கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழ் சினிமா 2019: திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்!

இந்த வருடம் பல தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. அவற்றின் தொகுப்பு...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

எழில்

திருமணம் என்றாலே கொண்டாட்டமான நிகழ்ச்சி தான். இந்த வருடம் பல தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. அவற்றின் தொகுப்பு:

நடிகர் ஆர்யா - நடிகை சயீஷா

Story image

பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலர்ந்துள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துள்ளார்கள்.

ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், மார்ச் மாதம் நடைபெற்றது. ஆர்யாவின் திருமண நிகழ்ச்சிகள் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலாக்நுமா பேலஸில் நடைபெற்றன. 

நடிகை அஷ்ரிதா - கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே

Story image

சித்தார்த் நடித்த உதயம் என்.ஹெச்4 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஷ்ரிதா. இவர், இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை இந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். 30 வயது மணீஷ் பாண்டே 23 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

இயக்குநர் செளந்தர்யா ரஜினி - நடிகர் விசாகன்

Story image

வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார். 

கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து செளந்தர்யா, விசாகனைத் திருமணம் செய்துகொண்டார்.  

நகைச்சுவை நடிகர் சதீஷ்

Story image

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் திருமணம் இந்த மாதம் நடைபெற்றது.

சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவை சதீஷ் திருமணம் செய்துகொண்டார். 

நடிகை ஆல்யா மானசா - நடிகர் சஞ்சீவ்

Story image

ராஜா ராணி தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் காதலர்களான சஞ்சீவ் - ஆல்யா, தாங்கள் திருமணம் செய்துகொண்டது குறித்துக் கடந்த செப்டம்பர் மாதம் தகவல் தெரிவித்தார்கள். மேலும், ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளதாகக் கடந்த மாதம் சஞ்சீவ் தெரிவித்தார். 

இயக்குநர் விஜய்

Story image

ஐஸ்வர்யா என்கிற மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார் இயக்குநர் விஜய்.

இது இயக்குநர் விஜய்யின் 2-வது திருமணம் ஆகும். 2014-ல் நடிகை அமலா பாலை இயக்குநர் விஜய் திருமண செய்த நிலையில் இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள்.

நடிகை மைனா நந்தினி - நடிகர் யோகேஷ்வரன்

Story image

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற மைனா நந்தினிக்கும் நடிகர் யோகேஸ்வரனுக்கும் இந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்பு மைனா நந்தினி, கார்த்திகேயன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2017-ல் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார். 

அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களில் மைனா நந்தினி தற்போது நடித்து வருகிறார். நாயகி, ராஜா ராணி, சத்யா போன்ற தொடர்களில் யோகேஸ்வரன் நடித்துள்ளார்.

பாடகி ரம்யா என்எஸ்கே - நடிகர் சத்யா

நடிகை சனம் ஷெட்டியுடன் ரம்யா என்.எஸ்.கே. (வலது) - சத்யா

நடிகை சனம் ஷெட்டியுடன் ரம்யா என்.எஸ்.கே. (வலது) - சத்யா

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ரம்யா என்எஸ்கே. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கேவின் பேத்தி இவர். கடந்த வருடம் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கலந்துகொண்டு கவனம் பெற்றார்.

கடந்த செப்டம்பர் மாதம், நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் ரம்யா என்எஸ்கே. இத்திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான மும்தாஜ், ஜனனி மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ரம்யாவின் கணவர் சத்யா, மன்னர் வகையறா படத்திலும் நீலக்குயில் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத்

Story image

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபாகரனைத் திருமணம் செய்துகொண்டார். அனிதா, சில படங்களிலும் நடித்துள்ளார்.

3 வருடக் காதல். பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த திருமணம் என்று கூறியுள்ளார் அனிதா சம்பத்.

இருமுகன் இயக்குநர் ஆனந்த் சங்கர்

Story image

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், திவ்யங்கா ஜீவானந்தத்தை ஜூலை 11 அன்று சென்னையில் திருமணம் செய்தார். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் துபையில் நடைபெற்றது. 

பிக் பாஸ் வைஷ்ணவி

Story image

எழுத்தாளர் சாவியின் பேத்தியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவருமான வைஷ்ணவி, விமானி அஞ்சனைக் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.