தமிழ் சீரியல் உலகில் பல மெகாத்தொடர்கள் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் வெற்றிகரமானவையாகக் கருதப் பட்டிருக்கலாம். ஆனால் அவை எல்லாமும் தொலைக்காட்சி நேயர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்தமானவை என்று சொல்லி விடமுடியாது. சில தொடர்களை பார்க்கத் தொடங்கி அந்தப் பழக்க தோஷத்தில் தினமும் பார்த்துத் தொலைக்கும் பலரை நானறிவேன். இன்னும் சிலரோ, மெகா சீரியல்கள் போரடிக்கையில் சமீபத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ , ‘ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’, ‘வில்லா டு வில்லேஜ்’ போன்ற சென்ஷேசனால விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோக்களுக்கு மாறி விடுகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளின் கான்செப்ட்களில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனாலும் அடுத்தென்ன? அடுத்தென்ன? என்ற ஒற்றைக் கேள்வியால் தூண்டிலிடப்பட்டு அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை திட்டிக் கொண்டோ, பழித்துக் கொண்டோ தினமும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் வெறும் த்ரில்லும், சம்மந்தப்பட்ட போட்டியாளர்களுக்கான சுய விளம்பர வாய்ப்புகள் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றனவே தவிர நிஜ வாழ்வின் அசல் பிரச்னைகள் குறித்த தாக்கம் அவற்றில் கொஞ்சமும் கிடையாது. தினசரி வாழ்க்கையில் பலர் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்னைகளுக்கான எந்தத் தீர்வுகளையும் அவை முன் வைப்பதில்லை.