அங்கு கிராமங்களில் தங்கிப் பயணம் செய்ததால் இப்போது அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்துகொண்டோம். பல வீடுகளுக்குச் சென்றோம். புகழ் பெற்ற இடங்களைத் தவிர்த்து பல உள்ளூர் இடங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைத் தோழியுடன் சென்றதால் இவ்வரிய வாய்ப்புகள் கிடைத்தன. மட்டக்களப்பு, வவுனியா, மானிப்பா யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, காரை ,மன்னார், ஈழத்துச்சிதம்பரம், கிண்ணபுரம், நெல்லிப்பாளை, கீரிமலை, இடங்களுக்குச் சென்றோம். ஓர் அநாதை விடுதியில் அன்னதானம் செய்தோம். முதியோர் இல்லத்தில் நிதி நன்கொடை வழங்கிவிட்டு அவர்களுடன் சில மணி நேரதத்தைக் கழித்தோம். பல கதைகளை அங்கிருந்தோரின் மூலம் அறிந்தோம். நான் சொல்வது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அன்பு, பாசம், காதல், எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு திருப்பி அவற்றை எதிர்பார்த்து வாழ்வோர் அங்கு ஏராளம்.புதிய உறவுகளை அவர்கள் புதிய முறைகளில் உருவாக்கியிள்ளனர் என்றுதான் எனக்குத் தோன்றியது. தமிழர் பகுதிகளில் பல பெரிய பெரிய வீடுகளில் வயதானவர்களே வாழ்நாளைக் கழிக்கின்றனர், இப்படி வாழ்வோர் எதையும் எதிர்பார்க்காது எதோ வாழ்கின்றனர், ஆங்காங்கே ஓற்றைப் பனைமரங்கள் ஓலமிடுகின்றன.