இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி
தினமணி 85 ஆண்டுகள் நிறைவு செய்து 86 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கியுள்ளதையொட்டி ஆன்மிக தலைவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி


தினமணி 85 ஆண்டுகள் நிறைவு செய்து 86-ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கியுள்ளதையொட்டி ஆன்மிக தலைவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி..
தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

தினமணி நல்ல தகுதியான நடையில் உண்மைச் செய்திகளை மரபுகளும், பண்பாடும் திரியாமல் நடுநிலையோடு, நாட்டுப்பற்றோடு, பொதுமக்கள் நலனில் அக்கறையோடு எவ்வித சார்புமின்றி சுதந்திரமாக, சமூக குறைகளைச் சுட்டிக்காட்டி மக்களின் கருத்தை கவரும் இதழாக திகழ்ந்து வருகிறது.
தமிழகத்தில் அரிய பணிகளை ஆற்றி, தொடர்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி வரும் தினமணி நாளிதழ் 85-ஆம் ஆண்டை கொண்டாடுவது சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியது. தினமணி தொடர்ந்து மக்களுக்குப் பணிசெய்து நல்ல கருத்துகளை நடுநிலையோடு வழங்கி புகழினைப் பெற்றிடவும், இதன் ஆசிரியரும், பணியாற்றுவோரும், வாசகர்களும் எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச்சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
**
குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார்

நாம் அறிந்த காலம் தொட்டு இளமைக் காலத்திலிருந்து தினமணி நாளிதழை வாசித்து வருகிறோம். தமிழ் நாளிதழ்களில் நடுநிலை தவறாமல் தமிழ்ப் பணி ஆற்றி வரும் நாளிதழ் தினமணி.
தினமணி நாளிதழில் வெளிவரும் ஆசிரியரின் தலையங்கம் மற்றும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சான்றோர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் சிந்தனைகளை தாங்கி வெளிவரும் கட்டுரைகள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமன்றி உலகளாவிய உயர் சிந்தனையோடும், அறிவு நுணுக்கத்தோடும் செயல்பட முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
தமிழ் மொழி வளர்ச்சிப் பணியில் தினமணி முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதற்கு உதாரணம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை தமிழார்வலர்கள் மட்டுமன்றி இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தினமணி தமிழ்மணி பகுதியில் வாரந்தோறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
தினமணி நாளிதழ் வளர்ச்சி மற்றும் அந்நாளிதழ் தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றுவதற்கு அதன் ஆசிரியர்களாக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், மாலன், இராம.திரு.சம்பந்தம் மற்றும் தற்போதைய ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமானது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தினமணி நாளிதழின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தமிழுக்கு ஆற்றிய பணியை 85 ஆண்டு காலம் நிறைவு செய்து, 86 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமணி நாளிதழுக்கு நல்வாழ்த்துகள். தினமணியின் தமிழாக்கப் பணிகள் வளரட்டும்... தொடரட்டும்.
**
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் ஸ்ரீ அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் மடத்தின் ஜீயர் (குமாரவாடி ஸ்ரீஉ.வே.சே.ராமாநுஜாச்சாரியார்)

1944 -ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை தினமணியில், தினமணி சுடர், மதிப்புரை, சினிமா மற்றும் கலைத் துறையில் பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகள் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.
தினமணியில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள்தான், பிற்காலத்தில் நான் ஆன்மிகத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திவ்யதேசங்களுக்கு நடைப்பயணம் செல்ல பெரும் உதவியாக இருந்தது.
தேச விடுதலைக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் தினமணி நாளிதழ் பெரும் பங்காற்றியுள்ளது. அந்தக் காலகட்டத்தில், தினமணியில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தன. தினசரி நாளிதழ்களில், தினமணியில்தான் முதன்முதலாக சிறப்பு மலர்கள் (ஞாயிறுமலர், இளைஞர்மணி, தினமணி சுடர் போன்றவற்றை) கொண்டுவரப்பட்டன. அதன்பிறகுதான் மற்ற நாளிதழ்களில் கொண்டுவரப்பட்டன. வாரமலர்களுக்கு முன்னோடி தினமணிதான். ஆசிரியர் ஏ.என்.சிவராமனுடன் தினமணியில் பணியாற்றிய காலங்கள் மறக்க முடியாதவை.
**
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

1965-ஆம் ஆண்டிலிருந்து "தினமணி' நாளிதழைத் தொடர்ந்து கண்ணுற்று வருகின்றோம். தமிழ்மொழியில், பல்வேறு நாளிதழ்கள் இருந்தாலும்கூட, "தினமணி' நாளிதழ் காலத்தால் மிக மூத்ததாக அமைந்துள்ளது. நாட்டின் நல்ல தலைவர்களைப் போற்றி மதித்திடும் பண்பு அக்காலம் தொட்டு, இக்காலம் வரை கடைப்பிடிக்கப்பெற்று வருகிறது.
சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப் பெறுகின்ற நாளிதழாக "தினமணி' திகழ்கின்றது. மேலும், நாள்தோறும் வெளிவருகின்ற தலையங்கக் கட்டுரைகளும், மக்களுக்குரிய வகையில் நியாயமாகவும் நேர்மையாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட "தினமணி' நாளிதழ் மென்மேலும் பீடுநடை போட வேண்டுமென்று, எல்லாம் வல்ல இறைவனை ஆசிர்வதிக்கின்றோம்.
**
சத்குரு ஜக்கி வாசுதேவ்

சிறப்புமிக்க "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி 86-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க உள்ளது பாராட்டுக்குரியது. மகாகவி பாரதியாரின் நினைவு நாளன்று தொடங்கப்பட்ட "தினமணி' தமிழ் மொழிக்கு தொடர்ந்து கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் படிக்கும் விதமாக செய்திகள் வெளியிடுவது தினமணியின் தனிச் சிறப்பு. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களுக்கு பயன் தரும் செய்திகளும், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.
இந்நாளிதழ் சிறப்பாக வெளிவருவதற்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாகத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...