தமிழ் சினிமா 2019: நம்மை விட்டுப் பிரிந்த நட்சத்திரங்கள்!
இந்த வருடம் இயக்குநர் மகேந்திரன், நகைச்சுவை நடிகரும் வசகனர்த்தாவுமான கிரேஸி மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களை தமிழ் சினிமா இழந்துள்ளது...


இந்த வருடம் இயக்குநர் மகேந்திரன், நகைச்சுவை நடிகரும் வசகனர்த்தாவுமான கிரேஸி மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களை தமிழ் சினிமா இழந்துள்ளது.
நடிகர் கிரீஷ் கார்னாட் (81)

ஞான பீடவிருது பெற்ற பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட் உடல்நலக் குறைவால் கடந்த ஜுன் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக கர்நாடக அரசு அறிவித்தது. கிரீஷ் கார்னாட்டின் விருப்பப்படியே, அவரது உடலுக்கு மாலை, மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்த முக்கியப் பிரமுகர்கள் யாரையும் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அவரது உடல் எந்தவித மதச்சடங்குகள், அரசு மரியாதை இன்றி, எளியமுறையில் தகனம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற எழுத்தாளர், நாடகக் கலைஞர், நடிகர், திரைப்பட இயக்குநர், முற்போக்கு சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்டவர் கிரீஷ் கார்னாட். இவருக்கு மனைவி சரஸ்வதி, மகன் ரகு கார்னாட், மகள் சால்மொழி ராதா கார்னாட் ஆகியோர் உள்ளனர். கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்டபல்வேறு மொழி திரைப்படங்களிலும், ஏராளமான நாடகங்களிலும் கிரீஷ் கார்னாட் நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் எழுதிய பல்வேறு நாடகங்கள், இலக்கியப் படைப்புகள் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு இந்திய, வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கன்னட இலக்கியத்துக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பைக் கருத்தில் கொண்டு 1998-ஆம் ஆண்டில் ஞானபீட விருது, 1974-இல் பத்மஸ்ரீ, 1992-இல் பத்மபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. கன்னட இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளராக கருதப்பட்ட யூ.ஆர்.அனந்த் மூர்த்தி எழுதிய புதினம் 'சம்ஸ்காரா'வை 1970-இல் திரைப்படமாக எடுத்து, கன்னடத் திரையுலகில் கிரீஷ் கார்னாட் நுழைந்தார். பட்டாபிராமரெட்டியால் இயக்கப்பட்ட அந்தப் படத்துக்கு குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை விருது கிடைத்தது. கன்னட திரைப்படத்துக்குத் தங்கத்தாமரை விருது கிடைத்தது இதுவே முதல்முறையாகும். இவர் 10 தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 1986-இல் இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்துள்ள "நான் அடிமை இல்லை' படத்தில் முதன்முதலில் தமிழில் அறிமுகமான கிரீஷ் கார்னாட்,1991-இல் குணா, 1994-இல் காதலன், 1997-இல் ராட்சசன், மின்சாரக் கனவு, 2000-இல் ஹேராம், 2004-இல் செல்லமே, 2011-இல் நர்த்தகி, 2012-இல் முகமூடி ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி (55)

நான் கடவுள், தவசி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தேனி மாவட்டம் குமுளியில் படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
நடிகர் ஜே.கே. ரித்தீஷ் (46)

நடிகரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம், மணகுடியைச் சேர்ந்த குழந்தைவேலின் மகன் ஜே.கே.ரித்தீஷ். பொறியியல் பட்டதாரியான இவர், கானல் நீர், பெண் சிங்கம், நாயகன், சின்னபுள்ள மற்றும் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். பின்னர் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டில் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் சேர்ந்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். பின்னர் ராமநாதபுரம் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தார். மணகுடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பகலில் ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இறந்த நடிகர் ரித்தீஷுக்கு ஜோதி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இயக்குநர் மகேந்திரன் (79)

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அவருக்கு வயது, 79. முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, கை கொடுக்கும் கை போன்ற முக்கியமான தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் வெளியான சாசனம் அவர் இயக்கிய கடைசிப் படம். தெறி, சீதக்காதி, நிமிர், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கிரேஸி மோகன் (66)

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (1952 - 2019) மாரடைப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். 1952-ல் பிறந்த கிரேஸி மோகன், 1983-ல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தார். 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக கமல் - கிரேஸி கூட்டணி இணைந்தது. அதன்பிறகு இந்தக் கூட்டணி மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் எனப் பல படங்களில் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
கிரேஸி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஜினி நடித்த அருணாச்சலம் படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் (59)

திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் (59) உடல் நலக்குறைவால் சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.
பாரதிராஜாவின் "நிழல்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் நடித்தவர். பின்னர் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டிய இவர், இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து "பாலைவன ரோஜாக்கள்', "சின்னப் பூவே மெல்லப் பேசு' , "பறவைகள் பலவிதம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். ராபர்ட் - ராஜசேகர் என இருவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இவர்கள் இடம் பிடித்தனர். பின்னர் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடித்து வந்தார். ராஜசேகருக்கு மனைவி நூரிவி உள்ளார்.
பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி (72)

20-ஆம் நூற்றாண்டில் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகையாக இருந்தவரும், பழம்பெரும் நடிகையுமான கீதாஞ்சலி (72), நவம்பர் மாதம் காலமானாா்.
ஆந்திரத்தில் கடந்த 1947-ஆம் ஆண்டு பிறந்த இவா், தெலுங்கில் வெளியான ‘சீதாராம கல்யாணம்’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா். அதன் பின்னா் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் அவா் நடித்துள்ளாா். தமிழில் ‘அன்னமிட்ட கை’, ‘தாயின் மடியில்’, ‘கங்கா கௌரி’ உள்ளிட்ட படங்களில் அவா் நடித்துள்ளாா்.
நடிகா் பாலாசிங் (67)

நடிகா் பாலாசிங் மாரடைப்பு காரணமாகக் கடந்த மாதம் சென்னையில் காலமானாா். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பிறந்த பாலாசிங், சிறு வயது முதலே மேடை நாடகங்கள் மீது பற்று கொண்டவா். நடிகா் நாசரின் அறிமுகத்தால் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்தாா். ‘இந்தியன்’,‘ராசி’, ‘புதுப்பேட்டை’, ‘விருமாண்டி’, ‘தானா சோ்ந்த கூட்டம்’, ‘காமராசு’, ‘சாமி 2’, ‘என்.ஜி.கே’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். இவரது நடிப்பில் கடைசியாக வந்த படம் ‘மகாமுனி’.சினிமா மட்டுமின்றி பல சின்னத்திரை தொடா்களிலும் நடித்துள்ளாா். தமிழ் தவிர மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளாா். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா். மறைந்த பாலாசிங்கிற்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...