தமிழ் சினிமா 2019: ஏமாற்றிய படங்கள்!
ஒரு படம் நன்றாக இருக்கும் என்று நம்பித்தான் ரசிகர்கள் திரையரங்குக்குச் செல்கிறார்கள். அதுவும் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் என்றால்...


ஒரு படம் நன்றாக இருக்கும் என்று நம்பித்தான் ரசிகர்கள் திரையரங்குக்குச் செல்கிறார்கள். அதுவும் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் என்றால் படத்தின் மீது அவர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வருடம், அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யாத படங்கள் இவை.
1. ஆக்ஷன்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் - ஆக்ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தப் படத்துக்கு இசை- ஹிப்ஹாப் தமிழா. தயாரிப்பு - டிரிடண்ட் ஆர்ட்ஸ். விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்தார்கள்.
அயோக்யா படத்துக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளியான படம் இது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.
இருவர் கூட்டணியும் புதிய அனுபவத்தை அளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, பல சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தும் ரசிகர்களை இந்தப் படம் கவரவில்லை.
2. ஆதித்ய வர்மா

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
முதலில் வர்மா என்று இயக்கினார் பாலா. தனக்குப் பிடிக்கவில்லை என்று அதை முடக்கி வைத்துவிட்டார் தயாரிப்பாளர்.
அடுத்ததாக அதே கதை, ஆதித்ய வர்மா என்கிற பெயரில் அதே கதாநாயகன், அதே இசையமைப்பாளர் தவிர புதிய குழுவுடன் உருவானது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்தார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் நடித்துள்ளார். இசை - ரதன். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஈ4 எண்டர்டெயிண்ட்மெண்ட்.
டிரெய்லர் மூலம் கவனம் பெற்றது இந்தப் படம். கதாநாயகனாக துருவ் விக்ரம் ஜெயித்தாலும் படம் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் தற்போது பாலா இயக்கிய வர்மா படம் இணையத்தில் வெளியாகவுள்ளது.
3. ஐரா

‘ஐரா’ என்பது ஐராவதம் என்கிற யானையாம். பழிவாங்குதலில் இதன் ஞாபகசக்தி அதிகம் என்றெல்லாம் தலைப்பிற்காக அத்தனை மெனக்கெட்டவர்கள், கதை மற்றும் திரைக்கதைக்காகவும் அப்படியே உழைத்திருக்கலாம். பார்வையாளர்களின் ஞாபகத்திலிருந்து உடனே மறையக்கூடிய திரைப்படமாக ‘ஐரா’ ஆகியிருப்பது துரதிர்ஷ்டம்.
தினமணி டாட் காமில் இப்படத்துக்கு இப்படி விமரிசனம் எழுதப்பட்டது.
‘லஷ்மி, மா’ ஆகிய இரண்டு குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம். சர்ஜூன். ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்கிற திரில்லர் திரைப்படத்தையும் ஏற்கெனவே இயக்கியிருக்கிறார். அடுத்ததாக, இந்தப் படத்தை இயக்கி, எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார். மேலும், நயன்தாரா படத்துக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது ஐரா படம். அதேபோல இந்த வருடம் வெளியான கொலையுதிர் காலம் படமும் நயன்தாராவுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
4. தேவ்

சமீபத்தில், கார்த்தி நடித்த ஒரு படமொன்று சுத்தமாக எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தாமல் சென்றது இந்தப் படத்தில் தான்.
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவான படம் 'தேவ்' இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். கார்த்தி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெற்றியடைந்ததால் இந்தப் படத்தின் முடிவு குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள்.
ஆனால் ரசிகர்களையும் கார்த்தியையும் இந்தப் படம் சுத்தமாக ஏமாற்றிவிட்டது. இதன்பிறகு தீபாவளியில் வெளியான கைதி படம் தான் கார்த்திக்கு மீண்டும் கைகொடுத்தது.
5. காப்பான்

இதற்கு முன்பு கே.வி.ஆனந்தும் சூர்யாவும் இணைந்த மாற்றான் படம் தோல்விப் படம் தான். இருந்தும் கே.வி. ஆனந்தின் திறமை மற்றும் கதை மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா. ஆனால் இந்தப் படமும் ஏமாற்றிவிட்டது. முதல் மூன்று நாள்களில் அதிக வசூல் கிடைத்தாலும் படத்துக்குக் கிடைத்த எதிர்மறையான விமரிசனங்களால் வசூலுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
ஆறுதல் தரும் விதமாக, காப்பான் படத்தில் விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்ததற்கும், விவசாயிகளுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்தது. காப்பான் படக் கதாநாயகன் சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்.
6. கடாரம் கொண்டான்

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்தார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தின் கதாநாயகியாக அக்ஷரா ஹாசன் நடித்தார். அபி ஹாசன், லேனா போன்றோரும் நடித்தார்கள். இசை - ஜிப்ரான்.
முதல் படம் தோல்வியடைந்தாலும் இந்தப் படத்தில் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா அட்டகாசம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
7. ஜாக்பாட்

குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஜோதிகா.
ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் நடித்த இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது.
திருமணமாகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஜோதிகா. இதன்பிறகு அவர் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் அவர் நடித்த நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்கள் வெளிவந்தன.
சமீபத்தில், ஜோதிகா நடித்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்று அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி இருந்தன. இந்நிலையில் ஜோதிகா, ரேவதி இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை மிகவும் ஏமாற்றிவிட்டது. ராட்சசி படம் உருவாக்கிய ஒரு கவனத்தைக் கூட இந்தப் படம் ஏற்படுத்தவில்லை.
8. மிஸ்டர் லோக்கல்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் இது. நயன்தாரா கதாநாயகியாக நடித்த இந்தப் படத்துக்கு இசை - ஹிப்ஹாப் தமிழா. ராதிகா, யோகிபாபு, சதீஷ் போன்றோரும் நடித்தார்கள். வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்கள் ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்காததால் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ராஜேஷ் படமாகவும் இல்லாமல் சிவகார்த்திகேயன் படமாகவும் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது மிஸ்டர் லோக்கல். இதனால் இந்தப் படமும் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் போனது.
9. கண்ணே கலைமானே

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் - கண்ணே கலைமானே. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதினார்.
உதயநிதி படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்காது தான். ஆனால், சீனு ராமசாமியின் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. படம் ஓரளவு சுமாராக இருந்தாலும் நினைத்த வெற்றியை அடையவில்லை.
10. என்ஜிகே

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவான படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்தார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.
கடந்த வருட தீபாவளிக்கு வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்ட என்ஜிகே, இந்த வருடம் மே 31 அன்று வெளியானது. எனினும் ரசிகர்கள் விரும்பும் அரசியல் படமாக இல்லாததால் தோல்வியடைந்தது.
இந்தப் படம் குறித்து நடிகர் சூர்யா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்ஜிகே படத்தின் கதையை உருவாக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொண்டார் செல்வராகவன். நான்கு வரைவுகளுடனும் 3 கிளைமாக்ஸ் காட்சிகளுடனும் வந்தார். படத்துக்காகத் தேர்ந்தெடுத்ததைச் சிறந்ததாக நாங்கள் எண்ணினோம். தயாரிப்பாளர், இயக்குநர், நான் என மூவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். மிகவும் நேர்மையாக என்ஜிகே படத்தில் பணியாற்றினோம். படத்துக்குக் கிடைத்த முடிவு என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அதுபோன்ற ஒரு படம் நன்றாக ஓடியிருக்கலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...