காக விற்பது பற்றியெல்லாம் கண்டித்து எழுதியபோது, ஒருமுறை முத்துக்கண்ணப்பனார் தொலைபேசியில் அழைத்து கள்ளுக்கடை மறியலின்போது, எங்கள் மேல் சாக்கடைத் தண்ணியை கொண்டுவந்து தலைமேல் கொட்டினார்கள் அம்மா. அப்படியான காந்தி யுகத்தில் தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட பின், இந்த அவலங்களைப் பார்க்கும்படி வித்தாயிற்று என்று வருந்தினார். அந்த முதுபெரும் புலவர் குரலில் விம்மிய சோகமும் தினமணி எனக்குத் தந்த ஆசியாகவே கருதுகிறேன்.
தினமணியில் எழுதிய புத்தக விமர்சனங்களும் எனக்கு பலரிடமிருந்து பாராட்டல்களை தந்தன. ஐராவதம் மகாதேவனைப் போல தினமணியில் மற்ற ஆசிரியர்களும் என்னுடன் தோழமையுடன் பழகியவர்களே. இவர்களில், இராம. சம்பந்தம் மிகவும் முக்கியமானவர். அவர், கண்டிப்புக்காரர், கோபக்காரர் என்று கேள்விபட்டதுண்டு. ஆனால், என்னைப் பொருத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டும் சகோதரனாகவே இருந்தார்.
அவர், ஆசிரியராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளில் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் இரண்டைக் குறிப்பிடுகிறேன். என், தந்தையார் மறைந்தபோது இரங்கலுக்காக வந்தவர், நான் திருவரங்கத்திலிருந்து வந்திருப்பது தெரிந்து நான்தாம்மா தினமணி சம்பந்தம் என்றார் (அவரை நான் முன்பு பார்த்ததில்லை). நீங்கள் திருவரங்கம் திரும்பும் முன்னரே எனக்கு உங்கள் தந்தையார் பற்றி ஒரு கட்டுரை தர வேண்டும் என்றார். அப்படியே செய்தேன். அதை வெளியிட்டார். இது, என் மனதை மிகவும் நெகிழச் செய்தது.
அரசாங்கத்தை நியாயமான முறையில் சினந்தால், தினமணி ஆசிரியர்கள் கோபித்துக் கொண்டதில்லை.
திருமங்கை மன்னன் திருவரங்கத்தில் கட்டிய மதில் இடிந்துபோவதை தடுக்க முயற்சி ஏதும் எடுக்காத அரசாங்கத்தை நான் விமர்சித்து கட்டுரை எழுதியபோது, அது வெளியான அன்றே அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஆனவ செய்திட கட்டளையிட்டு மறுநாளே மதில் சீரமைப்புப் பணி தொடங்கியது. தினமணியின் பெருமையை, இராம. சம்பந்தத்தின் திண்மையை, அழுத்தமான ஆளுமையுடன் நடத்தி வந்ததை இச் சம்பவம் நமக்கு படம் பிடித்துக்காட்டுகிறதல்லவா?
திருச்சியில் தினமணி தொடங்கியபோது, தொடக்க நாள் அன்று உங்களது கட்டுரை கட்டாயம் வேண்டும். உடனே, பத்திரிகைகள் அன்றும், இன்றும் எனும் தலைப்பில் எழுதித் தாருங்கள் என்று அவரிடமிருந்து வந்த கடிதம் என்னை நேரே எனது கணினிக்கு கொண்டு உட்கார வைத்துவிட்டது.
இப்படிச் சிறந்த ஆசிரியர்கள் தலைமையில் தினமணியில் கட்டுரைகள் எழுதி வந்த ஆண்டுகள் என்னால் மறக்க முடியாதவை. தினமணி இன்றும் என்னிடம் அன்பு காட்டுவது என் பாக்கியம். இப்போது, ஆசிரியர் வைத்தியநாதன் கேட்கும்போது மட்டுமே எழுதுகிறேன். உற்சாகம் இருக்கிறது. ஆனால், உடல் தளர்ந்துவிட்டதை என்ன செய்வது?. ஆனால், தினமணியிடம் என் அன்பு, நன்றி, இவ்விதழைப்பற்றி நான் கொண்டுள்ள பெருமை முதலியவற்றுக்கு தளர்வு ஒருநாளும் வராது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...