படங்கள் சரியாக அமையாத நிலையில் இடையில் பிரஷாந்துடன் ‘காதல் கவிதை’ என்றொரு படத்தில் காதல் கோட்டை ஹீராவை ஞாபகப் படுத்தும் கதாபாத்திரமொன்றில் கிளாமராக நடித்துப் பார்த்தார். தமிழ் ரசிகர்களுக்கு கஸ்தூரியை அத்தனை கிளாமராகப் பார்க்கப் பிடிக்கவில்லை என்பதா? அல்லது கஸ்தூரிக்கு கிளாமர் ஒத்து வரவில்லை என்பதா? ஏதோ ஒன்று சறுக்கியதில் அப்படியான வேடங்கள் அவருக்குப் பொருந்தவில்லை. நடுவில் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலுமாகத் தன்னை துண்டித்துக் கொண்டு திருமணம், குழந்தை என்று நிம்மதியாக இருந்தார். பின்பு மீண்டும் சினிமா ஆர்வம் மேலெழ தமிழிலும், தெலுங்கிலுமாக வடகறி, டான் சீனு உள்ளிட்ட சில படங்களில் அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடித்தார். மீண்டும் ஒரு சின்ன பிரேக்... காரணம் கஸ்தூரிக்கு அண்ணி, அக்கா வேடங்களில் நடிப்பதில் சிக்கல்கள் இல்லை. ஆனால் சிலர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, போன்றவர்களுக்கு அம்மாவாக நடிக்க முடியுமா? என்று கேட்டு வந்ததில் கஸ்தூரிக்கு விருப்பமில்லை. ஏன் என்றால் 5 வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கு தான் தயார், ஆனால் வளர்ந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் இப்போதைக்கு தனக்கு விருப்பமில்லை என்கிறார்.