‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காக்கா முட்டை - விமரிசனம்

படம் வெளியிடப்படும்முன் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்ற ‘காக்கா முட்டை’ இரண்டு தேசிய விருதுகளையும் வென்றிருக்கின்றது. தவிர தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவருமே தேசிய விருது வென்றவர்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:43 am

உமா ஷக்தி.

படம் வெளியிடப்படும்முன் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காக்கா முட்டை’ இரண்டு தேசிய விருதுகளையும் வென்றிருக்கின்றது. தவிர தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவருமே தேசிய விருது வென்றவர்கள். அவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அப்படி என்ன இந்தப்படத்தில் இருக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, படம் பார்த்தபின்னர் காத்திருந்ததன் திருப்தியை முழுவதும் தந்த திரைப்படம் இது.

இரண்டு சிறுவர்கள், அவர்களின் அம்மா, வயதான ஆயா மற்றும் ஜெயிலில் இருக்கும் அப்பா, பக்கத்து வீட்டுச் சிறுவர் சிறுமிகள், அவர்களின் நண்பரான மத்திய வயது பழரசம், . இவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே காக்கா முட்டை. படம் ஆரம்பித்த அரை மணி நேரம் சிறுவர்களின் அப்பாவித்தனமும், தினமும் பத்து ரூபாய் சம்பாதிக்க அவர்கள் படும்  போராட்டமும் காட்சிப்படுத்தப்படுகிறது. பையன்களுக்கு அவர்களின் ஆயாவிடம் ஒட்டுதல் அதிகம். தினமும் கோழிமுட்டை வாங்கிக்கொடுக்க இயலாத ஏழ்மை நிலை. ஆயா அவர்களை காக்கா முட்டை குடிக்கச் சொன்னதால் காக்காவுக்கு கொஞ்சம் சோறு வைத்து அதன் கவனத்தைத் திசை திருப்பி, மரத்தில் ஏறி முட்டைகளை எடுத்து குடிப்பார்கள். இப்பழக்கம் வெகுநாட்களாக அவர்களுக்கு இருப்பதால் அதுவே பட்டப் பெயர்களாகி அண்ணன் (விக்னேஷ்) பெரிய காக்கா முட்டை என்றும் தம்பி (ரமேஷ்) சின்ன காக்கா முட்டை என்றும் அவன் வாழும் குடிசைப்பகுதி சிறுவர்களால் அழைக்கப்படுகிறார்கள். அந்தப்பெயர்களால் அவர்களுக்கே பெருமை தான். அவ்வப்போது அம்மா (ஐஸ்வர்யா) காக்கா முட்டை குடிப்பதற்காக கண்டிக்கும் போதும் அவர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. தினமும் சாக்குப் பையை எடுத்துக் கொண்டு ரயில்பாதைகளில் கூட்ஸ் வண்டியிலிருந்து சிதறி விழும் கரிக்கட்டிகளைப் சாக்குப் பையில் பொறுக்கி, அதை கடையில் எடைக்கு எடைப்போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அழுக்கு உடை, பரட்டைத் தலை, உழைக்கும் சின்னஞ்சிறிய கரங்கள் ஆனால் சிரிப்புக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களுக்கும் பஞ்சமில்லை. வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் பால்யத்துக்கே உரிய அத்தனை விஷயங்களுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பள்ளிக்குப் போவதை அன்றாடப் பிழைப்பிற்காகவும் அப்பா ஜெயிலிலிருந்து விடுதலை ஆவதற்கான பணத்தை சம்பாதிக்க வேண்டிய சூழலாலும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அம்மா கொடுக்கும் சோறு குழம்பை சாப்பிட்டு கரி பொறுக்கி வந்தபின், அவளுடன் மீன்பாடி வண்டியில் ஏறி அப்பாவைப் பார்க்க ஜெயில் வரை செல்கிறார்கள். அப்பாவுக்கு டிபி நோய் தாக்கியிருப்பதால் தனிச் சிறையில் அடைத்துள்ளார்கள். அப்பாவின் குரலை மட்டுமே கேட்க முடிகிறது. செல்ஃபோன் வாங்கித் தா என்று அவரிடம் உரத்த குரலில் கேட்பதும், எனக்கு டிவி தான் வேணும் அப்பா வேண்டாம் என்று சிறுவர்கள் சொல்வதும் வாழ்க்கையின் குரூரம், விரும்பியதை அடையவே முடியாத நிலை இளம் வயதிலேயே அவர்களுக்குப் புரிந்தும் அதை ஏற்க மறுத்து, எப்பாடு பட்டாவது அதிலிருந்து மீள வேண்டும் என்ற வேட்கையும் தான் இப்படத்தின் மையக் கருத்தாக இழையோடுகிறது. அவர்கள் வாழும் குடிசைப்பகுதியின் மிக அருகில் திறக்கப்படும் பெரிய பீட்ஸா கடையைப் பார்த்து மலைத்துப் போய்விடுகிறார்கள். அந்தக்கடை பெரும் ஆரவாரத்துடன் நடிகர் சிம்புவால் திறந்து வைக்கப்பட்டதைப் பார்த்த நொடியிலிருந்து சிறுவர்களுக்கு பீட்ஸா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. அம்மா ரேஷன் கடையிலிருந்து இலவசமாக வாங்கி வந்த டிவியில் பீட்ஸா விளம்பரம் வேறு அடிக்கடி காட்டப்படுவதால் அவர்களின் வாய் ஊறுகிறது, இளம் மனங்களில் அந்த பீட்ஸாவின் ருசி எப்படி இருக்கும் சாப்பிட்டே ஆக வேண்டும் அந்த ஆசை ஆழமாகிவிடுகிறது. அம்மாவிடம் கேட்க அவள் எரிச்சலுடன் மறுத்துவிடுகிறாள். இருவரும் எப்படியாவது தாங்களே பணம் சேர்த்து வைத்து அதை வாங்கி சாப்பிட முடிவு செய்கிறார்கள். பீட்ஸா விளம்பர பேப்பரைக் கையில் எப்போதும் வைத்துக் கொண்டு அதன் விலையான முன்னூறு ரூபாயைச் சம்பாதிக்க அதிகப்படியான வேலை செய்கிறார்கள். அவர்கள் பீட்ஸாவுக்கான பணம் சேர்த்துவிட்டாலும் அதை சாப்பிட முடிந்ததா அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக இயல்பான திரைப்படமாகத் தந்திருக்கிறார் மணிகண்டன்.

சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள், மேடு பள்ளங்கள் ஏழை பணக்கார வித்யாசங்கள் இவை யாவும் காலகாலமாக இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இவற்றைக் கண்டும் காணாமல் போகும் நடுத்தர மக்கள், காணவே விரும்பாத பணக்காரர்கள், மனிதர்களை ஓட்டு இயந்திரகளாக மட்டும் கருதும் அரசியல்வாதிகள், எல்லை மீறி வருபவர்களின் கழுத்தைப்பிடித்து வெளித்தள்ளும் அதிகாரவர்க்கம், பூர்ஷ்வாக்கள், எந்த சம்பவமும் நிகழாதவரை அவர்களின் இருப்பை அலட்சியம் செய்யும் ஊடகங்கள், என அத்தனை வகையான மக்கள் பிரிவையும் வெவ்வேறு விதமாக காண்பித்துள்ளார்கள். சுடும் நிஜங்களை தன் நிழப்படத்தில் வாரிச் சுருட்டியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். போகிற போக்கில் காண்பிக்கபட்டாலும் சில காட்சிகள் மிகவும் ஆழமானவை. பொம்மை வாட்ச் அணிந்திருக்கும் சிறுவர்களிடம் கம்பிக்கு வேலியால் தடுக்கப்பட்ட அப்பார்மென்டின் மறுபக்கத்தில் (வர்க்கபேதத்தை இதைவிட நுட்பமாக எப்படி காண்பிக்கமுடியும்) இருக்கும் சிறுவன் தன்னுடைய எலக்ட்ரானிக் வாட்சை காண்பித்ததும் சின்ன காக்கா முட்டை தன்னுடைய டாய் வாட்சை எப்படியாவது ஓட வைத்துவிடவேண்டும் என்று கடைக்காரரிடம் கொடுப்பதும் பெரிய காக்கா முட்டை எதார்த்தத்தைச் சொல்லி அது ஓடாது என்று சொல்லியும் சின்னவன் அதை நம்ப மறுப்பதும் நுட்பமான ஒருகாட்சி. ஆசை என்பது எல்லோருக்கும் பொது.  மனித மனங்களை செலுத்திக் கொண்டிருப்பது ஆசைதான். வாழ்தல் இனிது என்று சொல்பவர்கள் சகல வசதிகளும் உடையவர்களே. ஆனால் ஒவ்வொரு நாளும் உழைத்துப் போராடும் மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு நாள் உணவு என்பது கூட கனவுதான். சமூகம் அவர்களுக்குவைத்த பெயர்கள் வக்கற்றவர்கள், அன்றாடம் காய்ச்சிகள், சேரி ஜனங்கள். ஏழைகள் என்றால் அழுக்கானவர்கள், அவர்களிடம் நேர்மை இருக்காது என்பது போன்ற பொதுப்புத்தியை நுட்பமாகப் பகடி செய்கிறது இப்படம்.

சிறுவர்களுடன் பழரசம் என்று அவர்கள் அழைக்கும் ஒரு ரயில்வே துப்புறப் பணியாளரிடம் இருக்கும் நட்பு நெகிழ்ச்சியான தருணங்களை திரையில் மட்டுமல்ல காண்பவர் மனங்களிலும் உருவாக்குகின்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். உதாரணமாக சிறுவர்கள் கரியை எடைப்போடும் பழைய சாமான்கள் விற்பனைக் கடையின் ஓனரம்மா. அவளின் குடிகார கணவன். ஏரியாவில் சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் இருவர் கூட்டணி படத்தை கலகலப்பாகுகிறார்கள்.  சிறுவர்களின் அம்மாவாக நடித்துள்ள ஐஸ்வர்யா, ரமேஷ், பாட்டி சாந்திமணி, பாபு ஆண்டனி, கிருஷ்ணமூர்த்தி, ஜோ மல்லூரி என எல்லோன் பங்களிப்புமே ஒவ்வொரு காட்சியையும் உயிர்ப்பூட்டுகிறது.

பசுமையான மரம் வெட்டப்படுவது, அதே இடத்தில் நவீன வாழ்க்கையின் அடையாளமாக ஒரு பீட்ஸா கடை கட்டப்படுவது, இயற்கையிலிருந்து விலகிக்கொண்டிருக்கும் மனித வாழ்வின் சிக்கல்களை பின்புலத்தில் சொல்கிறது இத்திரைப்படம். ஒரு கட்டத்தில் சிறுவர்களின் பாட்டி இறந்தபோக, அம்மா மகன்கள் போட்டிருந்த புதிய ஆடைகளைக் கழற்றி காலில் மிதிக்கிறாள், பெரியவன் இத்தனை நாட்கள் ஆசையுடன் பாக்கெட்டில் வைத்திருந்த பீட்ஸா விளம்பரப் பேப்பரை தூர எறிகிறான் அது தண்ணீரில் விழுந்து அப்படியே சாக்கடையில் போய்க் விழுந்து மறைகிறது உண்மையில் படத்தின் இறுதிக் காட்சி இதுவாக இருந்திருக்க வேண்டும். இங்கேயே படம் முடிந்துவிடுகிறது. சர்வதேசப் புகழ்ப்பெற்ற சில்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் இந்தக்காட்சியின் எதார்த்தமும் அழுத்தமும் காண்பவரின் மனதைப் பிசையும் விதம் அமைந்துள்ளது.

படத்தின் இன்னொரு சிறப்பு இறுதிக் காட்சிவரை சிறுவர்களின் பெயர்கள் என்னவென்று யாருக்கும் தெரிவதில்லை. அடையாளம் எதுவும் இல்லாத ஏழைச் சிறுவர்கள் நம் தேசம் முழுவதும், உலகம் முழுவதும் அலைந்து திரிகிறார்கள். அவர்களின் பெயர் யாருக்கு முக்கியம்? இந்த நிதர்சனத்தை சொல்லாமல் சொல்கிறது  நிஜத்தை அதிக வலியின்றி, குரூரமாக கன்னத்தில் அறையாமல், நின்று நிதானமாக வெகு இயல்பாகச் சொல்லும்வகையில் அசலான ஒரு சினிமாவைப் படைத்துள்ளார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இயக்கிய குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.மணிகண்டனுக்கு இது முதல் திரைப்படம் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கலாபூர்வமாக இப்படத்தை அணுகியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பு படத்தில் தேவையான அளவுக்கு ஒலிக்கிறது. தேவையற்ற காட்சிகள் என எதுவுமே இல்லாது இயல்பான நீரோட்டத்துடன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத வகையில் கிஷோரின் படத்தொகுப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகியிருக்கிறது. படத்தை இயக்கியதுடன் ஒளிப்பதிவாளரும் மணிகண்டன் தான். சேரியின் டாப் ஆங்கிள் காட்சிகள், வேகமாக கடக்கும் ரயில்கள், இரைச்சலுடன் இருக்கும் தெருக்கள், குடிசைப் பகுதியின் ஆன்மாவையே படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அதுவும் சின்ன காக்கா முட்டையின் அப்பாவித்தனமான சிரிப்பும், அவன் கண்களும், இயலாமையில் சிறுவர்கள் தவிக்கும் போது அவர்களின் உடல்மொழியையும் காட்சிப்படுத்தியுள்ள விதம் அருமை. அபாரமாக நடித்துள்ள சிறுவர்கள் ரமேஷ் விக்னேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தைத் தங்கள் இயல்பான நடிப்பால் தூக்கிய நிறுத்தியவர்கள் அவர்கள்தான். ஒரு காட்சியில் கூட தொய்வு இல்லை. பார்வையாளனைக் கதைக்குள் இழுத்துச் செல்லும் கலை அத்தனை சுலபமல்ல. அதுவே இந்தப் படத்தின் பக்கபலம்.

கனடாவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.  ரோம், துபாய் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் பங்கேற்றது. பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இத்திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. மேலும் பல விருதுகளையும் வெல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விருதுகளை எல்லாம் விட படத்தின் வெற்ற்ீ கடைகோடி ரசிகர் வரை அனைவரின் கவனத்தை கவர்ந்து ஒட்டுமொத்த பாராட்டைப் பெறறுள்ளது. இதைவிட ஒரு இயக்குனருக்கு வேறென்ன வேண்டும்?  ஒரு அசலான தமிழ்ப்படம் ’காக்கா முட்டை’  என்றால் மிகையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.