தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டி “காரியம் யாவிலும் கை கொடுப்பாள்’- க்காக கிடைத்த வாசக வரவேற்பு அமோகமாக இருந்தது. போட்டிக்காகத் தங்களது வாழ்வில் ஒளியேற்றிய பெண்கள் குறித்து பலரும் மின்னஞ்சல் வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் எழுதி அனுப்பியிருந்தனர். ஒவ்வொரு கடிதத்தையும், மின்னஞ்சலையும் வாசிக்க, வாசிக்கப் பெண்களை மகாசக்தி ரூபமாகக் கண்ட பாரதியின் கனவு வரிகள் என்றுமே பொய்த்துப் போவதில்லை என்பதை உணர முடிந்தது. ஆம்... பாட்டியென்றும், அம்மாவென்றும், சித்தியென்றும், அத்தையென்றும், சகோதரியென்றும், மகளென்றும், மனைவியென்றும், தோழியென்றும், காதலியென்றும் பெண்கள் தான் எத்தனையெத்தனை ரூபங்களாகத் தங்களுக்குப் பிரியமானவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காக சலிப்பின்றி உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று யோசிக்கையில் பெருமிதமாக இருந்தது.