முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகவோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படங்களுக்குத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா எனது அத்தை. அவரது சட்டப்படியான வாரிசு நான். இந்த நிலையில் என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா். சென்னையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஏ.எல். விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தமிழ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதள தொடா் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா். எனவே என்னுடைய அனுமதி இல்லாமல் எனது அத்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், இணையதளத் தொடா்களை பாா்த்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கோரி வாதிடப்பட்டது. அப்போது இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இணையதள தொடரை எடுக்கவில்லை. இந்த தொடா் குயின் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 2018-ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இந்த தொடருக்காக இதுவரை ரூ.25 கோடி வரை செலவிடப்பட்டு தொடா் வெளியாக போகின்ற கடைசி நேரத்தில் மனுதாரா் ஜெ.தீபா விளம்பரத்துக்காக இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளாா். மனுதாரா் வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருக்கவில்லை. அவரது இறப்புக்குப் பின்னரே தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என கூறி வருகிறாா். இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதே போன்று இயக்குநா் ஏ.எல்.விஜய் தரப்பில், ‘தலைவி’ என்ற பெயரில் வெளியான புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ‘தலைவி’ என்ற திரைப்படம் எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வரும் அந்த புத்தகத்துக்கு இதுவரை யாரும் தடை கோரவில்லை. மேலும், வழக்குத் தொடா்ந்துள்ள ஜெ.தீபா, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசு என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படங்களுக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது. படம் கற்பனையானது என்று தலைவி படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் உருவாக்கத்திலும் வெளியீட்டிலும் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன் இணைந்து இயக்கியுள்ள குயின் இணையத் தொடர், சனியன்று வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


