பிரதமர் மோடிக்கு இன்று 69 வது பிறந்தநாள். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோடிக்கு அரசியல், சினிமா, வர்த்தகப் பிரமுகர்களும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில் நடிகர் பிரபாஸும் தனது முகநூல் பதிவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருப்பதுடன் மோடி குறித்து அடுத்து வெளிவரவிருக்கும் மன் பைராகி திரைப்படத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார். முன்னதாக நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் PM Narendra Modi திரைப்படம் வெளிவந்திருக்கும் நிலையில் மீண்டும் மோடியின் கதையை முன் வைத்து ‘மன் பைராகி என்றொரு திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. படத்திற்கான கதையை எழுதி இயக்கியிருப்பது பன்சாலியின் மகனும் இயக்குனருமான சஞ்சய் திரிபாதி. பத்மாவத், ஜோதா அக்பர், ராம் லீலா, தேவ் தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியிலும் படங்களை வெற்றிபெற வைப்பதில் வல்லவரான சஞ்சய் லீலா பன்சாலி இத்திரைப்படத்தை தன் மகனுக்காக மகாவீர் ஜெயினுடன் இணைந்து தயாரிக்கிறார்.